Article No : NPIJT020926
தலைப்பு : அம்பை படைப்புகளில் பெண்ணிய உணர்வு
ஆய்வாளர் : முனைவர் கி ஜெயசீலன், தமிழ் உதவிப் பேராசிரியர், செயின்ட் ஜோசப் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை - 600128.
முகவுரை :
எழுத்தாளர் அம்பை அவர்கள் தமிழ் சிறுகதையில் உலகில் பெண்ணிய எழுத்தாளராக வளம் வருபவர். அவருடைய இயற்பெயர் சி.எஸ் .லட்சுமி ஆகும். மகாபாரதத்தில் புரட்சி செய்த பெண்மணி அம்பையைப் போன்று தன்னை மாற்றிக்கொண்டு தன் கருத்துணர்வுகளைச் சிறுகதை மூலமாக வெளிப்படுத்தி வருபவர். நிறைய பெண்ணியப்படைப்புகளைப் படைத்துள்ளார் மேலும் பெண்ணியப் படைப்புகளுக்குப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாடமி விருதுபெற்றார். அவர் எழுதிய ‘அம்மா ஒரு கொலை செய்கிறாள்’ என்ற சிறுகதையில் பெண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இக்கதையில் பல விதமான பெண்கள் பாத்திரத்தை கையாள்கின்ற திறன் படைத்தவராகப் படைப்பாளார் திகழ்கிறார். குறிப்பாக இச்சிறுகதையை ஆய்ந்து பார்த்தால் ஒரு பெண்ணின் குழந்தைப் பருவம், பருவம் எய்திய பெண், திருமணப் பருவம், இல்லறத்தில் பெண் என அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடி சூழ்நிலைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
தாயானவள் பெண் குழந்தைப் பருவத்தில் வளர்ப்பதிலும், பருவம் எய்திய பின் வளர்ப்பதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ஓர் ஆடவன் பெண் பார்க்க வருகின்ற போது பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆண்களின் எதிர்பார்க்கும் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய சூழலுக்கு உள்ளாக்குவதும். குடும்பத்தின் வேலைகளில் பெரும்பாலும் பெண்கள் தான் பங்குபெற வேண்டும் என்ற கட்டமைப்பு இச்சமூகத்தில் இருக்கிறது என்பதை இக்கதையின் வழியாக சுட்டிக்காட்டுகிறார். மேலும் பெண்களின் நிறைக்குறைகளையும், பெண்மை உணர்வுகளைப் பெண்களே கொலைச்செய்கிறாள் என்ற நிலைக்குக் கதை முடித்தாலும் இந்த உணர்வுக்கொலைக்குக் காரணம், இங்கு கட்டமைக்கப்பட்ட நிலையே என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.
பெண் குழந்தைப் பருவம் :
இக்கதையில் ஒரு பெண் குழந்தை, தாய் வளர்க்கின்ற போது அப்பெண், குழந்தைக் கேட்கின்ற கேள்விகளுக்கு நாம் விளையாட்டாக விடை கொடுக்கிறோம் என்று நினைக்கிறோம் இல்லை அவர்களுக்கு விதைப்போட்டு வளர்க்கிறோம். ஒவ்வொரு குழந்தைகள் கேட்கும் கேள்விக்கும் நாம் கூறும் விடைகள் என்பது அவர்களைப் பண்போடும் தைரியத்தோடும் வளர்த்தெடுப்பதற்கான விதைகள். அவ்விதைகள் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதைப்பிடித்துக் கொண்டே அவர்கள் வளர்கிறார்கள். இன்னும் கூற வேண்டுமானால் குழந்தைப் பருவத்தில் தான் நற்பண்புகளை விதைக்க வேண்டும். அவ்வாறு வளர்க்கின்ற போது நல்ல சமுதாயம் மலர்வதற்கும் வாய்ப்ப்புகள் அமையும் என்று ஆய்ந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.
