மண்ணோடு பொன்னை அல்ல
பெண்ணோடு உன்னை அல்ல
உனை நீயாக
ஒரு முறை அணிந்து
அவிழ்த்த ஆடையை
மறுமுறை அணிய
யாரும் மறுப்பதில்லை
உனை ஆடையாக
பொருந்திப் பார் !
பொருந்தாத செருப்பானாலும்
அதை அணிந்தாவது பார்ப்பார்கள்
உனை செருப்பாக
பொருந்திப் பார்!
எந்தக் காற்றும்
உரசாமல் செல்வதில்லை
உரசிய அதை
கண்டுக்க யாரும்
முயன்றதில்லை
உனை காற்றாக
பொருந்திப் பார்!
தரம் பார்த்து
யாரையும் சுமப்பதில்லை
அந்தப் பேருந்து படி
உனை பேருந்து படியாக
பொருந்திப் பார்!
சோறு எவ்வளவு
சூடாக இருந்தாலும்
அதை தாங்கும்
அன்னக் கரண்டிக்கு
சூடு சுரணை
இருந்ததில்லை
உனை அன்னக் கரண்டியாக
பொருந்திப் பார்!
தன்னைத் தட்டி விடுவார்கள்
என தெரிந்தும்
பாதத்தில் ஒட்டி விடுகிறது
அந்தக் கடற்கரை மண்
உனை கடற்கரை மண்ணாக
பொருந்திப் பார்!
மெதுவாக வருபவருக்கும்
தடையாகத் தான் இருக்கிறது
இந்த வேகத்தடை
உனை வேகத்தடையாக
பொருந்திப் பார்!
வெண்மை என – பால்
பெருமையடித்து கொள்ளும்
கெட்டுவிட்டால் – அது
குப்பைக்கு தான் செல்லும்
உனை பாலாக
பொருந்திப் பார்!
காத்தாடி பழுதானாலும்
இருப்புக் கடைக்கு - அது
விலையாக போகிறது
உனை காற்றாடியாக
பொருந்திப் பார்!
யார் வஞ்சம் கொண்டு
நீவினாலும் – பூனை
அதை மீண்டும் எதிர்பார்க்கும்
உனை பூனையாக
பொருந்திப் பார்!
பேனாவின் மதிப்பு
அதன் மை தீரும்
வரைதான்
உனை பேனாவாக
பொருந்திப் பார்!
கத்தி
யார் பிடித்தாலும் கீறும்
பிடிப்பவர் பொறுத்தே – அதன்
தலையெழுத்து மாறும்
உனை கத்தியாக
பொருந்திப் பார்!
துணிந்தே வெண்மை
அணிகிறார்கள்
அரசியல் சாக்கடையில்
விழுவதற்கு
உனை சமூக நிலையில்
பொருந்திப் பார்!
முடி திருத்தம் கடையின்
கத்தரிக்கோள்
சாதி மையிரைப் பார்த்து
வெட்டுவதில்லை
உனை கத்திரிக்கோளாக
பொருந்திப் பார்!
பதாகைகள் பாழாகிறது
சமூகம் பேசும்
அரசியல் வாதிகளால்
உனை பதாகை நிலையில்
பொருந்திப் பார்!
- கவிஞர் மடையன் (அப்துல் ரசாக்)

0 Comments