Article No : NPIJT071126
தலைப்பு : சங்க இலக்கியத்தில் : இயற்கை வழிபாடு
ஆய்வாளர் : முனைவர் அ. அப்சர், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை - 600 014
பண்டைய கால சமூகம் இயற்கையோடு ஒன்றிய சமூகமாக இருந்தன. மக்கள் தங்கள் வாழ்வின் அனைத்து கூறுகளையும் இயற்கையை அடியொட்டியே வாழ்க்கையைக் கட்டமைத்துள்ளனர். இத்தகைய இயற்கையும் இயற்கைப் பொருட்களையும் எவ்வாறு வழிப்பட்டனர் என்பதை சங்க இலக்கியங்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்கப்பாடலில் ஐம்பூதம் :
சங்கப் பாடல்களில் ஐம்பூத அமைப்பும், ஆற்றலும் விளக்கப்படுகின்றன. இதனை,
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசம்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலை இயதீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பூத்து இயற்கை போல (புறம் 2 : 16)
என்னும் பாடலடிகள் ஐம்பூதங்களாகிய இயற்கையினைக் கூறுகிறது. நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகிய இயற்கைச் சக்திகளாக அமைந்துள்ளது. இயற்கை என்பதன் மூலம் இயற்கையும் அதைச் சார்ந்த அதன் தொடர்ச்சியாய் உள்ள மக்கள் வாழிடங்கள் அத்தனையும் உள்ளடக்கியதே வாழ்க்கை ஆகும். மேலும் பண்டைய இலக்கியங்கள் ஐம்பூதங்களை இணைத்துக் கூறுவதை ஒரு மரபாகவே கொண்டுள்ளன.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல் (குறுந் 3:1-2)
என்னும் உவமை கூறம்போதுகூட ஐம்பூதங்கள் இணைத்தே காட்டப் பெற்றுள்ளன. இவற்றை சங்கப்பாடல்கள் தெளிவாகச் சுட்டுகிறது.
இயற்கை வழிபாடு :
பண்டைய கால மக்கள் இயற்கையைத் தெய்வமாக வணங்கினர். இயற்கை வேறு, தெய்வம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றாகவே கலந்திருந்தன என்பதைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. ஆதிகால மனிதன், காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்தான். இயற்கை நிகழ்வுகளால் நேரிடும் துன்பங்களால் அல்லல்பட்டான். மனித வாழ்வில் அச்சம், பயம், துன்பம் உண்டானபோது பாதுகாப்பைத் தேடினான். வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இயற்கைத் தனக்குப் பாதுகாப்புத் தரும் என நம்பினான். இத்தகைய இயற்கை அழகினையே இறையாகக் கொண்டு வணங்கினான்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு (முருகு:1-2)
என்று அதிகாலை சூரியன் எழுவது முருகப்பெருமானின் தோற்றம் போன்றிருப்பதாகத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்படுகின்றார்.
இயற்கைப் பொருட்கள் :
இயற்கைப் பொருளான மலை, காடு, நீர், மரம் எனும் இவற்றிற்கு அடிப்படையான பொருளாக விளங்கும் சூரியன், சந்திரன், மழை, காற்று போன்றவற்றை மக்கள் தெய்வமாகப் போற்றி வணங்கியுள்ளனர். இதனை, ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும்
திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும்
மாமழைப் போற்றதும் மாமழைப் போற்றதும் (சிலம்பு:1-3)
என்னும் சிலப்பதிகாரப் பாடல் வரிகளால் அறியலாம். இளங்கோவடிகள் காப்பியத்தின் தொடக்கத்திலே இயற்கையைப் போற்றி எழுதியுள்ள நிலை இயற்கையின் மீது அக்கால மக்களுக்கு இருந்த ஈடுபாட்டையும், நம்பிக்கையும், வழிபாட்டினையும் புலப்படுத்துகிறது.
