கலித்தொகை:-
ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது.
36 பாலை பாடல்கள் - பாடியவர் பெருங்கடுங்கோ,
29 குறிஞ்சி பாடல்கள் - பாடியவர் கபிலர்,
35 மருதம் பாடல்கள் - பாடியவர் மதுரை மருதனிளநாகனார்,
17 முல்லை பாடல்கள் - பாடியவர் சோழன் நலுருத்திரன்,
33 நெய்தல் பாடல்கள் - பாடியவர் நல்லத்துவனார்.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும்.
பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
பாடல் : 51
பாடியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி
கூற்று – தலைவி
(‘புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது)
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! . . . .[05]
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, . . . .[10]
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் . . . .[15]
செய்தான், அக் கள்வன் மகன்.
பொருள் : ஒளியுடைய வளையல்களை அணிந்த என் தோழியே! இதைக் கேட்பாயாக! முன்பு நம்முடைய சிறிய மணல் வீடுகளை கலைத்தும், நாம் சூடியிருந்த மலர்ச்சரத்தை அறுத்தும், நம்முடைய வரிப்பந்தை எடுத்துக் கொண்டும் ஓடியும் நம்மை வருந்தச் செய்த பொறுப்பற்றவன், ஒரு நாள் என் தாயும் நானும் வீட்டிலிருந்த பொழுது வந்து, “வீட்டில் உள்ளவர்களே! நான் தாகத்தில் இருக்கின்றேன். எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டான். என்னுடைய தாய், “ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! அடர்ந்த பொற்கிண்ணத்தில் தண்ணீர் வார்த்து அவனுக்குக் கொடு” என்றாள். அவன் யார் என்பதை அறியாமல் நான் அவனிடம் சென்றேன். வளையல் அணிந்த என் முன் கையைப் பற்றி என்னை வருத்தினான் அவன். “அம்மா! இவன் செய்ததைப் பார்” என்று நான் கலக்கத்துடன் கூறினேன். என் தாய் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள். அவள் அங்கு வந்தவுடன் “நீரைக் குடிக்கும்பொழுது விக்கினான்” என்று கூறினேன். என் தாய் அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள். தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்லுவது போல் பார்த்து நட்புடன் சிரித்தான், அந்தக் கள்வன்.
பாடல் : 101
பாடியவர் – அருஞ்சோழன் நல்லுருத்திரனார்
திணை – முல்லை
கூற்று : தோழி
தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
மணி புரை உருவின காயாவும்; பிறவும்; . . . .[05]
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு;
அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப . . . .[10]
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ
மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் . . . .[15]
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்; . . . .[20]
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,
குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு, . . . .[25]
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்;
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன் . . . .[30]
தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்;
என ஆங்கு
அணி மாலைக் கேள்வன் தரூஉமார், ஆயர்
மணி மாலை ஊதும் குழல் . . . .[35]
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை
ஈன்றன, ஆய மகள் தோள்;
பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,
சுவன்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது; . . . .[40]
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம், யாம்;
'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள்,
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு . . . .[45]
வேளாண்மை செய்தன கண்;
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும்
முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,
