Nagore Puranam
'அப்பா ' | கவிதாயினி ர. குப்பு | May 2026

'அப்பா ' | கவிதாயினி ர. குப்பு | May 2026


'அப்பா '-அனைத்து உணர்வுகளும் அடங்கிய பெட்டகம்.

'பயம்'-அறிந்ததே உன் அதட்டலில்தான்

இன்று புரிகிறது 'உன் சூழல்'

அறம் மீறுகிறாய் என ஆத்திரமுற்றேன்

இன்று அறிகிறேன் 'உன் நியாயம்'

அன்பாய் நெருங்கியபோதெல்லாம்

அலட்சியம் செய்தாய்! ஆத்திரத்தில்

அனுதினமும் உன்னுடன் சண்டையிட்டேன்

இன்று அன்பாய் இருக்க ஏங்குகிறேன்,

நீ கூட அன்பை வெளிப்படுத்தி இருக்கலாம்!

என் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்திருக்கும்

அப்பாவின் வெளிக்காட்டா அன்பு

அழியாத ஒரு முத்திரை என்றும்!

என் சிறு வெற்றியில் மகிழ்ந்து

ஊருக்கெல்லாம் இனிப்பளித்தாய்

விவரமறிந்து இன்பத்தில் திளைத்தேன்!

இன்று வரை ஏக்கமுண்டு உன் அரவணைப்புக்காக...

அன்று ஒரு நாள் இரவு

மான்போல் துள்ளினேன்

தெருக்கூத்து காண்கின்ற களிப்பில்

அறியவில்லை பரிதி சென்று நிலவு வந்ததை

அம்மா அழைப்பாள் என

வீட்டிற்கு விரைகையில் வழியில்

அலறி அடங்கினேன் ஆந்தையைக் கண்டு

'ஆந்தை' அதுதான் என அறியாப் பருவம்

அரவணைத்து உன் தோளில் தூக்கிச் சென்றாய்

இன்றுவரை தொடர்கிறது அந்நினைவு

இடையறாது ஒலிக்கும் மனதின் இசைபோல!

நீயும்

ஒருநாள் என்னை அரவணைத்தாய்

ஆம்!

முதல் பிரசவம்

விவரிக்க முடியா உயிர் பயம் என்னுள்

அன்னை இல்லை அருகில்

உன்னை அழைத்தேன்..

பூத உடல் இன்று இல்லை எனினும்

நீ என்றும் என்னுடனே இருக்கிறாய் என்றெண்ணி

அறுவை சிகிச்சை அறைக்குள் அரைமயக்கத்தில்

இருந்த என்னை உயிர்கவசம் கொண்டு காத்தாய்!

ஆம்! எனக்குத் தெரியும்

நீயே எனக்கு மறுபிறவி அளித்தாய்!

நீயும் மறுபிறவி எடுத்தாய்!

என் மகன் செம்பியனும் நீயே!

நிரஞ்சனும் நீயே!

வளர்ந்த பின் வாழ்க்கைப் பாடம்

'அதே உன் சூழல்' அளித்த போது

புரிந்தது உன் மௌனக்கவசம்

அரணாய் என்னைக் காத்தது

இன்று என் வாழ்வின்

ஒவ்வொரு நாழிகையிலும்,

நீயே என் ஞான ஒளி!

தலைநிமிர்ந்து நான் நடப்பதும் உன்னாலே!

என் காலில் நான் நிற்பதும் உன்னாலே!

உன் வழியில் நான் நடக்கும்போது

உன் உருவமே என்னுள் வாழ்கிறது!

என் விழுமியங்களின் வேர் நீயே!

'அப்பா'

என் விழுமியங்களின் வேர் நீயே!

- கவிதாயினி ர. குப்பு 

Post a Comment

0 Comments