Article No : NPIJT021026
தலைப்பு : திருவெங்கைக்கோவையில் இலக்கியநயம்.
ஆய்வாளர் : முனைவர் கு. சுபாஷிணி, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை - 600 002
முன்னுரை :
இலக்கியம் காலத்தின் தேவைகேற்பத் தோற்றம் பெறுகிறது. தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இலக்கிய வகைகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலங்களில் பக்தி இலக்கிய வகைக்கென்று தனிச் சிறப்பு உண்டு. பக்தி இலக்கியக் காலத்தில் திருமுறை இலக்கியங்களும் திவ்வியப் பிரபந்த இலக்கியங்களும் தோன்றித் தமிழ் மொழியைச் செழுமையுறச் செய்தன. பக்தி இலக்கிய வளர்ச்சிக் காலத்தின் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் அருணகிரிநாதர், வள்ளலார், குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலானோர் தோன்றிப் பக்தி இலக்கியங்களைச் செழுமையுறப் படைத்தளித்தனர்.
கி.பி 17-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசாமி தேசிகருக்கு மகனாகப் பிறந்த சிவப்பிரகாசர் 32-ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்தவர். தன்னை ஆதரித்த வள்ளல் திருமுதுகுன்றம் (பழமலை) அருகிலுள்ள துறைமங்கலத்தில் இருந்த இலிங்க ரெட்டியாரின் புதல்வர் அண்ணாமலை செட்டியாரால் ஆதரிக்கப் பெற்று சிலகாலம் அங்குத் தங்கியிருந்தவர். அதனால் துறை மங்கலம் என்னும் ஊர்ப்பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டவர். மயிலாடுதுறையில் உள்ள தர்மபுர ஆதீனம், பேரூர் சாந்தலிங்க சுவாமிமடம், சிவஞான பால்ய சுவாமிகள் இருந்த மயிலம், பொம்மபுர ஆதின மடம் ஆகிய மடங்களுக்குச் சென்று தங்கியிருந்து திருவெங்கைக் கோவை, திருவெங்கை உலா, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை அலங்காரம், பிரபலிங்க லீலை, பழமலை அந்தாதி (திருமுதுகுன்றம்), நன்னெறி, நீரோட்டயமக அந்தாதி (திருச்செந்தூர் முருகனைப் பற்றியது), நால்வர் நான்மணிமாலை, உள்ளிட்ட 32 நூல்களை இயற்றியவர்.
இவர் பாடிய திருத்தலமான திருவெங்கை என்னும் ஊர் மூன்று இடங்களில் உள்ளன. ஒன்று: பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் (திருவெங்கை) ஊராட்சியில் உள்ள வாலீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்), தாயார் வாலாம்பிகை (பிரிசுந்தநாயகி) திருக்கோயில் அமைந்துள்ள ஊர். இரண்டாவதாக அரியலூர் மாவட்டத்தின் செந்துறை வட்டத்தில் வெங்கனூர் எனும் ஊர் உள்ளது. இங்கு விருதாச்சலேஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்குள்ள 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் "திருவெங்கை" மாநகர் என்ற குறிப்பு உள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத்துக்கு உட்பட்ட மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கந்தூர் (வெங்கை நகர்) என்ற ஊரும் உள்ளது. இவ்வூர் மயிலம் பொம்மபுர ஆதினத்துக்கு உட்பட்ட (பொம்மய பாளையம்) பொம்மையார் பாளையம் திருமடத்திற்கு அருகில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிற்றிலக்கிய நூல்களுள் கோவை இலக்கியங்கள் "கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து 20-ம் நூற்றாண்டு வரை தோன்றியுள்ள 60 நூல்களும் ஆசிரியர், ஆண்டு பெயர்கள் தெரியாத 14 நூல்களும் ஒரு துறைக்கோவை ஏழு நூல்களும் வருக்கக்கோவை (நெல்லை வருக்கக்கோவை - வீரை அம்பிகாபதி, 16ஆம் நூற்றாண்டு) எனும் பெயரில் பத்து நூல்களும் கிடைத்துள்ளன" (இரா.கண்ணன்). இதில் திருவெங்கைக் கோவை, களவியல் - 17, வரைவியல் - 08, கற்பியல் - 07 ஆகிய 32 துறைகளும், 26 கிளவித்தொகைகளும், 426 கட்டளைக் கலித்துறைகளும் இடம்பெற்றுள்ளன.