“அவள் அம்மாவா? அம்மா தானா? காளி காளி மகா காளி பத்ர காளி நமோஸ்துதே என்ற ஸ்லோகம் ஏன் நினைவிற்கு வருகிறது.” “தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை” என்ற பழமொழி
“அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்” என்கிறார் ஒளவையார்.
“தாயை தாண்டிய கடவுள் இல்லை”என்கிறது சாணக்ய நீதி.
அந்தக் குழந்தை அம்மாவிடம் கேள்வி கேட்கின்ற போது எல்லாவற்றிற்கும் விடைக்கொடுக்கும் தாயாக இருக்கிறாள். அதனால் அக்குழந்தை அம்மாவைத் தெய்வ நிலைக்கு வைத்துப் பார்க்கிறது. அந்த அளவிற்கு அம்மா அவளை அன்போடும் அரவணைப்போடும் பாசத்தோடும் பண்போடும் பார்த்துக்கொள்கிறாள் என்ற அர்த்தம். இந்த நிலை தந்தையிடம் பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.
நான் ஏம்மா கறுப்பு? போடி உன் அழுகு யாருக்கு வரும்? ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானகோடி அழகுகளைத் தோரணமாட வைப்பவள் . சிருஷ்டி கர்த்தா . அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் போது நீண்ட மெல்லிய விரல்களால் தடவி “ உனக்கு டான்ஸ் கத்துத் தரப் போறென் . நல்ல வாகான உடம்பு என்றோ “என்ன அடர்த்தியடி மயிர்” என்றோ சர்வ சாதாரணமான ஒன்றைத் தான் சொல்வாள் . ஆனால் மனத்தில் குல்லென்று எதுவோ மலரும்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (குறள் 65) என்கிறார் திருவள்ளுவர்.
அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை. என்னுள் பல அழகுகளுக்கு விதை ஊன்றியபோது தன்னுள் அவள் எதை ஸ்தாபித்துக் கொண்டாளோ தெரியவில்லை”
“தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்” என்கிறது நம் நாட்டுப் பழமொழி.
குழந்தைப் பருவத்தில் அவளுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை உடைக்கின்ற தாய், தைரியத்தை கொடு்க்கின்ற போது அவளுக்கு என்ன திறமை இருக்கு எந்தக் கலை உணர்வு அவளுக்குள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து வளர்க்கத் துடிக்கின்ற தாயாக இருக்கிறாள். ஆனால் சிறிய பருவத்தில் ஒவ்வொன்றையும் அலசிப்பார்த்த, தாய் காலப்போக்கில் மாறுகிறாள் என்பதைப் படைப்பாளர் கூறுகிறார்.
அவள் குடும்பச் சூழலுக்குகென்று தயாராகும் போது அவள் உணர்வுகள் எரிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிகாட்டுகிறார். ஒரு மரம் செடியாக வளர்க்கின்ற போது பாதுகாப்பாக வளர்க்கவில்லை என்றால் மரமான பின் காய், கனி தருவது கடினம். பெண்களைப் பெண்ணாக வளர்ந்தால் அவர்கள் உணர்வுகளுக்கும் உடலுக்கும் உயிருக்கும் மதிப்பளிக்கும் வகையில் வளர்க்க வேண்டும். இல்லை என்றால் பாதிக்கப்படுவது அவர்களைச் சார்ந்து இயங்கின்ற சமூகம்தான் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
“அம்மா பருவம்னா என்னம்மா”?
சிறிய பருவத்தில் வயதுக்கு வரும் நிலைப் பற்றிக் கேட்ட போது அம்மா மெளனம் காக்கிறாள். இதையெல்லாம் சிறிய பருவத்தில் சொல்லிக்கொடுக்காமல் வளர்க்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். உடல்மொழியைப் பற்றி என்னவென்றே தெரியாமல் பெண் பிள்ளைகளை வளர்க்கிறாள். அதைப் பற்றிய புரிதல் கண்டிப்பாகப் பெண் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பருவம் எய்தியப் பெண் :
அவள் பருவம் எய்தியபோதும் அதைப்பற்றி என்னவென்று இக்குழுந்தையிடம் கூறவில்லை என்பதைப் பதிவு செய்கிறார். காலங்காலமாக இப்படித்தான் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்ற சூழல் நம் நாட்டில் ஒரு கட்டமைப்புக் கட்டி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதை யார் தான் கூறுவது எப்படித்தான் அறிந்துகொள்வது. தெரியாமல் கலங்கி நிற்கின்ற பெண் பிள்ளைகளின் நிலைகளைப் பார்க்க முடிகிறது.
