Article No : NPIJT041126
தலைப்பு : தமிழ் – கிரேக்க மரபுகளில் தெய்வக் கருத்தாக்கம் : ஓர் ஒப்பாய்வு
ஆய்வாளர் : அ. ஆதில் அம்மார், உதவிப்பேராசிரியர், முதுகலைத் தமிழ் & ஆய்வுத் துறை, புதுக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 600 014
முன்னுரை :
இயற்கையின் ஆற்றலையும் அதன் இயல்புகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ளாத மனிதன், அதைக் கண்டு அஞ்சினான். இயற்கையின் மீது மனிதன் கொண்ட அறியாமையும் அச்சமும், மனிதன் இயற்கையை வழிபட காரணமாயிற்று. இடி, மின்னல், பெருவெள்ளம் போன்ற அச்சம் தரக்கூடிய இயற்கைக் கூறுகளையும், தன் வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் நீர், காற்று, சூரியன் ஆகியவற்றையும் வழிபடத் தொடங்கினான். இந்த இயற்கை வழிபாட்டு முறை என்பது பெரும்பாலும் அனைத்து பண்டைய நாகரிகங்களிலும் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளது. காலப்போக்கில், மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கும், சமூக மற்றும் நாகரீக வளர்ச்சிக்கும் ஏற்ப இயற்கையின் ஆற்றல்கள் மனித உருவம் கொண்ட தெய்வங்களாகக் கற்பனைச் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. அவ்வகையில் தொன்மையான தமிழ் மற்றும் கிரேக்க நாகரிகங்கள், வெவ்வேறு பண்பாட்டுச் சூழல்களைக் கொண்டிருந்த போதிலும், அவற்றின் தெய்வக் கருத்தாகங்களில் சில குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவ்விரு நாகரிகங்களிலும் மனிதன் வாழ்வியல் மற்றும் சமூகச் சூழலோடு தொடர்புடைய தெய்வங்களின் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை ஒப்பியல் நோக்கில் ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழர் மற்றும் கிரேக்கர்களின் தொன்மை கால வழிபாட்டு முறைகள் :
பழந்தமிழர்களும் இயற்கை வழிபாட்டியினைப் பின்பற்றி வாழ்ந்த சமூகமாகவே விளங்குகின்றனர். இயற்கை ஆதாரங்களான சூரியன், காடு, கடல் போன்றவற்றைத் தமிழர்கள் தெய்வங்களாக வணங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.
“முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்” (நற் -283 )
இவ்வரிகளில் நெய்தல் நில மக்கள் பலரும் கடலின் மேல் தோன்றும் ஞாயிற்றைத் தொழுதனர் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் உள்ள மரங்களில் கடவுள் இருந்ததாக அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.
“ கடவுள் மரத்துமுள் மிடை குடம்பை “(அகம். 270)
மேலும், மழையை உண்டாகுகின்ற மேகங்களையும், அக்காலத் தமிழ் மக்கள் கடவுளாக
வணங்கி வந்தனர் என்ற செய்தியை,
“இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ” (கலித்.16 )
என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ எடுத்துரைக்கிறார். இதுபோன்ற சங்க இலக்கியப் பாடல் வரிகளிலிருந்து பழந்தமிழர்கள் தங்களின் வாழ்வியலுக்குப் பெருந்துணையாக விளங்கிய இயற்கைக் கூறுகளை வழிபட்டு வந்தனர் என்பது புலனாகிறது.
நாகரிகத்தில் வளர்ச்சி அடைந்த தமிழர்கள் நிலங்களை அடிப்படையாக ஐந்திணை வாழ்வை மேற்கொண்டனர். அந்தந்த நிலத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு கடவுள்களை வழிபட்டனர். இம்மரபில், இயற்கைச் சூழல்களுடன் தொடர்புடைய தெய்வங்கள் மனிதனைப் போன்ற உருவம், செயல்பாடுகள் மற்றும் பண்புகளைக் கொண்ட மனித உருவத் தெய்வங்களாக (anthropomorphic deities) வழிபடப்பட்டன. இதனைத் தொல்காப்பிய வரிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
”மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே” (தொல்.பொருள்.5)
தொல்காப்பியத்தில் பாலை நிலத்திற்குரிய தெய்வம் பற்றி குறிப்பு இல்லை என்றாலும், கொற்றவை பாலை நிலத தெய்வமாக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.