சிவப்பிரகாசர் வீர சைவ சமயத்தைச் சேர்ந்தவர். அவர் சிவபெருமான் மீது அளவற்ற அன்புகொண்டு பொருளார்ந்த பக்தி இலக்கியங்களைப் படைத்துத்தந்த சிறப்பிற்குரியவர். திருவெங்கைத் தலத்தைப் பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கியங்களுள் திருவெங்கைக்கோவை இலக்கிய, இலக்கணக் கூறுகளை நிறைவாகக் கொண்டு விளங்குகின்றன. அவற்றுள் இலக்கிய நயங்களான கற்பனை நயம், உவமைநயம், உருவக நயம், அங்கத நயம், சொல்நயம் மற்றும் பொருள்நயம் ஆகியவற்றை எடுத்துரைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
கற்பனை நயம் :
இலக்கியத்தின் இனிமைக்கும் நிலைத்த பெருமைக்கும் காரணமாக அமைவது கற்பனை. இலக்கியப் படைப்பு வெற்றிபெற சில இடங்களில் கற்பனைகள் பெரும்பான்மையும் உதவுவது உண்டு. அவ்வகையில் “கற்பனைக் களஞ்சியம்” என்று அழைக்கப்படுகின்ற சிவப்பிரகாசர், தன் படைப்புகளில் நிறைவான கற்பனைகளைக் கையாண்டிருக்கிறார். சிவப்பிரகாசரின் கற்பனைகள் இயல்பாக அமைந்து இலக்கியத்தைச் சுவைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. திருவெங்கைக் கோவையில் ‘காட்சி’ என்னும் துறையில் அமைந்த பாடல் சிவப்பிரகாசரின் கற்பனைக்குச் சான்றாக அமைகிறது. தலைவன் தலைவியைக் காணும் இடத்தில் இயற்கைப் பொருள்களைக் கொண்டு பாடலை அமைத்திருக்கின்றார்.
பூவும் பழுத்த செழுந்தீங் கனியும் பொழியமுதம்
மேவுங் குடங்க ளிரண்டுட னேயிரு மீனுங்கொண்டு
சேவுந் தழகர் திருவெங்கை வாணர் சிலம்பின்மலர்
தூவும் பொழிலி லெதிர்ப்பட்ட தாலொரு தூமணியே (பா.எண். 1)
இப்பாடலில் அழகான கற்பனை வளத்தினை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறார். காளையை வாகனமாகக் கொண்டிருக்கும் திருவெங்கை இறைவனின் மலையைச் சார்ந்த பூஞ்சோலையில் ஒரு தூய்மைப் பொருந்திய மாணிக்க மணியானது பூவையும் கனியையும் அமுத கலசங்களையும் மீன்களையும் கொண்டு என் கண்களுக்குப் புலப்பட்டது என்னும் பொருள் அமைந்து சிறக்கிறது. தூய மாணிக்கமணி என்பது ஒளி பொருந்திய பெண்ணையும், தாமரை முகத்தையும், கனி உதடுகளையும், குடங்கள் மார்பினையும், மீன்கள் கண்களையும் உணர்த்தின. ‘காட்சி’ என்னும் துறையில் அமைந்த பாடலிலும் கற்பனை வளம் வெளிப்படுகிறது. “மண்ணோ, விரைச்சந்தன வரையோ, மலர் மாளிகையோ, விண்ணோ, வலைத்தன் புனலோ” (பா. எண்: 02) என்ற சொற்கள் செவிக்கு இன்பத்தைத் தருகின்றன. மேலும் இச்சொல்லாடல்கள் இதற்கு முந்தைய இறைஞானச் சிந்தனையாளர்களான சுந்தரர் (கற்பகத்தின் பூங்கொம்போ, காமன்தன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ) கம்பர் (மையோ, மரகதமோ, மழைமுகிலோ), பயன்படுத்திய சொல்லாடல் போல் அமைந்து ஒரு மரபு தொடர்ச்சியையும் நமக்கு நினைவுப்படுத்துகிறது.
