இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எக்ஸ் - இதெல்லாம் இன்று அதிகம் நாம் பயன்படுத்தும் சொற்கள்.
இந்த 21ம் நூற்றாண்டில் வங்கியில் கணக்கு இருக்கிறதோ இல்லையோ மேற்கூறிய சமூக வலைத்தளங்களில் கட்டாயம் கணக்குகள் வைத்திருக்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் நூலகங்கள் சென்று படித்துக் கொண்டும் & தெருக்கூத்துகளைப் பார்த்து ரசித்துக் கொண்டும் பொழுதைக் கழித்த மக்கள் இன்று உள்ளங்கையில் அடங்கும் கைபேசியிலேயே நாள் முழுவதும் செலவிடுகின்றனர்.
எங்கு எது நடந்தாலும் நொடிக்கு நொடிசெய்திகள் பகிரப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் அறிவிப்பு முதல் இன்றைய ஈரான் இஸ்ரேலிய போர் வரை அனைத்துமே கைப்பேசி மூலம் தெரிந்து கொள்கின்றோம்.
முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு மேலே உள்ள கூம்பு வடிவ ஆண்டனாக்களை அங்கும் இங்குமாக திருப்பி திருப்பி கருப்பு வெள்ளைப் படம் பார்த்த மக்கள் இன்று 4K Ultra HDR முதல் AI பொருந்திய கைப்பேசி உடனே உலா வருகின்றனர்.
“ இன்றைய தலைமுறையினர் கைப்பேசி அதிக நேரம் உபயோகிக்கின்றனர், இரவு பகல் பாராது பொழுதெல்லாம் கைப்பேசியுடன் போகிறது, ஆன்லைன் சூதாட்டம், போன்றவைகளால் சமுதாயம் சீரழிகிறது “ இது போன்ற பல குற்றச்சாட்டுகள் முன் வைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதோடு மறுபுறம் கற்றுக்கொள்ளும் கல்வியும் கற்கையிலும் நூல்களும் கணக்கிட இயலாத அறிவு பொக்கிஷங்களும் கைப்பேசியின் மூலம் இணையத்தில் இருக்கத்தான் செய்கிறது.
எந்த ஒன்றையும் நாம் எவ்வாறு உபயோகிக்கின்றோம் என்பதை பொறுத்து அதன் நன்மையும் தீமையும் அமைகிறது.
உதாரணமாக உடலுக்கு வலுவூட்டும் சுவை மிக்க தேன் ஒன்று, இரண்டு கரண்டி சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதனைத் தாண்டி 100 மில்லியாக எடுத்துக் கொள்ளும் போது உடலின் சர்க்கரை அளவு உயரும். அதையும் தாண்டி 500 மில்லி, 1 லிட்டர் என எடுத்துக் கொள்ளும் போது தொடர் வயிற்றுப்போக்கு, டிஹைட்ரேஷன், தலை சுற்று, மயக்கம், வாந்தி போன்றவைகள் எல்லாம் ஏற்படும்.
இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது தேன் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு அல்ல எடுத்துக் கொள்ளும் விதத்தைப் பொறுத்து தேனின் பயன் அமைகிறது. இதை தான் நம் முன்னோர்கள் “ அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு “ என்பார்கள்.
இன்று மதுக்கடைகள் இல்லாத ஊரே இல்லை. எல்லா ஊரிலும் ஊரின் மையப் பகுதியிலோ அல்லது ஒதுக்கு புறத்திலோ ஒரு மது கடை இருக்கத்தான் செய்கிறது. மதுகடை இருப்பதனால் அவ்வூருக்குச் சென்றவனைக் குடிகாரன் என்ற சொல்வது ஏற்புடையதா ? இதன் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் ஊரைக் காலி செய்வதும் நகைப்புக்குரியது.
மது அருந்த வேண்டும் என்று நினைப்பவன் மதுக்கடை ஊரில் இருந்தாலும் மது அருந்துவான் இல்லையெனில் வெளியூர் சென்றாவது மது அருந்துவான்.
பச்சை நிறச் செடிகள் எல்லாம் கீரையும் அல்ல! வெள்ளை நிற நீரெல்லாம் பாலும் அல்ல !
“ சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. “
என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப எது நன்மை பயக்குமோ அதை எடுத்துக் கொண்டு தீயனவை தவிர்க்க வேண்டும்.
இதே கண்ணோட்டம் தான் இன்றைய சமூக வலைத்தளங்களுக்கும்.
இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் எளிதாக கடந்து விடலாம் என்று நினைத்ததன் விளைவு இன்று தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி புதிய ஆட்சியையே உருவாக்கி இருக்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் கட்சி அரியணை ஏற சமூக வலைத்தளமே முதன்மைக் காரணம்
இன்றைய தலைமுறையினருக்கு சமூக வலைத்தளம் என்பது ஒரு மிகப்பெரிய கல்விக்கடல் மற்றும் ஆயுதம்.
மூன்று தலைமுறையினருக்கு முன்னர் கல்லூரிப் பட்டப் படிப்பெல்லாம் ஒரு சாராருக்கு மட்டுமே என்றிருந்த நிலையை மாற்றி எல்லோருக்கும் எல்லாமும் என்ற உயர் சிந்தனையால் இன்று தமிழ்நாட்டில் பலர் கல்வி கற்று இருப்பதைப் போல் “ நீட் தேர்வு முதல் நியூயார்க் டைம்ஸ் வரை ” எல்லாவற்றையும் எல்லோரும் படிக்க இயலும் என்ற சமத்துவம் மிக்க சூழ்நிலையை உருவாக்கியது இந்தச் சமூக வலைத்தளம்.
" மெய்யறிவது என்பதே மெய்யான அறிவு " என்ற கூற்றின்படி ஒன்றின் தீமையை எடுத்துச் சொல்லும் முன் அதன் நன்மையையும் நாம் சற்று ஆராயத்தான் வேண்டும்.
சமூக வலைதளம் இளைஞர்களுக்கான பலம்!
அவர்கள் கையில் இருக்கும் கைப்பேசி அவர்களை ஆளக்கூடாது ; அவர்கள் தான் அதை ஆள வேண்டும் !
கடலளவு கற்போம் !
மலையுர மகிழ்வோம் !

0 Comments