எல்லாம் புணர் குறிக் கொண்டு. . . . .[50]
பொருள் :
ஆயர்குலத்தில் பிறந்த அழகிய பெண்ணொருத்தி, அக்குலத்தில் பிறந்த ஆடவன் ஒருவன்மீ து காதல் கொண்டாள். அந்த இளஞனும் அவள்மீது காதல் கொண்டான். இருந்தாலும், குலமுறைப்படி அவளை மணந்து கொள்ள முன்வரவில்லை. அதனால் வருந்தியிருந்த தலைவிக்குத் தோழி, ஊரில் நடைபெற்ற கொல்லேற்று விழாவைக் (மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு) காட்டி, இதுபோன்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு தலைவன் (காதலன்) விரைந்து வந்து மணந்துகொள்வான் என்று தோழி தலைவிக்குக் கூறுவதாகஇப்பாடல் அமைந்துள்ளது. தொழுவுள் புகுந்தார்கள்.: மழைபெற்றுக் குளிர்ந்த காட்டில், முதல் மழைக்கு அரும்பு விட்டு, புதர் நிறைய மலர்ந்த பிடவம், (பூ) கள்ளுண்ட ஒருவன் கால் தளர்ந்து ஆடுவதுபோல் அலையும் அரும்புகளைவிட்டு, கடைந்தெடுத்த செந்தழலைச் சேரவைத்தாற் போல் மலரும் செங்காந்தள், கருநீல மணி போன்ற காயாம் பூ முதலிய மலர்களாலாகிய மாலை அணிந்த ஆயர்கள் ஒன்றுகூடி, தம் ஆற்றலை வெளிக்காட்ட, சிவபெருமானின் குந்தாலிப் படைபோன்ற கூரிய கொம்புகளைக் கொண்ட கொல்லேறுகளைத் (காளை மாடுகள்) தொழுவினுள் அவிழ்த்து விட்டனர். உடனே, முரசுபோலவும், இடிபோலவும் ஆரவாரம் எழ புகையும் புழுதியும் எழுந்து படர, மணப்பருவம் பெற்ற மகளிர் வரிசை வரிசையாக நிற்க, அம்மகளிரை மணக்க விரும்பிய அக்குல இளைஞர்கள், அப்போரை ஏற்றுக்கொண்டு, தண்ணீர்த் துறையிலும், ஆலின் (ஆலமரம்) கீழும், மராமரத்தடியிலும் கோயில் கொண்டிருக்கும் கடவுளை வணங்கித் தொழுவுள் புகுந்தார்கள். பட்டுப்பூச்சியின் பசுமையோடு செந்நிறம் பெற்ற காளை, தன் கண்ணொளி கண்டு அஞ்சாது பாய்ந்த ஆயனைக் குத்திக், கொம்பில் கோத்துக் கொண்டு ஆடும் ஆட்டத்தைப் பார்! அழகும் மென்மையும் வாய்ந்த திரௌபதையின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனின் நெஞ்சைப் பிளந்து, கொன்று, தன் வஞ்சத்தை முடித்துக் கொண்ட வீமசேனன் போல் காட்சி அளிக்கிறது. நெற்றியில் வெள்ளைச் சுழிபெற்ற கரிய காளை, மலைப் பிளப்பு மலர்சூடி வந்த ஆயனை முட்டி, அவன் குடர்சரியுமாறு குத்தி அலைக்கும் காட்சியைக் காண்! ஊழிமுடிவில் ஒரு பாதி உமையின் பச்சை நிறம் காட்டும் பரம்பொருள் கூற்றுவன் நெஞ்சைப் பிளந்து, அவன் குடரைக் கூளிக்குப் பசியாறக் கொடுப்பது போல் காட்சி அளிக்கிறது. சிறுசிறு செம்புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக் காளை தன் சினம் கண்டு அஞ்சாது பாய்ந்த ஆயனைக் கூரிய கொம்பால் குத்திக் குலைக்கும் காட்சியைக் காண்! தன் தந்தை துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியை இருள் என்று பாராமல் இரவில் வந்து தலையைத் திருகிக் கொன்ற அசுவத்தா மாவைப் போல் காட்சி அளிக்கிறது. ஆயர்கள் மாலைப் பொழுதில் ஊதும் இக்குழலோசை, அழகிய மாலை அணிந்த நம் காதலன் மணம் செய்ய வரும் நல்ல நிமித்தமாகும். கண்ணியும் குழலும் கொண்டு, தோள்மேல் தாங்கிய கோல்மீது கைவைத்து நிற்கும் அந்த ஆயனுக்கு அண்மையில் நிற்கும் எருதை அடக்குவார்க்கே எம் கருங்கூந்தலாளை மணம் செய்து தருவோம். அதனால் மதம் மிக்க யானையைக் காட்டிலும் அஞ்சாத காளையை நீ வென்று அடக்கினால், இவளை நீ மணக்கலாம் என்றாள். இந்தக்காளையை அடக்கி வெற்றிகொள்பவர் எனக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்று ஆண்மை கூறும் நம் காதலன், ஒருநாள் நம் காளையை அடக்கி நம்மை மணந்து கொள்வது நிச்சயம். அது நிகழாமல் போவது இல்லை. அதற்கு ஏற்றவகையில் நம் கண்களும் அவனை வரவேற்று விருந்தளித்தன காண்! எருதுகளும் இளைத்து விட்டன; இளைஞர்களும் புண்ணுற்றனர். வந்திருந்த ஆயர்குல மங்கையர், தத்தம் காதலரோடு, முல்லை மலர்க் காட்டுக்குள் புகுந்துவிட்டனர்; நாமும் அவ்வாறே செல்வோம்; வருக!
All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, PG & Research Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.

0 Comments