புதுச்சேரி ஆரோவில் கடற்கரை என்றாலே அது ஒரு தனி உலகம்தான். பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உலா வரும் இடம் அது. கடல் அலைகள் ஓயாமல் வந்து கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும். கடற்கரையை ஒட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை உடல் நலனுக்காகவும், சக்கரைக் குறைவதற்காகவும் நடை பயணம் செய்வர். கடற்கரை மணற்பரப்பில் சிறு சிறு வியாபாரிகளின் விற்பனைக் கூடங்கள் அனைத்தும் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிகள்.

அன்றும் அப்படித்தான். சூடான முறுக்கு, சுண்டல் என்று கூவிக்கொண்டே வியாபாரம் செய்தவர் பலர். கொஞ்சம் தள்ளி ஒரு திருநங்கைக் கைத்தட்டியபடி போவோர் வருவோரிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள். அங்கே டீ பிஸ்கட், சுண்டல், மாலை நேரங்களில் பஞ்ஜி, போண்டா, வடை போடும் கடை வைத்திருந்தார் அப்துல் ரஹ்மான். எல்லோரும் அவரை அன்பாக பாய் என்றுதான் அழைப்பார்கள். அவரது கடைக்கு அடிக்கடி அமீர் வந்து போவான். அவனுக்கு 12 வயதுதான் இருக்கும்.

குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் பள்ளியில் படித்துக் கொண்டே மாலை நேரத்தில் கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வந்தான். அடிக்கடி பாய் கடைக்கு வந்து தேநீர் அருந்துவது வழக்கம். ஒருநாள் அமீர், கடைக்கார பாயிடம் “ஐயா நீங்க இவ்வளவு சிறிய கடை வைத்துக் கொண்டு எப்படி குடும்பம் நடத்துகின்றீர்கள்” என்று கேட்டான். பாய் அவனைப் பார்த்து சிரித்து “தம்பி கடை சிறியதாக இருக்கலாம். ஆனால் மனசு பெரியதாக இருக்கவேண்டும்.” என்றார். அது எப்படி என்றான் அமீர்.

அதற்கு பாய், கையில் இருப்பதைப் பகிர்ந்து கொள்வது மனசைப் பெரிதாக்கும் என்றார். அமீர் அமைதியாக அவரைப் பார்த்தான். பாய் ஒரு சுண்டல் பொட்டலத்தை அவனிடம் கொடுத்தார். இதை எடுத்துக் கொண்டு போய் அங்கே உட்கார்ந்திருக்கும் அந்தத் தம்பியிடம் கொடு என்றார். அமீர் திரும்பிப் பார்த்தான். கடற்கரை மணலில் ஒரு சிறுவன் பசியோடு உட்கார்ந்திருந்தான். அமீர் சுண்டலை அவனிடம் கொடுத்தான். பாய் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்று மாலை கடல் வழக்கத்தைவிட சற்றுச் சீற்றத்துடன் காணப்பட்டது. குழந்தைகளும் பெரியவர்களும் கடலில் விளையாடிக் கொண்டும் நீச்சல் அடித்துக் கொண்டு இருந்தனர். கையில் பலூனை வைத்துக் கொண்டு அமீர் கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தான். திடீரென்று பெரிய அலை ஒன்று கரையை நோக்கி வேகமாக வந்தது. ஐயோ என் பையன் என்று ஒரு தாயின் அலறல் சப்தம் கேட்டது. ஒரு சிறு குழந்தைக் கடலலையில் சிக்கியிருந்தான். எல்லோரும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தனர். அலை அவனை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. ஒரு கணம் கூட்டமே உறைந்து போனது. என்ன செய்வதென்றே தெரியாமல் பலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த அமீர் ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் கையிலிருந்த பலூன்களைக் காற்றில் பறக்க விட்டு அந்தக் குழந்தையைக் காப்பாற்ற கடலில் இறங்கினான். அமீர் போகாதே என்று பாய் கத்தினார். ஆனால் அது அமீரின் காதுகளில் ஏனோ விழவில்லை.

எப்படியோ போராடி அந்தச் சிறுவனின் கைகளைத் தனது கைகளால் இறுகப் பற்றிக் கொண்டான் அமீர். அலைகள் மேலும் இருவரையும் உள்ளே இழுத்தது. இருப்பினும் தன் பலம் கொண்டு மட்டும் போராடி சில நிமிடங்களில் அந்தக் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து கரைக்கு வந்தான் அமீர். மக்கள் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். பலர் தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பயத்தால் அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைத் தாயிடம் ஒப்படைத்தான்.