மழை வழிபாடு :
உலக உயிர்கள் செழித்து வளர்வதற்கு மழைப்பொழிவு அவசியமாகும். அதிக மழைப்பொழியும் காலமான கார்காலம் அதற்கு ஏற்றதாக இருந்து வருகிறது. இத்தகைய மழைப்பாழிவு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மழைப்பொழியாத போதும் பருவம் தவறிவிடும் போதும் உரிய காலத்தில் மழைப்பொழிவிற்காகக் காத்திருக்கும் மக்கள் அதற்கு, வேண்டி வழிபாடு செய்வது சங்கக்கால மரபாக இருந்தது. சங்க மக்கள் மழைச்சடங்கு நிகழ்த்தியுள்ளனர். மலையில் வாழும் மக்கள் ஒன்றுகூடி தெய்வத்திடம் வழிபாடு செய்து மழையை வேண்டினர் என்பதை,
குன்றக் குறவ னார்ப்பி னெழிலி
நுண்ப லழிதுளி பொழியும் நாட (ஐங்கு 25:1-2)
என்னும் ஐங்குறுநூற்றுப் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.
நீர் வழிபாடு :
நீர் வழிபாடு வேளாண்மையுடன் தொடர்புடையதாகும். நீர்வரும் ஆற்றினைத் தெய்வமாகக் கருதினர். பின்னர் தான் வணங்கும் தெய்வங்களையும் ஆற்றுடன் தொடர்புபடுத்தினர். ஆற்றைப் பெண்ணாக எண்ணி அவற்றைக் காவிரி, கங்கை, பொன்னி, போன்ற பல பெயர்களில் அழைத்தனர். ஆற்றுக்கு வழிபாடு, ஆடி மாதத்தில் பதினெட்டாம் தேதியன்று காவிரி ஆற்றங்கரையில் நடைபெறுகிறது. இதனை ’ஆடிப்பெருக்கு’ என்பர். பரிபாடல் வையைப்பாடல் ஆற்று வழிபாட்டைக் காணலாம். இதனை
புகை பூ ஆவி ஆரதனை அழல் பல ஏந்தி
நகையமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகை சாலும் வையை வரவு (பரி 6:11-12)
என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம். மேலும் நீரில் பல்வேறு பொருட்களைக் காணிக்கையாக விட்டு வழிபடும் நிலையும் இருந்துள்ளது. இது நம்பிக்கையாகவும் பார்க்கப்பட்டுள்ளது.
கடல் வழிபாடு :
எல்லா நீர்களையும் ஏற்கும் பெரிய கடற்பரப்பில் உறையும் தெய்வம் நீர் தெய்வங்களிலே மிகப்பெரிது எனப் போற்றி வணங்கப்படுகிறது. இத்தகைய பெருங்கடல் தெய்வத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுதல் இயற்கைப் பொருட்களிடத்து மனிதர்கள் கொண்டுள்ள மரியாதையும், மதிப்பையும் உணர்த்துகிறது. மேலும் இத்தகைய இயற்கையே தன்னுடைய வாழ்விற்கு அடிப்படை என்ற எண்ணத்திலும் அவற்றின் மேல் ஆணையிடுதல் உண்டு. என்பதை,
பெருங்கடற் தெய்வம் நீர்நோக்கித் தெளித்தென்
திருந்திழை மென்றோள் மணந்தவன் செய்த
என்னும் தலைவியின் கூற்றால் அறியமுடிகிறது. மேலும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு எடுத்த விழாவைப் பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. இதனை,
முந்நீர் விழாவின் நெடியோன் (புறம் 9:10)
என்ற பாடலடி மூலம் அறியலாம்.
இல்லுறை தெய்வ வழிபாடு :
சங்கக்கால மக்கள் தாம் வாழும் இல்லத்தில் தெய்வம் உறைவதாக எண்ணி அவற்றிற்கு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். மாலைக் காலத்தில் மகளிர் தம் வீட்டிலிருக்கும் தெய்வத்திற்கு விளக்கேற்றி நெல்லும், மலரும் துவி வழிப்பட்டதை,
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்ல லாவணம் மாலை அயர (நெடுதல் 43-44)
என்னும் நெடுநல்வாடையின் பாடலடிகள் மூலம் அறியலாம்.
காடுறை தெய்வ வழிபாடு :
பண்டைய மக்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் காடுகளின் வழியே செலவழித்துள்ளனர். காட்டினைத் தெய்வங்கள் புழங்கும் இடமாக எண்ணியுள்ளனர். மரம், செடி, கொடிகள், சோலைகள் ஆகிய இயற்கை வளங்களில் கடவுள் உறைவதாக எண்ணி அவற்றின் செய்திகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது.
காடும் காவும் கவின் பெறு துருத்தியும் (முருகு.223)
கடவுள் மரத்த முள்மிடை குடம்பை (அகம் 270:12)
என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.
