கிழக்கே சூரியன் தலைக்காட்டும் நேரம். பனித்துளிகள் படர்ந்த பசுமையான நெல் பயிர்கள் தென்றல் காற்றில் தலை அசைத்தன. முதிர்ந்த நெல் மணிகள் காதலன் வரவுக்காகக் காத்திருக்கும் கன்னி போல நாணிக்கோணி தலைகுனிந்து நின்றன. வரப்போறத்து புல்லில் பனித்துளிகள் மின்மினி போல மின்னின. தூரத்தில் மாடுகளின் கழுத்து மணியோசையும் சேவல்களின் கூவலும் கிராமத்தின் விடியலை அழகாக்கின. 

அந்த அழகிய கிராமத்தின் ஓரத்தில் ஓலைக்கூரை வேய்ந்த சிறிய குடிசையில் முத்தையாவும் அவருடைய பத்து வயது மகள் செல்வியும் வாழ்ந்து வந்தனர். செல்வியின் தாய் கொரோனாவின் கோரப்பிடியினால் மாண்டுப்போனாள். அன்றிலிருந்து முத்தையா மகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அவளை வளர்த்து வந்தார். வறுமை அவர்களின் வீட்டில் குடியிருந்தாலும் அன்புக்குப் பஞ்சமில்லை. செல்வியின் முகத்தில் சிரிப்பைக் காண்பதற்காகவும் அவளை சிறந்த முறையில் வளர்ப்பதற்காகவும் முத்தையா ஒவ்வொரு நாளும் வயலில் வியர்வை சிந்தி உழைத்தார். 

செல்வி அப்பாவைப் பார்த்து, அப்பா நான் நல்லாப் படிச்சு பெரிய ஆளாகி உங்களை கண்கலங்காமப் பார்த்துக்குவேன் என்று சொல்வாள். அதுக்குத்தான் கண்ணு இந்த அப்பன் மண்ணோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன். நீ நல்லா படிச்சி முன்னுக்கு வந்தா அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம் என்று அவளுடைய தலையை வருடுவார் முத்தையா. அவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் அன்போடு நகர்ந்து கொண்டிருந்தது.

முத்தையாவுக்குச் சொந்தமாகச் சிறிய விவசாய நிலம் இருந்தது. ஓவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மகளுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்துவிட்டு வயலுக்குச் செல்வார். பகல் முழுவதும் நிலத்தை உழுது, களை பறித்து, நீர்ப்பாய்ச்சி, பயிர்களைப் பராமரிப்பார். மாலைப்பொழுது சாய்வதற்குள் வீட்டிற்குத் திரும்பிடுவார். தாயை இழந்த தன் மகளைத் தனிமையில் தவிக்கவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். வயலில் எவ்வளவு வேலை இருந்தாலும் மகளின் பாதுகாப்பையும் நலனையும் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. வறுமை அவரை வாட்டினாலும் மகளின் முகத்தில் சிரிப்பைக் காணும்போதெல்லாம் தன் கவலையெல்லாம் மறந்துவிடுவார். செல்வியின் எதிர்காலமே அவருடைய வாழ்க்கையின் ஒரே கனவாக இருந்தது. 

ஒரு நாள் அதிகாலையில் முத்தையா வழக்கம்போல வயலுக்குச் சென்று விட்டார். வீட்டில் செல்வி தந்தைக்காகச் சோறும் மிளகாய் துவையலும் மோர் கலந்த சிறிய பாத்திரத்தையும் தயாராக எடுத்து வைத்தாள். அன்று அவளுக்குப் பள்ளியில் முக்கியமான பாடம் இருந்தது. இருந்தாலும் வயலில் பசியோடு வேலை செய்யும் அவளது அப்பாவின் நினைவு அவளைப் பாடாய்ப்படுத்தியது. 

அப்பா காலையிலேயே வயலுக்குப் போய் விட்டாரே பாவம் பசியோடு எப்படி வேலை செய்வார் என்று முணுமுணுத்தபடியே உணவுப் பாத்திரத்தைத் துணியால் மூடி எடுத்துக்கொண்டு வயலுக்குக் கிளம்பினாள்.

