அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்து ஆலமரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்.
புதிதாக வந்த அவரது வருகை அந்த ஊர் மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவரை வேடிக்கைப்பார்க்க சிலரும் வந்து போயினர். சிலபேர் வீட்டிலிருந்துஉணவு சமைத்து எடுத்து வந்து அவருக்குக் கொடுத்து அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுச் சென்றனர். அந்த முனிவரும் மாலை நேரங்களில் அங்கு வரும் மக்களுக்கு அருளுரை வழங்க ஆரம்பித்தார்.
அன்று பௌர்ணமி இரவு, அவரிடம் அருள்வாக்குக் கேட்கவும் ஆசி பெறவும் திரளான மக்கள் ஒன்று கூடினர். அன்றைய தினம் மனித வாழ்க்கையைப் பற்றி விளக்கிக் கூறினார். அவர் கூறியதைக் கேட்கலாம்.
பதினைந்து வயது முதல் இருபத்திநான்கு வயது வரை மனிதன் தீப்பெட்டியாக இருக்கின்றான். இருபத்தைந்து வயது முதல் முப்பத்தைந்து வயது வரை மனிதன் நகைப்பெட்டியாக இருக்கின்றான். முப்பத்தாராம் வயது முதல் அறுபதுவயதுவரை இரயில் பெட்டியாக இருக்கின்றான். அறுபத்தியோராம் வயதிலிருந்து சவப்பெட்டியாக வாழ்கிறான். கடைசியில் மனிதன் மண்பெட்டியில் அடங்கிப் போகிறான் என்று கூறி என்ன நான் சொல்வது புரிந்ததா? என்று கேட்டார்.
எல்லோரும் புரியவில்லை என்று குரல் எழுப்பினர். பின்னர் அதற்கான விளக்கத்தினைக் கூற ஆரம்பித்தார்.
தீக்குச்சியால் உரசப்படுவதுதான் தீப்பெட்டி வாழ்க்கையில் பதினைந்து வயதுமுதல் முப்பத்தினான்கு வயதுவரை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளைப் படி, படி என்று உரசுகின்றார்கள். அதற்காகவே படிக்கின்றார்கள்.
படிப்பு போக பல நேரங்களில் பிள்ளைகள் செல்போனை வைத்துக் கொண்டு தினந்தோறும் அதைப் பார்க்கணும் , இதைப் பார்க்கணும் என்று விரலால் தேய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்து இளம் வயதில் காதல் எனும் உரசு வேறு கண்ணுக்குத் தெரியாமல் நடைபெறுகின்றது. அது எங்கிருந்து எப்போது எந்த உருவில் வருகின்றது, எப்போது வரும் என்ற தெரியாது. ஆனால் அது அடிக்கடி காதலனையும் காதலியையும் உரசிக்கொண்டேயிருக்கும்.
அடுத்து இருபத்தைந்து வயது முதல் முப்பத்தைந்து வயது வரை நகைப் பெட்டி கல்யாணத்திற்கு நகைகள் வாங்கி பாதுகாக்கின்ற நேரமிது. அதோடுகல்யாணத்திற்கு சீர்வரிசை வரதட்சிணை என்று நகை நடமாடும்வயதிது. புது மனைவியை யாரும்பார்த்து விடக் கூடாது என்று பத்திரமாகப் பொத்திப் பொத்தி வைத்திருப்பான் கணவன்.
குழந்தை பிறந்ததும் அதைப் பத்திரமாக மார்போடு அணைத்து முத்தம் கொடுத்து கையிலேயே வைத்துக் கொள்வாள் தாய். புது வாழ்க்கை, புது வீடு, புது மகிழ்ச்சி, புது கார், புது உறவுகள் வாழ்க்கையில் குதுகலிக்கும். நகைபோல தகதக என்ற மின்னிக் கொண்டிருக்கும் வாழ்க்கை. எல்லாம் இந்தக் காலத்தில் தான் சிறப்பாக அமையும்.
