விறால் குஞ்சுகள்

அடுக்ககக் குடியிருப்பின்

கான்கிரீட் பில்லர்களில்

மோதித் திரும்பி

மோதித் திரும்பி

அலைபாய்கின்றன

அக்கக்கா குருவிகள்

இரவெல்லாம்

கத்திக் கதறுகின்றன!

குளங்கள்

வீட்டுமனைகளானதை

யாரிடம் சொல்லி முறையிடும்?

நத்தைகளுக்கு நகரமே

நரகம் !

தவளைகள் வீட்டுக்குள் நுழைவதாக குறைபட்டுக் கொள்ளும் முன்

உங்கள் தாய்ப் பத்திர

வரைபடத்தின் ஓரத்தில்

உற்றுப் பாருங்கள்...

சின்னஞ்சிறிய வளைந்து நெளிந்த கோடுகளால் ஆன

குட்டிக் குளம் ஒன்று உள்ளதை.

பரந்து விரிந்து அலையடித்த நீர்ப்பரப்பை

நீங்கள் குழாய்கள் மூலம் “சிண்டெக்ஸ்”ல்

ஏற்றுவதை

தாழ்வாரத்தில் கூடு கட்டும் பறவைகள் அறியும்.

ஆமைகள்

புழக்கடைப் பக்கமாக திரிகின்றன

ஆம்! அவை யாவும்

குளம் இழந்த

ஏதிலிகள்.

- கவிஞர் சூ சிவராமன்