கிரேக்க மரபில் இயற்கைக் கூறுகளைத் தனித்த தெய்வங்களாக எண்ணி நேரடியாக வழிபடும் இயற்கை வழிபாட்டு முறை காணப்படவில்லை. மாறாக மலை, குகை, மரம் போன்ற இயற்கைக் கூறுகளில் கடவுள்கள் இருந்ததாகவும் அவற்றைப் புனித தன்மைக் கொண்ட இடங்களாகவும் கருதப்பட்டன. காலப்போக்கில், கிரேக்க மரபிலும் மனித உருவத் தெய்வ வழிபாட்டு முறை (anthromorphic worship) பரவலாக நிலவியது.
பண்டைய தமிழ் மற்றும் கிரேக்க மரபுகளில், கடவுள்களை வெறுமென இயற்கையின் ஆற்றலோடு தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை. அவற்றிற்கு மனித உருவம், மனிதர்களுக்குரிய பண்புகள், உணர்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டவர்களாகக் கற்பிக்கப்பட்டு வழிபட்ட முறை குறிப்பிடத்தக்க ஒற்றுமையாக உள்ளது. இவ்வாறு ஈர் இறை மரபுகளிலும், இயற்கையுடன் தொடர்புடைய வழிபாட்டு முறை, மனித உருவத் தெய்வக் கருத்தாக்கமாக வளர்ச்சி நிலை அடைந்ததைக் காண முடிகிறது.
தமிழ் மற்றும் கிரேக்க கடவுள்கள் ஒப்புமைகள் :
முருகன் - ஏரிஸ்(Ares) :
முருகன் மலையும் மலை சார்ந்த நிலங்களுக்கான கடவுளாகக் கருதப்படுகிறார். தொல்காப்பியர் முருகனை ’சேயோன்’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளார். தொன்மைக் கடவுளான முருகன் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பேசப்பட்டுள்ளார். சேய், நெடுவேள், செவ்வேள் குன்றக்குறவன் போன்ற பல பெயர்களில் முருகன் பாடப்பட்டுள்ளார். முருகு என்ற சொல்லிற்கு இளமை, அழியா அழகு, மணம் போன்ற பொருள்கள் இருந்தாலும் சங்க இலக்கியங்களில் முருகன் பெரும்பாலும் போர் மற்றும் வெற்றியின் கடவுளாகவும் கடுஞ்சினம் கொண்டவனாகவும் போற்றப்பட்டுள்ளார்.இதனை,
”செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே” ( குறுந். 1)
போர்க்களம் இரத்தத்தால் சிவக்கும்படி அவுணர்களைக் கொன்று அழித்த சிவந்த அம்பையும், சிவந்த கொம்புகளை உடைய யானையையும், வீரக்கழலையும் உடைய முருகனுக்குரிய இம்மலை இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது என்று குறுந்தொகைப்பாடல் உரைக்கிறது. மேலும்,
”முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்” (அகம். 158)
”முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!” (புறம். 16)
போன்ற சங்க இலக்கியப் பாடல் வரிகளின் மூலம், முருகன் போரில் வெற்றியுடையவனாகவும், போர்க்களத்தில் மிகுந்த சீற்றம் கொண்ட வீர தெய்வமாகவும் விளங்கிய தன்மையை அறிய முடிகிறது.
கிரேக்க கடவுளுக்கெல்லாம் அரசனான ஜீயஸ் (zeus) மற்றும் ஹீராவின் (Hera) மகனாகக் கூறப்படும் ஏரிஸ் (ares), கிரேக்க புராணங்களில் போர், வீரம், வன்முறை போன்றவற்றின் கடவுளாகப் போற்றப்படுகிறார். மேலும், போரை விரும்புவோனாகவும், போர்க்களத்தில் மிகக் கொடியவனாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
”called the violent god away with: ”Ares, Ares,
destroyer of men, reeking blood, stormer of ramparts” (Iliad, 5.34-35)
என்ற வரிகள் கிரேக்க செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான இலியட்டில் இடம்பெறுகிறது. இதில் ஏரிஸ் வன்முறைக் கடவுள் என்றும் மனிதர்களைக் கொள்பவன் என்றும் இரத்தக்கறை படிந்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது.
“delighting in arms, indomitable, man-slaying, wall-battering,
lord Ares, yours is the din of arms“ (Orphic Hymns 65 – To Ares)
ஆயுதங்களில் மகிழ்பவன், வெல்ல முடியாதவன், மனிதர்களைக் கொள்பவன், எப்பொழுதும் இரத்தக்கறையோடு விளங்குபவன், கொல்வதில் மகிழ்ச்சி காண்பவன் என்று ஆர்பிக் கீதம் (orphic hymns) கூறுகிறது.