வயல் வரப்பில் நடக்கும்போது கால்களில் சேறும் புல்லில் படிந்திருந்த பனியும் ஒட்டிக்கொண்டன. வழியில் இருந்த ஓடையைப் பார்த்து தயங்கினாள் நேற்று பெய்த மழையால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது ஒருகணம் செல்விக்குப் பயம் வந்தாலும் அப்பாவின் பசியால் களைத்துப்போன முகம் மனதில் நிழலாடியது. 

உணவுப்பாத்திரத்தைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு மெதுவாக ஓடையைக் கடந்து அப்பாவின் இடத்தை அடைந்தாள். 

வயலில் ஏர் உழுது கொண்டிருந்த முத்தையா மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அடடே செல்வி பள்ளிக்குப் போக வேண்டிய இந்த நேரத்திலே எதற்கு வந்தே என்றார். அப்பா உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்தேன். நீங்க காலையிலிருந்து சாப்பிடாம வேலை செய்கிறீங்களே என்றாள் செல்வி. ஓடையிலே தண்ணீல் போகுதே பயமில்லையா உனக்கு என்றார். அப்பா பயமாகத்தான் இருந்தது. ஆனா உங்க பசி அதை விடப் பெருசா எனக்குத் தோணிச்சிப்பா என்றாள் செல்வி. 

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் முத்தையாவின் கண்கள் கலங்கின. மகளின் ஈரமான கால்களையும் சேறு படிந்த ஆடைகளையும் பார்த்தார். அவளுடைய கைகளைப் பிடித்து அருகில் அமர வைத்தார். 

என் செல்லமே உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் இந்த அப்பன் என்னம்மா செய்வான் என்று சொல்லியபடியே அவளை அணைத்துக் கொண்டார். செல்வி சிரித்தாள். எனக்கு ஒன்னும் ஆகலப்பா. நீங்க சாப்பிடுங்க எனக்குப் பள்ளிக்குப்போக நேரமாச்சு என்றாள். முத்தையா சாப்பிட்டார்.

ஒவ்வொரு கவளத்திலும் மகளின் அன்பை உணர்ந்தார். சாப்பிட்டு முடித்ததும் அவருடைய முகத்தை இரு கைகளாலும் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டார். அடி என் செல்லப் பெண்ணே, நீ நல்லாப் படிச்சு பெரிய ஆளாகனும் ஆனா இனிமேல் இப்படி ஆபத்தான வழியில தனியா இறங்கி வராதே. உன் அன்பு எனக்குப் போதும். உன் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம் என்றார். 

அவளைத் தோளோடு அணைத்து, பள்ளிக்குப் பத்திரமா போடா கண்ணு என்று வழியனுப்பினார். செல்வி திரும்பிப் பார்த்தபடியே மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அன்று மாலை வீட்டிற்குத் திரும்பிய செல்வியை முத்தையா வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார். அவளுடைய புத்தகப் பையை வாங்கித் தோளில் போட்டுக் கொண்டே வா கண்ணு சாப்பிடலாம் என்றார். அந்த சிறிய குடிசையில் விளக்கு வெளிச்சம் மங்கலாகப் பரவியது. வறுமை அவர்களைச் சூழ்ந்திருந்தாலும் தந்தையின் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்த செல்வியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. முத்தையா அவளுடைய தலை முடியை வருடியபடியே மீண்டும் மெதுவாக அடி என் செல்லப் பெண்ணே என்றார். 

அந்த வார்த்தைகளில் ஆயிரம் முத்தங்களும் அளவற்ற பாசமும் ஒரு தந்தையின் வாழ்நாள் கனவும் அடங்கியிருந்தன. அன்பு மனிதனுக்குத் துணிவைத் தருகின்றது ஆனால் உண்மையான அன்பு என்பது ஒருவருக்காக ஆபத்தை எதிர்கொள்வதில் மட்டுமல்ல ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதிலும்தான் அடங்கி உள்ளது.