“பகவானே எனுக்கு ஒன்றும் ஆகவில்லையே
என்னை நானே கேட்டுக் கொள்ளும் போதே
தெரிகிறது ஏதோ ஆகிவிட்டதென்று”
இது என் உடலில் ஏற்படும் மாற்றம். இது எல்லாம் பெரிய பெண்ணாக ஆன பின் உடலில் இயற்கையால் வரும் மாற்றம் தான் என்பதைக் கூறமுடியாத நிலையில் பெண் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பெண் பிள்ளைகளுக்கும், ஆண் பிள்ளைகளுக்கும் முதலில் புரிய வேண்டிய பாடம் இதுதான். உடல்மொழி, உணர்வுமொழி, இயற்கையின் மொழியினை எல்லாம் இளம்பிள்ளைகளுக்குத் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் இவை.
“தலைதிடிரென்று குகை வாயாய்த் திறந்து கரும் சிவப்பாய் ரத்தம் பீறிட்டு வந்து. ஐயா எத்தனை ரத்தம், எத்தனை ரத்தம் வாயில் ஓசையே பிறக்கவில்லை”
பெண் குழுந்தைகளுக்குப் புரிய வைக்கும் பெற்றோர்களும் உறவினா்களும் அங்குத் தயக்கம் காட்டுகிறார்கள். ஏன் இரத்தம் வருகிறது என்பதைத் தெளிவுப்படுவதும் இல்லை. உடலில் வரும் இரத்தம் பெண்மைக்கான வாசலை திறந்து உள்ளது. அதனால் நீ உடல் அளவில் பலவினமாக இருக்கிறாய் ஆகையால் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையில்லை. இச்சிறுகதையில் பெண் குழந்தைக்குப் புரிதல் இல்லாமல் தவிக்கும் நிலையைப் பார்க்க முடிகிறது. அப்பிள்ளைகளை உடல் ரீதியாக, மனம் ரீதியாக தைரியப்படுத்தும் நேரம் இது.
”கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள், எதிரே எவனோ கொத்து இலையோடு நிற்கிறான்.”
ஏன் இந்தச் சடங்கு முறைகள் நடக்கின்றன என்பதை விளக்கி கூறுவதற்கு மனிதர்கள் இல்லை. இதைப் பற்றிய புரிதல் இல்லை என்பதை தெளிப்படுத்துகிறார் படைப்பாளர்.
பருவம் எய்தியப் பெண் பிள்ளைகளை அடக்குதல் :
பருவம் எய்தியப் பெண் பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு விதிமுறையைக் கொண்டுவருகிறது. அதைச் செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என்று விதிகளைக் கூறுகின்ற நிலையை இக்கதையிலும் பார்க்க முடிகிறது.
“இனிமே எல்லாம் நான் மரத்துலே ஏறக்கூடாதா
நறுக் என்று சுட்டுகிறார் கல்யாணி”
இந்தச் சுதந்திரம் பெண் சமூகத்திற்கு மட்டுமே பறிக்கப்படுகிறது. இரு சமூகத்தில் இருவருக்கும் புகட்ட வேண்டிய பாடத்தை ஆண்களுக்கு விட்டு விட்டு பெண்கள் மேல் அடக்கு முறைகளைக் கொண்டு வருகிறார்கள் .