உவமை நயம் :
உவமை இலக்கியத்தின் இனிமைக்கும் அழகிற்கும் காரணமாக அமைகிறது. ஒப்புமைப்படுத்தலில் அமைந்து வரும் உவமைகள் இலக்கியத்தைப் புரிந்து கொள்ளவும் இனிமையை அனுபவிக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. உவமை, அணிகளுள் தலைமைச் சான்ற அணியாகும். ஒன்றோடு ஒன்றை ஒப்புமைப்படுத்தும் நிலையில் உவமை உடனடியான இலக்கிய இன்பத்தை நல்குகின்ற காரணத்தால் தலைமையான அணியாகக் கொள்ளப்பட்டது. சிவப்பிரகாசர் திருவெங்கைக் கோவையில் உவமையை நிறைவாகக் கையாண்டிருக்கிறார்.
முழுதலங் கார மழுவோன் றிருவெங்கை மொய்குழலுன்
பழுதறுங் கொங்கைக் குடைதுய ராற்பனி மாமலயம்
அழுதகண் ணீரைப் பொருநையென் பாரதன் வெய்துயிர்ப்பை
எழுதருந் தென்ற லெனவே யுலக ரியம்புவரே(பா.எண்.11)
தலைவியின் எழில் நலத்தைக் கூறும்போது, பொதிகை மலையானது உன்னுடைய குற்றமற்ற தனங்களுக்கு உடைந்து அழுத கண்ணீரைப் பொருநையாறு எனவும் அதன் வெய்துயிர்ப்பைத் தென்றல் காற்று எனவும் இவ்வுலகத்தார் கூறுகின்றனர் எனப் பொருள் அமைகிறது. இப்பாடலில் கண்ணீர் பொருநை ஆறாகவும் வெய்துயிர்ப்பு (நெட்டுயிர்ப்பு) தென்றல் காற்றாகவும் கூறப்பட்டுள்ளன. இதுபோன்ற உவமை நயங்கள், நளவெண்பா (மோட்டு இளங்கொங்கைக்கு மாட்டாது இடை என்று நூபுரங்கள் புலம்புமாம் பூண்டு) குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கியங்களிலும் காணலாம். ‘குறிப்பறிதல்’ எனும் துறையிலமைந்த மற்றொரு பாடலில் (5), திருவெங்கைப் பழமலை நாதரின் சிறப்பினை ஆராயும் முனிவர் தாமே சாபம் தருவதும் நிவர்த்தி செய்வதுமான செயல்களைச் செய்வதுபோல் இவளின் பார்வை நோயாகவும் மருந்தாகவும் இருக்கிறது என்னும் பக்தியில் ஒப்புமைப்படுத்தும் பொருட்டும் அழகுபடுத்தும் பொருட்டும் உவமை நயம் பயின்று வந்திருக்கிறது. இயற்கைப் புணர்ச்சியின்கண் தலைவன் தலைவியை புகழ்வதில் நிலவினை நோக்கிய கூற்றாக அமைந்து உவமைநயம் பயக்கிறது.
புறந்தாழ் சூழலுமை பங்காளர் வெங்கை புரத்தர்வெற்பிற்
குறைந்தா லிவணுத லொவ்வாய் நினது குறைநிறைந்தாற்
சிறந்தா யிழைமுக மொவ்வாய் விளங்குஞ் செழுங்கலையால்
நிறைந்தாலென் னன்றிக் குறைந்தாலென் னெங்கட்கு நீமதியே (பா. எண். 22)
நிலவே நீ ஒளி குறைந்த காலத்தில் இவளின் நுதலை ஒத்து விளங்குகின்றாய், ஒளி நிறைந்த காலத்தில் இவளின் முகத்தை ஒத்திருக்கிறாய். அதனால் உன் தேய்தல் நிறைதலில் எனக்கு நீ நிலவுதான் (பெண்தான்). இதில் நிலவின் தேய்தல் நெற்றியாகவும் நிலவின் முழுமை பெண்ணின் முகமாகவும் உவமிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மற்றொரு பாடலில் தலைவனின் ஊரும் தலையின் ஊரும் ஒன்றிணைந்து தோன்றும் என்னும் தலைவனின் கூற்றில் உவமையணி அழகாக வெளிப்படுகிறது.
