உணர்ச்சிகள் தடுமாறும்

காதல் கவிதையைப் போல

அங்கபங்கமாய் நுழைந்து

உழலும் தடுமாற்றத்திற்குள் விழ

ஆதாம் கடித்த ஆப்பிளைத் தாண்டி

வந்துவிட்டடேன் நெடுந்தூரம்..

வா கண்ணே !

இழாக் ப்ரெவெரின் 

ஆரஞ்சுப் பழம் நீ

மழைத்தூறல்

வாகை மரத்தின் தளிரில் 

பட்டுத் தெரிக்கும்

துளியின் குளிர்ச்சி

சரியாக உன் முத்தத்திற்கு 

வெகு அருகாமையில் நின்றுகொண்டிருக்கிறேன்.

காத்திருப்பேன்

வராத டவுன் பஸ்ஸிற்கு

கால்கடுக்க காத்திருக்கும்

அனிதாக்களில் ஒருத்தியாக

விதையற்ற பூவன்பழத்திற்கு

வியாக்கியானங்கள் எதற்கு

சுவையும் தித்திப்பும்

குறையப்போவதில்லை...

உன் நினைவுகளைப் போல

நினைவுகளொரு எலுமிச்சை மரம்

நினைவுகளோடு வாழ்தல் என்பது

பழங்கள் மிகுந்து உதிர்ந்துகிடக்கும்

மரத்துக்குச் சொந்தக்காரன்

லெமன் டீ பருகியதில்லை...

பூவரசம் பூக்களை

மாநகர் ஈராயிரக் குழவிகளில்

அறிந்தவர் குறைவு

உன் வீதி நெடுக கொட்டிக்கிடக்கும்

மஞ்சள் இலைகள்

மலர்ந்து கூம்பிய மலர்கள்

உன் வருகை

இளவேனிற்காலத்தின் துவக்கம்...

வாகைப் பூக்கள் உதிர உதிர

நான் அதிர அதிர

உன் உதடுகள் ஒத்திய

முத்தத்தின் வருகை

மாநகரின் இரைச்சல் நடுவே கேட்கும்

குயிலின் கூவல்...

நான் தனித்திருந்தேன்

சொற்கள் சொல்ல முயன்று தோற்கும்

உடல்களின் தீராத உரையாடலின்

கதகதப்பில் ஊடாடுகிறது நம் காதல்...

- கவிஞர் சூ. சிவராமன்