முப்பத்தியாறு வயது முதல் அறுபது வயது வரை இரயில்பெட்டி காலம், வேலைக்குப் போகணும், வீட்டிற்கு வரணும், சமைக்கணும். சமைத்ததைச் சாப்பிடணும். மாடாய் ஒழைச்சி ஓடாய் தேய்கின்ற இயந்திர வாழ்க்கை இது. மொத்த குடும்பத்தையும் இரயில்பெட்டி மாதிரி இங்கும் அங்கும் இழுத்துக்கொண்டே போகணும், இழுத்துக் கொண்டே வரணும்.
அறுபத்தியோரு வயதிலிருந்து வாழும் கடைசிக் காலம் வரை சவப்பெட்டிப் பணி ஓய்வு பெற்ற காலம். 'பெரிசே வயசாயிடுச்சில்ல ஏதாவது ஒருமூளையில குந்தனுமா, காெடுக்கிறத சாப்பிட்டமா,காலத்த ஓட்டனுமான்னு இருக்கணும் என்று ஒதுக்கப்பட்டு மரிக்கும் வரை வாழ்க்கையை ஓட்டும் காலம் இது.
கடைசியில் இறந்த பிறகு சவப்பெட்டியில் உறங்கும் மனிதனைத் தன்னுள் அடக்கிக் கொள்வது மண்பெட்டிதான். மற்றப் பெட்டிகள் கூட ஆளுக்கு ஆள் மாற்றம் ஏற்படலாம்; ஆனால் மண்பெட்டி எல்லோருக்கும் பொது, நீ எந்த ஜாதியாக இருக்கலாம் எந்த மதமாக இருக்கலாம். எந்தக் குலமாக இருக்கலாம். எந்தக் கோத்திரமாக இருக்கலாம். எப்படியெல்லாமலோ வாழ்ந்திருக்கலாம்.
எனக்கு எல்லபோரும் ஒன்றுதான் என்று நம்மை விழுங்கி ஏப்பம் விடுவதுதான் மண் பெட்டி.
எனவே நிரந்தரமில்லாத இந்த உலக வாழ்க்கையில் பற்று வைப்பதைவிட கடவுள்; மீது பற்று வைத்து அவனிடமே அடைக்கலம் புகுந்து அவனோடு ஐக்கியமாகி, நல்லவர்களாக வாழப் பழகுவோம் என்று கூறி தனது சொற்பொழிவை முடித்தார் முனிவர் அதைக் கேட்ட அனைவருக்கும் வாழ்க்கையின் தத்துவம் புரிய ஆரம்பித்தது.
இஸ்லாம் மனித வாழ்க்கையை இறைவனின் அருட்கொடையாகவும் ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாகவும் கருதுகின்றது. உலகம் என்பது மறுமை வாழ்விற்கான தேர்வுக் களமாகும். இங்கு நேர்மை, நீதி, மனித நேயம் மற்றும் இறைவழிபாட்டுடையவனாக வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதே மனித வாழ்க்கையின் மிக முக்கிய இலக்ககும் என்பதை நாம் உணர வேண்டும்.
இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகள் மட்டுமல்ல அதுதனிநபர் ஒழுக்கம், சமூக உறவுகள், பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கை முறையாகும்.
இஸ்லாம் கூறும் மனித வாழ்க்கை என்பது இப்பூமியில் இறைவனின் பிரதிநிதியாக (கலீபா) கண்ணியத்துடன் வாழ்ந்து தீயவற்றிலிருந்து விலகி நற்செயல கள் மூலம் மறுமையில் மோட்சத்தை அடைவதாகும். உங்களுக்கு வாழ்க்கைத் தத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்மையே செய்வோம். நல்லவர்களாக வாழ்வோம்.
- பாவலர் அல்போன்ஸ் மோசஸ்

0 Comments