சீறாக் கயல்விழி மாதேதென் வெங்கைச் செழும்பதியான்
கூறாய்த் திகழ்திரு மேனியு மாதுமை கூறுடலும்
வேறாய்ப் புணர்வதென் னோவந்துன் சாரல் வியன்பதியும்
மாறாப் பழனத் தெமதூரு மொன்றி மருவுறுமே(பா. எண். 28)
திருவெங்கைத் தலம் சிவனின் திருமேனியும் உமையின் திருமேனியும் ஒன்றாக இருப்பதுபோல் உன் ஊரும் என் ஊரும் ஒன்றாகுமே தவிர பிரிந்திருக்காது என உவமைப் பொருள் மிளிரப் பாடல் அமைகிறது.
உருவக நயம் :
இலக்கியச் சுவையை மிகுவிக்கும் கூறுகளுள் ஒன்று உருவகம், “உவமைவேறு பொருள்வேறு என்று கூறாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது இதன்பாற்படும்” (தண்டி- 36). திருவெங்கைக் கோவையில் சிலேடை உருவகம், முற்று உருவகம், அநேகாங்க உருவகம் என்னும் உருவகங்கள் பயின்ற வந்துள்ளன. இதில் சிலேடை உருவகம் என்பது பலவற்றிற்கும் பொருந்தும் படியான சொற்களால் உருவகம் செய்வது சிலேடை உருவகம்.
“பூவும் பழுத்த செழுந்தீக் கனியும் பொழியமுதம்”(பா.எண் 1)
மேற்கண்ட பாடலில் தலைவியை, அவள் நின்ற காட்சியைக் கூறவந்த ஆசிரியர் சிலேடையாக இருபொருள்படும் நிலையில் சொற்களை நிறுத்திச் சிலேடை உருவகங்களை அமைத்திருக்கிறார். இதில், தூய்மையான மாணிக்கமானது கனிந்த செழுமையாகிய மதுரம் பொருந்திய கனியையும் சொரிகின்ற பால் நிரம்பிய இரண்டு கலசங்களோடு இரண்டு மீன்களையும் ஏந்திக் கொண்டு எதிர்ப்பட்டது என்றவாறு அமைகிறது.
இப்பாடலில் தூமணி என்பது தலைவியையும் ஒளி வீசும் மாணிக்கத்தையும், பூ என்பது முகத்தையும் பொய்கையிலுள்ள பூவையும், கனி என்பது அங்கு கனிந்துள்ள கனியையும் அவள் இதழ்களையும், குடங்கள் என்பது மேவிய மலையையும் அவள் முலைகளையும், மீன்கள் என்பது அவள் கண்களையும் பொய்கையில் இருக்கும் மீன்களையும் உணர்த்தின. இதே போன்ற மற்றொரு பாடல் முற்று உருவகத்தில் அமைந்து இலக்கிய இன்பத்தைத் தருகின்றன. முற்று உருவகம் என்பது பல உறுப்புகளை உடைய பொருளையும் அதன் உறுப்புகளையும் ஏற்ற இடத்தொடும் பிறவற்றொடும் முழுமையாக உருவகம் செய்வது.