“இனிமே பாத்ருமிலேயே டிரஸ் பண்ணிக்கனும் தெரிஞ்சுதா”
ஒரு பெண்பிள்ளை பெரியவள் ஆனால் அவளுக்கு மரத்தில் ஏறக்கூடாது உடை இப்படி அணியக்கூடாது, ஆண் நண்பர்களுடன் பேசக்கூடாது என்ற பல விதமான விதிமுறைகளைக் கொண்டு வருகிறார்கள் ஆனால் ஆண்களுக்கு இதுபோன்ற விதிமுறைகள் இல்லை. ஆண்களை ஒழுக்க நிலைப்படுத்தி வளர்த்தால் இவர்கள் பயப்படும் தவறுகளைத் தடுக்கலாம்.
“முடிந்த காலம்,
மரத்தில் ஏறவும்,
மாங்காய் பிடுங்கவும்,
பக்கத்து வீட்டுப்
பிள்ளைகளுடேனே கிட்டி அடிக்கவும்
ஒளித்துப் பிடிக்கவும்
ஒன்றும் பேசிலர் எவரும்
இன்று நான் பெரிய பெண்”
இதே கருத்தை எழுத்தாளர் அ.சங்கரி பதிவுச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் பார்வையில் பெண்கள் :
ஆண்கள் கறுப்பாக இருந்தால் அவரைப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் பெண்கள் கறுப்பாக இருந்தால் அதை ஒரு குறையாக சொல்லி நழுவுகிறார்கள். ஆண்கள் இந்த வேறுபாடு தற்போது வரை நடந்துக்கொண்டுயிருக்கின்ற உண்மை. இப்படைப்பாளர் இதையும் பதிவுச் செய்கிறார்.
“பொண்ணு கறுப்பாம் வேண்டாம்னுட்டான் கடங்காரன்.
நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு”
“எனக்கு முகம் இல்லை, இதயம் இல்லை, ஆத்மாவும் இல்லை”
‘அவர்கள் பார்வையில்' என்ற கவிதையில் ஆ.சங்கரி கூறுவதும் குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கூறி பெண் சமுதாயத்தை. ஒதுக்கிவைப்பது போன்றே நடந்துக் - கொள்கிறார்கள் ஆண்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நல்ல பணம் வருவாய் கையில் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அவர்கள் தேர்வுச் செய்ய உரிமை உண்டு. ஆனால் நிறம் குறைக்கூறுவதும் என்பது பெண் சமுதாயத்தைப் பாதிக்கும் செயல் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். இன்னும் எத்தனைக் காலத்திற்குத் தான் பெண்களிடம் இருக்கும் குறைகளையே பார்த்துக்கொண்டிருக்க போகிறார்கள்.
இதனால் பெண்களைப் பெண்களே தாழ்த்தும் நிலை உருவாகிறது. பெண் குழந்தையாக பாசமாக வளர்த்த அவள் இப்போது தங்கைவீட்டுப் பெண்ணுக்கு வந்த கதி, தன் பெண்ணுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சும் தன்மை அவளிடம் மேலோங்கும் நிலையைப் பார்க்க முடிகிறது.
“உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்” சுளீரென்று கேள்வி யாரைக் குற்றம் சாட்டுகிறாள்?
ஆண் கொடுக்கும் நெருக்கடியால் பெண்களைப் பெண்களே இங்கு வெறுக்கும் நிலை இருக்கிறது என்பதைத் தாய், தன் பெண்ணின் உணர்வுகளைத் தீயில் பொசுக்குவது போல பேசுவது குறிப்பிடக்தக்கது.
குடும்ப பாரம் பெண்கள் மேல் :
குழந்தைப் பெற்றெடுப்பதும் அவர்களைப் பாதுகாத்து வளர்ப்பதும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வதும் என்று எல்லா நிலையிலும் பெண்களே குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி எல்லா உணர்வுகளைத் தாங்கிக்கொண்டு வரும் தாயின் நிலையைக் காணமுடிகிறது.
