Nagore Puranam
நானும் ஒரு குழந்தை ! | கவிச்சுடர் காஞ்சி கிருபா ( முதுகலைத் தமிழாசிரியர் ) | JULY 2026

நானும் ஒரு குழந்தை ! | கவிச்சுடர் காஞ்சி கிருபா ( முதுகலைத் தமிழாசிரியர் ) | JULY 2026


ஐம்பதிலும் குழந்தையாகிறேன்

ஒரு குழந்தையாக

அடிக்கடி பிறக்கிறேன்...

விருந்து பந்தியில்

இன்னொரு அப்பளம்

கேட்கும்போது......

பேருந்துப் பயணத்தில்

ஜன்னல் இருக்கை

கிடைக்கும் போது..

உதிர்ந்து விழுந்த

நாக பழங்களின்

மண்ணைத் தட்டி விட்டு

உண்ணும் போது...

வானப் பறவைகளின்

பயணம் பார்த்து....

" கொக் கொக் பலட"

நகங்களை உரசும் போது...

வானிலை அறிவிப்பாய்

மழை விடுமுறை

வரும்போது..

மழை வரும் போதெல்லாம்

குழந்தையாக

நனையும் போது...

யாருமற்ற நிலா மாடத்தில்

நான் மட்டும் பாடும் போது...

குழந்தைகளின் கூட்டத்தில்

குழந்தையாக மாறும்போது...

விரும்பாத உணவை

வேண்டாமென்று

பிடிவாதம் பண்ணும்போது...

தீப நாளில்

கம்பி மத்தாப்பு சுற்றும் போது...

விழாக்களில் ஐஸ்கிரீம்களின்

எண்ணிக்கை கூடும்போது...

" ம்மா பசிக்குதுமா ப்ளீஸ்மா"

மனைவியிடம்

முக வாடலாக கேட்கும் போது...

வண்ணத்துப்பூச்சிகளை

பிடிக்க இயலாமல்

தோற்கும் போது...

"ஸ்கூலுக்கு போகமாட்டேன்"

அடம் பிடிக்கும்போது

அவ்வப்போது பிறக்கிறேன்

குழந்தையாக

நான் பிறக்கும் போதெல்லாம்

கூடவே இறந்து விடுகின்றன

என் வயதும்

என் பதவியும்

என் துன்பமும்

என் துக்கமும்

சோதனையும் வேதனையும்

அதற்காகவே

மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்

ஒரு குழந்தையாக !

Post a Comment

0 Comments