முகையே முலைசெழும் போதே முகமலர் மூசுவண்டின்
தொகையே குழல்செந் தளிரே யடிநற் சுவைக்கனியே
நகையே யிதழ்திரு வெங்கைபுரேசர்கைந் நவ்விமிகும்
பகையே யெனுங்க ணிவரே யிறைசொன்ன பைங்கொடியே (பா. எண். 55)
இப்பாடலில் பெண் பூங்கொடியாகவும் தனங்கள் தாமரை மொட்டுகளாகவும், முகம் தாமரை மலராகவும், கூந்தல் வண்டின் கூட்டமாகவும், பாதங்கள் தளிர்களாகவும், இதழ்கள் இனிய சுவையுடைய கனிகளாகவும் எனப் பாடல் முழுதும் தலைவியின் அங்கங்கள், முழுதும் உருவகங்களால் கூறப்பட்டுள்ளன. மற்றொரு பாடல் அனேக உருவகத்தில் அமைந்து இலக்கிய இன்பத்தைத் தருகின்றன. அனேக உருவகம் என்பது ஒரு பொருளின் பல்வேறு உறுப்புகளை உருவகம் செய்து கூறுவது. குறியிடத்து துய்த்து நீங்குழி தலைவியைக் கண்ட தோழி கூறுவதாக வரும் பாடலில்,
இயலோடு மல்குந் திருவெங்கை வாண ரிமயவெற்பிற்
கயலோடு வள்ளைக் கொடியோடு மோர்பைங் கமுகணங்கும்
புயலோடு நல்லிள நீரோடு நின்று புடை பெயருஞ்
செயலோடு நிற்பவிங் கின்றுகண் டேனொரு தீங்கரும்பே (பா. எண்.130)
திருவெங்கை நாதரின் மலையில் ஒரு கரும்பானது கயல், வள்ளைக்கொடி, மேகம், இளநீர், என்பவற்றோடு இன்று நிற்கக் கண்டேன். இது என்ன வியப்பு? என்றவாறாக அமைகிறது. பாடலில் தலைவியின் விழி கயல்களுக்கும், இடை வள்ளைக் கொடிக்கும், ஒரு பையங் கமுகு கழுத்துக்கும் கூந்தல் மேகத்திற்கும் (மேகம் ஒத்த கருங்கூந்தல்) நகில் (மார்பு) இளநீருக்கும் உருவகிக்கப்பட்டு தலைவியின் அங்கங்கள் அனைத்தும் உருவகிக்கப்பட்டமையை நோக்கலாம்.
அங்கத நயம் :
எள்ளி நகையாடுதல் அங்கதம். பொருள் உணர்த்தும் உத்திகளுள் இதுவும் ஒன்றாகும். ஒரு பொருளை எள்ளி அதன் மதிப்பை இறக்கிவிடும் இலக்கியக்கலை அங்கதம். அது வேடிக்கை வெறுப்புணர்ச்சி, மட்டந்தட்டுதல், நிந்தித்தல் ஆகிய நோக்குகளில் இயங்கும். (Peter Westland, Litracy appercitation, pg.47) திருவெங்கைக் கோவையில் இடம்பெறும் பாடல் அங்கதச் சுவையில் அமைந்திருக்கின்றன.
கடைக்கண் சிவந்தித ழொன்றே வெளுப்பக் கலவையினுள்
இடைக்கண் மெலிவு தருங்கொங்கை மேலது வேயழிய
விடைக்கண் விரும்பி யுறைவார் திருவெங்கை வெற்பிடத்திற்
தொடைக்கண் மலர்க்குழ லாய்சுனை யாதினுட் டோய்ந்தனையே (பா. எண். 68)
தலைவனிடம் கூடலில் மகிழ்வு கொண்டு வரும் தலைவியிடம் தோழி, நீ அச்சுனையில் உடல் வேறுபட இவ்வாறு நீராடி வருகிறாய் என்று எள்ளி நகையாடுகிறாள். தலைவி தலைவனுடன் உறவு கொண்டு உடல் வேறுபட வந்திருப்பதை அங்கத உணர்வு தோன்றுமாறு தோழி கூறுகின்றாள்.
சொல் நயம் :
செய்யுளில் ஒரு சொல்லுக்கு இரண்டு மூன்று பொருள்படுமாறு அமைப்பதனைச் சொல் விளையாட்டு என்பர். இதனைச் சொல்நயம் எனலாம்.
சொன்மாது தன்புகழ் யாழிலிட் டேத்தித் தொழுமிமய
நன்மாது பங்கர் திருவெங்கை வாணர்நன் னாடனையாய்
என்மாது சென்ற விடமே தறிந்தில னின்முழுதும்
பொன்மாது சென்ற மனைபோற் பொலிவறப் புல்லென்றதே (பா. எண். 328)
சிவப்பிரகாசர் மாது என்னும் சொல்லைக் கொண்டு சொல் விளையாடல் நடத்தியுள்ளார். மாது என்னும் சொல் செய்யுளில் முன் அடையால் கலைமகள், மலைமகள், தலைமகள், திருமகள் என்னும் பல பொருள்களைத் தருவதாக அமைந்திருக்கின்றது.
