நற்றிணை
நற்றிணை :
நற்றிணை என்பது எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக எண்ணப்படும் சங்க இலக்கியத் தொகுப்பாகும்.
இது அகப்பொருள் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டு, பல்வேறு புலவர்களால் பாடப்பட்டு அக்கால மக்களின் காதல் வாழ்வு, இயற்கை வர்ணனைகள், சமூகப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
"நல்ல திணை" என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இதன் பாடல்கள் தலைவன் தலைவி இடையிலான காதல், பிரிவு, ஊடல் போன்ற அக உணர்வுகளையும், சங்ககால மக்களின் உணவு முறை, உடை, நம்பிக்கைகள் போன்ற சமூகக் கூறுகளையும் எளிய நேரடியான மொழியில் உணர்த்துகின்றன.
பொருத்தமான உவமைகளையும், உருவகங்களையும் கையாண்டுள்ள புலவர்களின் கவித்திறன் சங்க இலக்கிய மரபைப் பின்பற்றி அமைந்துள்ளது; சுருங்கக் கூறின், நற்றிணை சங்க இலக்கியத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகத் திகழ்ந்து, அக்கால மக்களின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் தமிழ் இலக்கியப் பொக்கிஷமாகும்
நற்றிணை (பாடல் -1)
திணை: குறிஞ்சி
எழுதியவர்: கபிலர்
தலைவி கூற்று
(தலைவனின் பிரிவைத் தலைவிக்குத் தோழி உணர்த்துகையில் தலைவியின் கூற்று இது)
பாடல் 01 :
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே’
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
பொருள் :
என் காதலர் சொன்ன சொல் காப்பவர்; எப்போதும் இனிமையானவர்; என்றும் என் தோள்களைப் பிரியாதவர்; குளிர்தாமரையின் தாதுக்களை ஊதி உயர்ந்த மலையிலிருக்கிற சந்தன மரத்தில் வண்டு சேர்த்த தித்தித்தத் தேன் போல உயர்ந்தது அவர் காதல்; நீர் இல்லாமல் உலகம் இல்லை; அவர் இல்லாமல் நானில்லை! விரும்பி நேசிக்கிறார். என் நெற்றியில் படரும் பிரிவுத் துயர்(பசலை) பார்த்துப் பயப்படுவார்! தான் செய்வதை உணராது என்னைப் பிரிந்துச் சிறுமை அடைவாரோ!
(தலைவன் தன்னைவிட்டுப் பிரிய மாட்டான் என்பதே இதன் உட்பொருள்)
* * * * *
நற்றிணை (பாடல் -15)
திணை: நெய்தல்
எழுதியவர்: அறிவுடைநம்பி.
தோழி கூற்று : வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு,
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே . . . .[05]
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! . . . .[10]
பொருள் : முழங்குகின்ற அலைகொணர்ந்து கொழித்த பெரிய எக்கர் மணலை நுணங்கிய துகிலின் நுடக்கத்தைப் போலாக; மிகுதி படக் காற்றுத் தூற்றாநிற்கும்; நீர்மிக்க வலிய கடற்கரைத் தலைவனே! ; பூப்போன்ற எமது தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்து வைத்தும் நீ அறிந்தனையல்லையாகலின்; யாம் நினக்கு உடம்படுதலையுடைய எம்முள்ளத்தில் வருத்தமுற அதனையேற்று; குற்றமற்ற கற்பினையுடைய மடவாளொருத்தி; தன் குழவியைப் பலிகொடுப்ப வாங்குதலும் அவள் அதனைக் கைவிட்டாற்போல; முன்னாளின் முதற்கொண்டு எம்முடன் வளர்ந்துவந்த நாணும் விட்டேம். இவ்வூர் அலர்க இனி இவ்வூர் அலர் எழுவதாக;
நற்றிணை (பாடல் -248)
திணை: முல்லை
எழுதியவர்: காசிபன் கீரனார்.
தோழி கூற்று : பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன் - இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், . . . . [05]
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!
பொருள் : மேகமே! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் "சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம்" என்று கூறிச் சென்றார்; அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; நீடு வாழ்வாயாக!
நற்றிணை (பாடல் - 300)
திணை: மருதம்
எழுதியவர் : பரணர்
பாடல் 300 :
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்-
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே.
பொருள் :
நெய்வடிந்தாலொத்த பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தையுடைய பாணர் தலைவனே!; விளங்குகின்ற தொடியணிந்த அரசகுமாரி சினங்கொண்டவுடன் அவ்விடத்தில்; மடப்பத்தையுடைய தோழியர் குழாம் கைதொழுது இறைஞ்சினாற்போல; மிக்க காற்று மோதுதலானே ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்காநிற்கும்; தண்ணிய துறையையுடைய ஊரன் ஏனையொருத்திக்குப் பரியமளிக்க வேண்டிச் செல்லுவான் இடையே எம்மைக் காண்டலானே சிறிய வளையினையுடைய இவட்குரிய விலை இதுவென்று; தன் பெரிய தேரை அலங்கரித்து எமது முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறொரு பரத்தையின் மனையகம் நாடிச் சென்றொழிந்தனன் கண்டாய்; அவனது தேருடனே வந்த நீயும் அவன் பின்னே செல்லாது போரிலே பெரிய புண்ணால் அழகுபெற்ற 'தழும்பன்' என்பவனது ஊணூரிடத்துள்ள; பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றல்போல; எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் பனையோலையைத் தொட்டு நிற்கின்றனை; வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு.
All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, PG & Research Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.

0 Comments