Nagore Puranam
மேமாதக்காட்சி ! | கவிஞர் அ. பெர்த்தி வினித் | July 2026

மேமாதக்காட்சி ! | கவிஞர் அ. பெர்த்தி வினித் | July 2026


ஏப்ரல்மாத இறுதியில்

உறுதி செய்யப்பட்ட

பயணச்சீட்டுகளோடு

புறப்பட்டோம் சொந்த ஊருக்கு

இயந்திரஉலகின்மத்தியிலும்

இளைப்பாறுதல் தரும் ஆச்சிவீடு

உறவினர்களால் நிறைந்த

ஒருமாதக் கூட்டுக்குடும்பம்!

ஓயாமல் மூட்டுவலி என்பவள்

ஓய்வின்றிஉணவு சமைப்பாள்

சுகம் இல்லாத தாத்தா

சுறுசுறுப்பாய் இளநீர் அறுப்பார்

தினமும் வீட்டில் விருந்து

ஆச்சியின் கைப்பக்குவத்தில்

அத்தைகளைமறக்கும்

மாமாக்களின் குறும்பு

தாத்தா பாட்டிக்கு

தேவையில்லை மருந்து !

சிரிப்பு சண்டைகேலிஎன

எல்லாம் நிறைந்த வீட்டில்

கண்மூடி திறப்பதற்குள்

நாட்கள் முடிந்திருக்கும் 

பள்ளிகள் திறப்புஎன

ஊடகங்கள் விழித்திருக்கும்

இடியுண்டமஞ்ஞைப்போல்-வீடு

இன்பமின்றி சிரித்திருக்கும்!

எண்ணத்தில் ஏக்கமும்

விரும்பாத மனமும் - இருந்தும்

கன்னத்தில் முத்தமும்

கையில் பணமும் தந்து

வலியோடு வடிந்தோடும்

விழியோடு வழியனுப்புவாள் ஆச்சி

இது மே மாதக்காட்சி!

மேமாத இறுதியில்

உறுதி செய்யப்பட்ட

பயணச்சீட்டுகளோடு

புறப்படுவோம் எங்கள் ஊருக்கு.

கையைக் குறுக்கி படுத்திருந்தேன்

தொடர்வண்டி இருக்கையில்,

அங்கேயும் ஆச்சிஇருந்தாள்

தன்கைப்பக்குவத்தால்

என்கையில்

மீன்குழம்பின் மணமாக!

Post a Comment

0 Comments