பழமொழி ஆட்சி நயம் :
பழமொழி அனுபவத்தின் வாயிலாக விளையும் மொழியாகும். நீண்ட காலம் வாழ்ந்து பல்வேறு செயல்கள் மூலமாக வாழ்வின் போக்கினை உணர்ந்து கூறிய அனுபவ மொழிகளே பழமொழிகளாக விளங்குகின்றன. சிவப்பிரகாசர் தன் காலத்தில் வழங்கி வந்த பழமொழிகளைத் தான் படைத்த இலக்கியங்களில் பயன்படுத்தியுள்ளார்.
வளங்கனி வெங்கைப் பழமை வாணர் வரையினவர்
உளங்கனி வெண்மருப் போர்மத யானை யொளிர்நுதலாய்
களங்கனி யன்ன மடப்பிடி வாயிற் கனிந்துவிழும்
விளங்கனி நல்கக்கண்டானாரஃ துண்ணும் விளங்கனியே (பா. எண். 126)
‘யானை உண்ட விளங்கனி போல’ என்னும் பழமொழி இப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யானை உண்ட விளங்கனியானது அதன் வயிற்றில் சென்று தங்கி உள்ளீடு முழுவதும் செறித்த பின்பு ஓடுமட்டும் அதே முகத்தால் வெளிப்படுவது போல தலைவனும் தன் உள்ளீடாகிய உயிரில்லாமல் வெற்றுடம்பாயினான் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
அருங்கண்ணி வெண்மதி சூடும் பிரான்வெங்கை யாவிமலர்க்
கருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த
பெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதில்
மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே (பா. எண். 229)
‘அன்னம் பிடிக்கப்போய் காக்கை அகப்பட்டது’ என்னும் புதிய வழக்கில் இல்லாத பழமொழி இப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கானது போல என்னும் பழமொழியின் மாற்றாக இப்பழமொழித் தோற்றம் கொள்கிறது. தலைவியைப் பிறர் பெண் பார்க்க வரும் நிலையில் இப்பழமொழி ஆளப்பட்டுள்ளது. கங்கையில் அன்னத்தைக் குறிவைத்த வலையில் நீர்க்காகம் சிக்கியது போல பிறர் நமது வீட்டை நெருங்கினார் என்பதைக் கேட்டு என் உயிர் இன்னும் என் உடலில் தங்கியிருக்கிறதே என்றவாறாகப் பாடற்பொருள் அமைகிறது.
சொல், பொருள், தொடர் நயங்கள் :
திருவெங்கைக்கோவை முழுவதும் சொல், பொருள், தொடர், நயங்கள் மிளிர்கின்றன. பாவிரி, பூவிரி, காவிரி, மாவிரி (பா எண் 336), சங்கலை ஒண்புனல், செங்கலைப்பொன், பொங்கலைத் தண்புனல், அங்கலைத் திங்கள் (337) நோக்ககுழையும், மோக்க குழையும், தூக்கக்குழையும், தாக்கக்குழையும் (338) இப்பாடலில் முதல் அடியில் நோக்க என்ற சொல்லாடைப் பயன்படுத்தியதால் அடுத்த அடியாக “மோக்க” என்ற திரிசொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.
வேலையில் தோன்றும் நஞ்சுண்டோன் (353) திருப்பாற்கடலில் கடைந்த போது வந்த நஞ்சை உண்ட சிவன் என்ற பொருளும் சேய் விளையாடும் திரு மார்பர் - இவன் மார்பில் முருகன் குழந்தையாக விளையாடியது, “புலியோடு அரவு தொழுங் கூத்துடையார்”,(347) புலித்தோலையும் பாம்பினையும் அணிந்தவன், “கூனம் பிறையொன்று அணிவார்” (பிறை அணைந்த சிவன்), “ஊனும் குருதியும் தோய் வடிவேலன்” (351), கீற்றுப்பிறையார் (335), செருக்கிடந்த மதிவேணியர் (366), கைக்கால சூலத்தார் (356), ஊனெழுவாய் மழு வெங்கயர் (360), அல்லஞ்சு கண்டர் (364), கருமா மணிகண்டர் (378), பைந்தலை நாகமணிவோன் (395) போன்ற சொல்லாடல்களும் தொடர்களும் வந்து சிவபுராணம் திருவிளையாடல்களையும் இலக்கிய இன்பத்தையும் தருகின்றன.
