முயற்சி செய்யும் மனிதர்களிடையே வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி மிகவும் சிறியதே. வெற்றியை நோக்கிப் பயணிப்பவருக்கும், தோல்வியில் தங்கிவிடுபவருக்கும் இடையில் பெரும்பாலும் இருப்பது, எதை முதலில் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் திறனும், அதற்கேற்ப செயல்படும் பழக்கமும்தான். 

நாம் இங்குக் குறிப்பிடுவது சோம்பேறிகளையோ, முயற்சி செய்யாமலும் உழைக்காமலும் இருப்பவர்களையோ அல்ல. கடுமையாக உழைத்தும், நேர்மையாக முயன்றும், தங்களது இலக்கை அடைய முடியாமல் தவிப்பவர்களைப் பற்றி தான் சிந்திக்கிறோம்.

வெற்றிப் பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அதில் நமக்குப் பலவிதமான படிப்பினைகள் கிடைக்கின்றன. திட்டமிடுதல், செயல்படுத்துதல், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துதல், விடாமுயற்சி என வெற்றிக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் மிக முக்கியமான ஒன்று முக்கியமானவற்றுக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்படுவது. 

இந்த இரகசியத்தை அறியாத பலர் கடுமையாக உழைக்கிறார்கள். நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள். இருந்தும், அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. காரணம் உழைப்பின் குறைபாடு அல்ல; உழைப்பைச் சரியான சமயத்தில் செலுத்தாததுதான். 

முறையான திட்டமிடல், ஒவ்வொரு செயலுக்கும் உரிய காலவரையறை, அயராத உழைப்பு போன்ற அனைத்திற்கும் மேலாக, எது முக்கியம்? எதை முதலில் செய்ய வேண்டும்? எதற்குக் காத்திருக்கலாம்? என்பதைத் தீர்மானிக்கும் தெளிவு மிகவும் அவசியம். வாழ்க்கையில் நமக்கு முன்னால் பல வேலைகளும், பல பொறுப்புகளும், பல இலக்குகளும் இருக்கலாம். அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடித்துவிட முடியாது. நேரமும் சக்தியும் வரம்புக்குட்பட்டவை. எனவே, எல்லாவற்றையும் செய்வதைவிட, செய்ய வேண்டியவற்றில் மிக முக்கியமானதை முதலில் செய்வதே புத்திசாலித்தனம்.

 ஒரு நாளில் நாம் செய்யும் செயல்களின் எண்ணிக்கை நமது வெற்றியைத் தீர்மானிப்பதில்லை; அந்தச் செயல்களில் எவ்வளவு முக்கியமானவற்றை சரியான நேரத்தில் செய்து முடித்தோம் என்பதுதான் நமது முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது. எனவே, ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது, “இன்று நான் என்னென்ன செய்ய வேண்டும்?” என்று மட்டும் கேட்பதைவிட, “இன்று நான் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய மிக முக்கியமானவை எவை?” என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். 

முக்கியமானவற்றை அடையாளம் கண்டு, அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, திட்டமிட்டு, தொடர்ந்து செயல்படுபவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் அவர்களை இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும். வெற்றி என்பது அதிகமான வேலைகளைச் செய்வதில் மட்டும் இல்லை; சரியான வேலையை, சரியான நேரத்தில், சரியான முன்னுரிமையுடன் செய்வதில்தான் இருக்கிறது.

முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை கொடு..!

வெற்றியை நோக்கி தொடர்ந்து முன்னேறு..!