முருகன் மற்றும் ஏரிஸ்-க்கும் இடையிலான மற்றொரு ஒற்றுமையாக அவர்களின் ஆயுதத்தைக் கூறலாம். சங்க இலக்கியங்களில் முருகனின் ஆயுதமாக வேல் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இறை மரபில், வேல் போர் கருவியாக மட்டுமில்லாமல் தெய்வீகத் தன்மைக்கொண்ட புனித ஆயுதமாகவும் பார்க்கப்படுகிறது.
“சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,
சினம் மிகு முருகன் ” (அகம்.59)
அசுரரைக் கொன்ற ஒளி வீசும் நீண்ட வேலை உடையவன் சினமிக்க முருகன் என்று அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.
கிரேக்க கடவுள் ஏரிஸ், வேல் போன்ற குத்து ஆயுதமான ஈட்டியைக் கையாளுவதில் வல்லவராகத் திகழ்ந்தார் என்ற செய்திகள் கிரேக்க புராணங்களில் காணப்படுகின்றன.
”mighty with the spear” (Homeric Hymns 8 - To Ares )
”your desire is for the rude clash of swords and spears” (Orphic Hymns 65- T0 Ares )
இவ்வரிகளில் மூலம், ஈட்டி (spear) பயன்படுத்துவதில் ஏரிஸ் வல்லமை பெற்றவனாகவும்,
அது அவர் போரில் பயன்படுத்திய முக்கியமான ஆயுதமாகவும் விளங்கிய தன்மையை அறிய முடிகிறது.
இவ்வாறு இரு கடவுளரும் போர்க்களத்திலும் பகைவர் இடத்திலும் கடும் சினம் கொண்டவர்களாகவும், போரில் சிறந்து விளங்கும் வீரத்தன்மை உடையவர்களாகவும், சித்தரிக்கப்படுகின்றனர். மனித வாழ்வியல் சூழலோடு ஒன்றிணைந்த வீரம் மற்றும் போர் சார்ந்த தெய்வக் கருத்தாக்கம் இரு மரபுகளிலும் உள்ளது.
மாயோன் - பான் (pan) :
“மாயோன் மேய காடுரை உலகம்“ என்று முல்லை நிலமான, காடும் காடு சார்ந்த பகுதியின் தெய்வம் ’மாயோன்’ எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. முல்லை நிலத்தில் வாழும் மக்கள் ஆயர், இடையர், கோவலர்(shepherd) என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். இவர்களின் முதன்மை தொழில் ஆநிரை மேய்த்தலாகும். இதனை,
”முல்லை வியன் புலம் பரப்பிக, கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும்பூ அயரப்
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்” (அகம்.14)
என்ற அகநானூற்றுப் பாடல் புலப்படுத்துகிறது.
கிரேக்க தொன்மவியலிலும், வனப்பகுதி (wild), ஆநிரை மேய்ப்பவர்கள் (shepherd), மந்தைகள் (flocks) மற்றும் மேய்ச்சல் சமூகம் சார்ந்த கடவுளாகப் ’பேன்’ (pan) கருதப்பட்டார். இதனைப் பேன் பற்றிய ஹோமரிக் கீதத்தில் இடம்பெறும் ( homeric hymns To Pan ),
“Pan, god of shepherdsdust-parched ( Homeric Hymn, 19 - To Pan)
என்ற வரிகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், பேன் பற்றிய ஆர்பிக் கீதத்திலும் (orphic hymn to pan),
“I call upon Pan, the pastoral god” (Orphic Hymns,11 – To Pan)
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Pastrol என்றால் ‘ஆயர்’, ‘இடையர்’ வாழ்வியலோடு தொடர்புடைய சொல்லாடல் ஆகும். ஆயர்கள் மற்றும் மேய்ச்சல் சமூகத்தின் கடவுளாகப் பேன் விளங்கியதை இவ்வரிகள் தெரிவிக்கின்றன.