”விடிகாலை இருட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் தவலைக்கு அடியில் விறகு வைத்து வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும்” “எண்னை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா”
“எங்கிருந்தோ பறந்து வந்த அங்கே நின்ற அக்கினியின் பெண்ணாய் அவள் தோன்றுகிறாள்”
“அசுத்தங்களை எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள் .ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானகோடி”
“சமையல் செய்தல், படுக்கையை விரித்தல், குழந்தைப் பெறுதல், பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும்”
‘அவர்கள் பார்வையில்’ என்ற தலைப்பில் எழுத்தாளார் அ. சங்கரி இந்தக் கோட்டில் நிற்கிறார்கள் என்பது விளங்குகிறது. குழந்தைப் பெற்றெடுப்பதிலே பாதி ரத்தம் போய்விடுகிறது இதில் குடும்ப வேலைகள் வேற வாங்கிறார்கள். விடிகாலையில் எழுந்து பிள்ளைகளைக் குளிக்க வைப்பது, சாப்பாடு கட்டுவது, துணி துவைத்து கொடுப்பதும் பள்ளிக்கு அனுப்புகின்ற வரையில் தாயின் கடமை என்றே இந்தச் சமுதாயத்தை வளர்த்து வைத்துள்ளார்கள். மாலை இட்ட பெண்சாதி காலனைப் போல வந்தால் என்ற பழமொழி இவ்வளவு வேலைகள் செய்தாலும் பெண்களை எமன் என்று தூற்றுகிறது இச்சமுதாயம்.
முடிவு :
இக்கதையில் ஒரு தாய் பெண் குழந்தை வளர்க்கின்ற போது ஏற்படும் உணர்வுகள் அதில் அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் மற்றும் அவர்களின் மனப் போராட்டங்களைப் பார்க்க முடிகிறது. பெண் குழந்தையானவள் சிறிய வயதில் பார்த்த அம்மாவை வயதுக்கு வந்த பின்பு அம்மாவினுடைய அன்பிற்காக ஏங்கும் நிலை காணமுடிகிறது. பெண்கள் சமுதாயத்தில் வயதுக்கு வந்த பின்பு என்னென்ன அடக்குமுறைகள் பெண்கள் மேல் திணிக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. பெண் பார்க்கும் போது ஆண்களால் பெண்கள் சமுதாயம் கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்ற சூழ்நிலையும் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் படைப்பாளர்.
குடும்பத்தைச் சுமக்கின்ற போதும் பெண் குழந்தைகளை வளர்க்கின்றபோதும் ஏற்படும் சிக்கலால் பெண் குழந்தை உணர்வு நசுக்கப்படுகின்றன. பெண் பூத்த உடனே பல விதிமுறை விதிக்கப்படுகிறது. பெண் பார்க்கும் படலம் நிகழும் போது ஆண் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அளவிற்கும் இந்தச் சமுதாய கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளார்கள். பெரும்பாலும் குடும்ப பாரத்தைப் பெண்களே சுமக்கிறார்கள் இந்தச் சமுதாய கட்டமைப்பைப் பார்க்கும் போது பெண்களே பெண்கள் உணர்வுகளை கொலைச் செய்யும் நிலைக்குப் போவதைக் காணமுடிகிறது. இந்த இழிவான நிலையில் அவர்கள் வெளிவர வேண்டும் என்றால் பெண்களைப் பற்றி பெண்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். ஆண்களை ஈன்றெடுப்பவள் பெண்தான். அதனால் அவளிடம் இருந்தே இத்தொடக்கம் தொடங்க வேண்டும்.
முதன்மை ஆதாரம் நூல் :
- அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை சிறுகதை தொகுப்பு நூல்
காலச்சுவடு பதிப்பகம், சென்னை, பதிப்பு -1944
துணைமை ஆதாரம் நூல்கள் :
- கொன்றை வேந்தன் உலநீதி, மூதுரை மூலமும் உரையும், கெளரா பதிப்பகம், சென்னை. பதிப்பு - 2021
- சாண்கிய நீதி – சந்தியா பதிப்பகம், சென்னை பதிப்பகம் சென்னை. பதிப்பு - 2020
- திருக்குறள் – மு. வ உரை
- பெண்கள் ஆய்வு வட்டம் வெளியிடு- புனித வளன் கத்தோலிக்க அச்சகம் யாழ்ப்பாணம் – பதிப்பு - 1986

0 Comments