மரம் உறை தெய்வ வழிபாடு :
மரங்களை தொடக்கக்காலத்தில் தெய்வமாகப் போற்றி வணங்கினர், இயற்கையோடு இயைந்த மர வழிபாடு தொடங்கியது, மரங்களையே தெய்வமாக மதித்து வழிபட்டு வந்த நிலை இருந்துள்ளது. பின்னர் நாகரிகம் வளர்ந்த நிலையில் மரங்களில் தெய்வம் குடிக்கொண்டிருப்பதை நம்பத் தொடங்கினர், இதனை, ’கடவுள் வாகை’ (பதிற்: 7.166) ’கடவுள் ஆலம்’ (புறம் 199:1) என்னும் பாடலடிகள் கூறகின்றன. மேலும் வேங்கை மரத்தை முருகனாக வழிபடும் மரபு இருந்துள்ளது. தெய்வம் உறையும் மரத்திற்கு மக்கள் விழா எடுக்கும் மரபு இருந்துள்ளன. மரங்களை வணங்குதல் பற்றி க.ப. அறவாணன் கூறுவதாவது,
”தமிழர் பண்டு தொட்டு அரசமரம், ஆலமரம், வேப்பமரம், கடம்பமரம், வாகைமரம், வில்வமரம், கொண்றைமரம் ஆகிய மரங்களை வணங்கி வருகின்றனர். இவை நீங்கலாக அவ்வக் கோயில்களில் இடம் பெற்றுள்ள தலவிருட்சங்களையும் வணங்குவர். மரத்தின் இலைகளையும் புனிதமாகப் போற்றுவர். தமிழர் வழிபாடு மரங்களுள் தலையானவை அரசமரமும் வேப்பமரமும்” (க.ப. அறவாணன், மரவழிபாடு திராவிட-ஆப்பிரிக்க ஒப்பிடு ப. 76) என்று மக்களிடம் காணப்படும் மரம் சார்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் நிலையை விளக்கியுள்ளார்.
மலையுறை தெய்வ வழிபாடு :
சங்கக்கால மக்கள் மலையினைத் தான் வணங்கும் தெய்வமாக எண்ணினர். தங்களுடைய முன்னோர் மலையில் வாழ்ந்ததை உணர்ந்தே அவற்றைப் புனிதமாக எண்ணியும் அவ்வடங்களில் தெய்வத்தன்மை இருப்பதாகவும் நம்பினர். மலையுறை தெய்வங்களை அணங்கு, சூர் என்ற சொற்களால் சங்கப்பாடல்கள் கூறுகின்றன.
தெய்வங்கள் மலையில் உறைவதனை,
ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பில் (அகம் 198:14)
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு (அகம் 272:3)
என்னும் அகநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறியலாம். மேலும் மலையுறை தெய்வத்திற்கு மக்கள் பலியிட்டு வணங்கியதைக் கலித்தொகையில்,
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலி பெறூஉம்
அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே (கலித் 52: 9-10)
என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.
நிறைவாக :
சங்கக்கால மக்கள் தங்களுடைய வாழ்க்கையை இயற்கையோடு இணைந்து வாழ்ந்துள்ளனர். இயற்கை மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். இத்தகைய இயற்கைப் பொருளான மலை, காடு, மழை, கடல், நீர்நிலைகள் போன்றவற்றினைத் தெய்வமாகவே போற்றிய நிலையையும் அறியமுடிகிறது. இயற்கையைப் போற்றி மக்கள் இன்புற்று வாழ்ந்ததை அறியமுடிகிறது. இயற்கை வளங்களை அழிவில் இருந்து பாதுகாத்து நாமும் இன்புற்று, வரும் தலைமுறையையும் வாழவைப்போம்.
துணை நூற்பட்டியல் :
- சங்க இலக்கியம் மூலமும் உரையும் என்.சி.பி.எச் நிறுவனம், சென்னை 2000
- புறநானூறு மூலமும் உரையும் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, கழகவெளியீடு, சென்னை 2007
- சிலப்பதிகாரம் மூலமும் உரையும் ந.மு. வேங்கடசாமி நாட்டார், சாரதா பதிப்பகம் சென்னை 2005
- மரவழிபாடு திராவிட-ஆப்பிரிக்க ஒப்பிடு - க.ப. அறவாணன்.

0 Comments