கண்ணீர் மல்கிய அந்தத் தாய் “தம்பி உனக்கு கோடி புண்ணியம். என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய உன்னை நான் என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்;” என்றாள். அதற்கு அமீர் “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்றான். பாய் மெதுவாகச் சிரித்தபடி “அம்மா, மனித உயிருக்கு மதம் கிடையாது. உயிரைக் காப்பாற்றுவதுதான் மனித நேயம். நம்முடைய கைகள் பிறருக்கு உதவுவதற்காகத்தான் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்றார் என்றார். அந்த வார்த்தைகள் காற்றில் கலந்தன. அப்போது அவனுக்கு “நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்” என்ற குர்ஆனின் அழகிய போதனை நினைவிற்கு வந்தது. மேலும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதன் மகத்துவத்தைக் குர்ஆன் 5:32 எடுத்துரைக்கின்றது.

அந்த அம்மாள் “தம்பி, நீ சாமி போல வந்து காப்பாற்றவில்லையென்றால் நான் என் பிள்ளையைப் பார்த்தே இருக்க முடியாது” என்றாள். உடனே அமீர் அம்மா தாயே அப்படிச் சொல்லாதீர்கள். நான் தெய்வமல்ல, அல்லாவைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை. நான் ஒரு சாதாரண மனிதன்தான் என்றான் அமைதியாக. அந்தத் தாய் சில நொடிகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன, நீ ஒரு சாதாரண மனிதனா?” என்று கேட்டாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே. அமீர் அமைதியாக “ஆம் அம்மா. என்றான். “அப்படியென்றால் உன்னை இந்த அளவிற்கு மனித நேயத்தோடு, பிறருக்கு உதவுகின்ற உயரிய குணத்தோடு சிறப்பாக வளர்த்த உன் பெற்றோர்களுக்கும் அன்பு, பிறர் சினேகம், பிறருக்கு உதவும் மனப்பான்மை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்த உனது மார்க்கத்திற்கும் நான் தலைவணங்கி மகிழ்கின்றேன் என்றாள்.

தனது பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவனிடம் கொடுத்து “தம்பி இதனால உன் பலூன் விற்கும் தொழிலே பாதிப்புக்குள்ளானது. எனவே இந்தப் பணத்தை வைத்துக் கொள்” என்றாள். ஆனால் அமீர், “வேண்டாம் அம்மா” என்றான். அருகில் நின்றிருந்த பாய் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது கண்களில் பெருமிதம் காணப்பட்டது. அவர் மெதுவாக மனித நேயமிருந்தால் பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மை தானாகவே வந்து விடும் என்று கூறினார். கடலும் அமைதியாக அங்கு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தது. இருவரும் கடைக்கு வந்தனர்.

பாய் அவனிடம் ஒரு சுண்டல் பொட்டலத்தை நீட்டினார். இது என்ன பாய் என்றான் அமீர். நீ ஒரு உயிரைக் காப்பாற்றினாய். அதற்கு பரிசாகக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்றார். அப்படியானால்…. என்றான் அமீர். அந்த நேரத்தில் மீண்டும் அந்தத் திருநங்கை கைத்தட்டிக் கொண்டே அங்கே வந்தாள். அமீர் தன் கையிலிருந்த சுண்டல் பொட்டலத்தைப் பிரித்து கொஞ்சம் சுண்டலை அந்தத் திருநங்கையின் கையில் கொடுத்தான். பாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அமீர் நீ கடலில் ஒரு சிறுவனைக் காப்பாற்றினாய். இங்கே இன்னொருவரின் பசியைப் போக்குகின்றாய் என்றார். அமீர் சிரித்துக் கொண்டே “பாய் நீங்கள்தானே சொன்னீர்கள் கையில் இருப்பதைப் பகிர்ந்தால் மனசு பெரிதாகும்” என்று அதைத்தான் நான் செய்தேன் என்றான். கடல் மீண்டும் ஓசை எழுப்பியது. அந்த ஓசையில் ஒரு செய்தி இருந்தது. மதம் மனிதனை இறைவனிடம் அழைத்துச் செல்லட்டும். மனித நேயம் மனிதனை மனிதனிடம் அழைத்துச் செல்லட்டும். ஏனெனில் ஒரு உயிரைக் காப்பாற்றுவது ஒரு மனிதனைக் காப்பாற்றுவது மட்டுமல்ல மனித நேயத்தின் மீதான நம்பிக்கையையே காப்பாற்றுவதாகும். நாமும் மனித நேயம் காக்கும் மனிதனாய் வாழ உறுதியெடுப்போம் !.