எனக்கென்னங்க! கை நிறைய சம்பாதிக்கிறேன்! அடுக்குமாடி வீட்டில குடியிருக்கேன்! விலை உயர்ந்த வாகனங்கள் வச்சிருக்கேன்! நவீன வசதிகளோட நான் நல்லா தானே இருக்கேன் எனப் பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். சில நேரங்களில் நமக்கும் அதுபோல அமையவில்லையே என ஏங்கியும் இருப்போம்.
அந்த நேரத்தில் நம்முடைய தற்போதைய ஏழ்மையான வாழ்க்கை வெறுப்புற்று போகும். என்ன செய்வது எல்லாம் இறைவன் விட்ட வழி காலம் செய்யும் கோலம் எனச் சொல்லி நமக்கு நாமே ஆறுதல் படுத்திக்கொள்வோம்.
உங்களுக்கு ஒரு வியப்படையும் விடயத்தைச் சொல்லட்டுமா? அத்தகைய பணக்காரர்களை விட ஏழையாக வாழ்வதே செல்வம் என்பேன்.
இதனைப் படிக்கும் போது என்னை நீங்கள் முட்டாள் என யோசிக்கலாம். பின்வரும் வள்ளுவரின் குரலோடு நம் அன்றாட வாழ்வியல் மற்றும் அது குறித்து இடம்பெற்ற விளக்கம் உங்களின் கருத்தில் மாற்றம் ஏற்பட செய்யலாம் என நம்புகிறேன்.
முதலில் செல்வம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். வெறும் பணமும் நகையும் மாட மாளிகைகள் மட்டுமல்ல, நிம்மதியான தூக்கம், நினைத்தவைகளை எல்லாம் சாப்பிடுவது, நலமான ஆரோக்கியம் ஏங்கும்போது தாங்கும் துணைகள் இவைகள் தான் முதல் செல்வம்.
" அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. “ (குறள் 45)
எத்தனையோ செல்வந்தர்கள் வீட்டிற்கு சென்று இருப்போம். அங்குத் தாய் தந்தை ஓர் அறையிலும், அவர்கள் பெற்றெடுத்தவர்கள் ஓர் அறையிலும், அவர்களை பெற்றெடுத்தவர்கள் இன்னொர் அறையிலும் என படுக்கையில் மட்டுமல்ல பந்தத்திலும் தனித்தனியே இருப்பதனை நாம் காணலாம்.
“ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். “ (குறள் 71)
தான் பெத்த பிள்ளை எதனை விரும்பி சாப்பிடும் என்று கூட அவனது தாய் தந்தைக்குத் தெரியாது மாடமாளிகை முழுதும் சமையல்காரியின் சமாரஜ்யமே, மறுபுறம் ஒடிந்த குடிசைக்குள்ளே கச்சுக் கட்டி வாழ்ந்தாலும் மீன் குழம்பு தான் என் புள்ளைக்கு உசுருனு சொல்லுவா அந்த ஏழைத்தாய் ! அவ்வாறிருக்க வெறும் பணமும் நகையும் வைத்து என்ன பயன் ?
“ மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. “ (குறள் 65)
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்க செல்வந்தரின் மகனைத் தூக்கிக் கொண்டு செல்லும் வேலைக்காரியிடம் எவ்வளவு செலவானாலும் நான் தரேன் என் மகனைக் காப்பாத்திரு என சொல்பவர்கள் மத்தியில் நீ எதுக்கு கவலபடாத ராசா நாலுபேர் கைகால பிடிச்சாவது காசுகட்டி உன்னை காப்பாதிடுவேன் என மகனின் இரு கைகளையும் பிடித்து ஆறுதல் சொல்வாள் ஏழைத்தாய்.
“ இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். “ (குறள் 946)
வீடு முழுதும் பர்மா தேக்கு பாரசீக கண்ணாடி, அரபு நாட்டு அலங்காரம், சுவரெங்கும் கலைவண்ணம் அடுப்பாங்கரை முழுதும் அளவிட இயலாத உணவு வகைகள் மற்றும் திண் பண்டங்கள் இருப்பினும் உடல்நல குறைவால் அறை சப்பாதி மற்றும் கால் குவளை பால் மட்டுமே சாப்பிட அனுமதி என்பது மருத்துவர் கட்டளை இவ்வாறிருக்க உழைத்துக் களப்பார பாய் கடை பிரியாணி வாங்கி வயிர் நிறைய சாப்பிட்டு பன்னீர் சோடாவும் குடித்து மீத முப்பது ரூபாய் இரவு சாப்பாட்டுக்கென்று எடுத்து வைத்த கூலி தொழிலாளி மறுபுறம்.
“ அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். “ (குறள் 333) :
கோடான கோடி பணமும் வரவிற்கேற்ற செலவும் கொண்ட செல்வந்தரின் சந்தை மெதுவாக சரியத் தொடங்குகிறது. கணக்கு கேட்டால் அது இது என சொல்லி மளுப்பும் கணக்காளர் மற்றும் ஊழியர்கள். அன்றாடம் சோற்றுக்கு அல்லாடும் குடும்பத்தில் பிறந்த மகன் தான் கற்ற கல்வியால் உயர்ந்து அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகி இருக்கிறான். வெறும் நூறு ரூபாய்க்கு கூலி வேலை பார்க்கும் தொழிலாளி மகனாகப் பிறந்து அதிகாரியாகி இன்று பல ஆயிரங்கள் சம்பாதித்தும் அதனை சரிவர கணக்கு பார்த்து வரவுக்கேற்ற செலவும் , செலவுகேற்ப வரவும் என தனது கல்விப் புலமையால் வகுத்து வாழ்கிறான்.
“ அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. “ (குறள் 841)
பொருளீட்டல் என்பது அத்தியாவசியமானது மறுக்க இயலாதது இருப்பினும் சற்று தெளிவடைய வேண்டும். நிலையான செல்வம் என்பது கல்வி, அறிவு, மக்கள் மற்றும் உறவுகள் இவைகளே!.
வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வள்ளுவத்தின் வழி நின்று விளக்கிய இவைகள் யாவும் வாசகர்களின் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்பட செய்யும் என்று நம்புகிறேன்.
- மு. முஹம்மது சுஹைப்

0 Comments