சுனைநயப்புரைத்தல் எனும் துறைகள் அமைந்த பாடல் ஒன்றில் சொல் நயமும் பொருள் நயமும் தொடர் நயமும் மிளிர்வதைக் காணலாம்.
“கடைக்கண் சிவந்தித ழொன்றே வெறுப்புக் கலவையினுள்
கடைக்கண் மெலிவு தருங்கொங்கை மேலது வேயழிய
விடைக்கண் விரும்பி யுறைவார் திருவெங்கை வெற்பிடத்திற்
றொடைக்கண் மலர்க்குழ லாய்சுனை யாதினுட் டோய்ந்தனையே” (பா.எண் 68)
களவில் கூடுதலால் நிகழும் தன்மைகளைப் புணர்ச்சியில் இறுகித் தழுவதால் கண் சிவக்கும், இதழ் பருகுவதால் வெளுக்கும், இடைதாங்கி நிற்கும் கொங்கைகள் தளரும் இலக்கியம் நயம் அமைந்து திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டுகிறது. செவிலிப் பாங்கியை வினாதல் என்னும் துறையில் அமைந்த செய்யுளில்,
“சொன்மாது, என்மாது பொன்மாது, நன்மாது” (328), போன்ற சொல்லாடல்களில் சொன்மாது (சொல்+மாது) என்பவர் சரஸ்வதி, சொல் பிறப்பிடம் நாக்கு (கலை, கல்வி, கலைமகள்) என்மாது என்பது என்னுடைய பெண் (தலைவி), பொன்மாது என்பது திருமகள் (செல்வமகள்), நன்மாது என்பது உமாதேவி (தன் இடவாகத்தில் வைத்துள்ள பெண், (மாதுபங்கன், உமா மகேஸ்வரன், அரிவையும் பாகத்தான்) இவ்வாறு திருவெங்கைக் கோவையில் இலக்கிய நயம் நிறைந்து புராணச் செய்திகளுக்கும் இயற்கை அழகியலுக்கும் பெண்ணின் எழிலுக்கும் இறை உணர்விற்கும் இயல்புப்படுத்தி அழகுற இயற்றியுள்ளார்.
முடிவுரை :
திருவெங்கைக் கோவையின் இலக்கியச் சுவையை மிகுவிக்கும் வண்ணம் ஆசிரியர் பயன்படுத்தியுள்ள இலக்கிய நயங்கள் சிறப்புடையனவாக விளங்குகின்றன. சிவப்பிரகாசரின் இலக்கியப் புலமையை அறிந்துகொள்ள அவர் படைத்த இலக்கியங்கள் சான்றாக நின்றிலங்குகின்றன.
பார்வை நூல்கள் :
- சிவப்பிரகாசர், திருவெங்கைக் கோவை, இராமானந்தயோகிகள் (உ.ஆ), க. சீனிவாசன் (ப.ஆ), மீனா கோபால் பதிப்பு, சென்னை, 1999.
- இராமலிங்கத்தம்பிரான்.கொ., (வி.உ.), தண்டியலங்காரம், கழக வெளியீடு, சென்னை, 1993.
- சிவலிங்கனார், ஆ., தமிழ் இலக்கண உணர்வுகள், கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, 2005.
- சுப்பிரமணியன். ச,வே., (ப,ஆ,), தமிழ் இலக்கணநூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2007.
- பொற்கோ, இலக்கண உலகில் புதிய பார்வை (தொகுதி 1), 2000, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, சென்னை.
- கண்ணன்.இரா சிற்றிலக்கிய ஆராய்ச்சி (முதல் தொகுதி) அப்பர் பதிப்பகம், 2002, சென்னை- 55.

0 Comments