தமிழ் - கிரேக்க கால்நடை வளர்ப்புச் சமூகங்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமையாக ‘குழல்’ இசை அமைகிறது. இரு சமூகங்களிலும் ஆநிரைகளை மேய்க்கும் ஆயர்கள், குழல் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர் என்ற செய்திகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
”கொடு மடி உடையார் கோல்கைக் கோவலர்
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க” (அகம் -54)
மேலும்,
”நீர்க்குஇயங்கு இனநிரைப் பின்றை வார்கோல்
ஆய்க்குழல் பாணியின் ஐதுவந்து இசைக்கு ” (அகம்.225)
போன்ற அகநானூற்று வரிகளில், ஆயர்கள் ஆநிரைகளுக்குப் பின்னால் குழல் ஊதிக்கொண்டு சென்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பண்டைய கிரேக்கத்திலும், ’சிரிங்க்ஸ்’ (syrinx) அல்லது ’பேனி’ன் குழல் (panpipe) என்று சொல்லக்கூடிய பல நாணல் குழாய்களைக் கொண்ட குழல் போன்ற இசைக்கருவியை, ஆநிரை மேய்ப்பின் போது ஆயர்கள் இசைத்தனர் என்ற குறிப்புகளும் உள்ளன. “The great bucolic poet” என்ற மொழிப்பெயர்ப்பு நூலில் இடம்பெறும் ‘தியோக்ரிட்டஸின்’ பாடலில், ஆயன் மற்றும் ஆட்டிடையன் இடையிலான உரையாடல் வழியாக இக்குறிப்புக் கூறப்படுகிறது.
“Sweet no less, master Goatherd, the melody of your pipe. Pan only shall take place and prize afore you” மேலும்,
“Come now and sit ye down here … and play me a tune. I’ll keep your goats the while.”
(theocritus,The Greek Bucolic Poet,p.9)
இக்குறிப்புகளில் இருந்து, தமிழ் (ம) கிரேக்க மரபில் வனப்பகுதி மற்றும் ஆநிரை மேய்ப்புச் சமூகத்துடன் தொடர்புடைய தெய்வங்களாக மாயோனும் பேனும் குறிப்பிடப்படுகின்றனர். இரு மரபுகளிலும் இத்தெய்வங்கள் மேய்ச்சல் நிலம், ஆநிரை மேய்ப்போர் மற்றும் அவர்களின் வாழ்வியல் கூறுகளுடன் கொண்டுள்ள தொடர்புகளை அறிய முடிகிறது.
இந்திரன் - ஜீயஸ் (zeus) :
மருதத் திணைக்குரிய தெய்வமாக இந்திரன் போற்றப்பட்டதாகத் தமிழ் மரபில் அறியப்படுகிறது. மருத நில தெய்வத்தைத் தொல்காப்பியர் “வேந்தன்” என்று குறிப்பிடுகிறார். உரையாசிரியர்கள், இவ்வேந்தனை இந்திரன் என்றே விளக்குகிறார்கள். மருதத்திணை என்பது வேளாண்மை மற்றும் நீர்வளம் மிக்க நிலமாக விளங்குவதால் மழை, இடி, மின்னல் போன்றவற்றோடு தொடர்புடைய தெய்வமாகவே இந்திரன் காணப்படுகிறார். ‘அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே’ என்று அகன்ற வானத்தின் தலைவன் இந்திரன் என்கிறார் திருவள்ளுவர். சங்க இலக்கியங்களில் இந்திரனைப் பற்றிய பாடல்கள் மிகக் குறைவாக இருப்பினும் பிற்காலத்தில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இந்திரன் பற்றியும் இந்திர விழா பற்றியும் விரிவான குறிப்புகள் உள்ளது. மருதத் திணை சார்ந்த ஐங்குறுநூற்றுப் பாடலில் மக்கள் இந்திரனுக்கு விழா எழுப்பி வழிப்பட்டனர் என்பதை,
“இந்திர விழவில் பூவின் அன்ன “( ஐங்குறு.62) என்ற வரி விளக்குகிறது.
கிரேக்கத்தில், இடி, மின்னல் மற்றும் மழையின் கடவுள் ஜீயஸ் (zeus) ஆவார். கிரேக்க இறையியல் மரபில் முதன்மைக்கடவுளாகவும், கடவுள்களுக்கெல்லாம் தலைவராகவும் விளங்குகிறார்.
“God of thunder and the lightning Zeus the sower “ (Orphic Hymns,15 – To Zeus)
மேலும்,
“The fire of your lightning Emblazons the rain clouds” (Orpic Hymns,19 –To Zeus )
என இடம்பெறும் இவ்வரிகள் மூலம், ஜீயஸ் (zeus) இடி, மின்னல் மற்றும் மழை மேகங்களுடன் தொடர்புடைய கடவுளாக விளங்கினார் என்பது புலப்படுகிறது.
தமிழ் கிரேக்க இரு மரபிலும் வானுலக தெய்வங்களாகிய இந்திரன் மற்றும் ஜீயஸ் ஆகியோரின் ஆயுதங்கள் இடி மின்னலோடு தொடர்புபடுத்திச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்” ( புறம்.241)
இப்பாடலில் குறிப்பிடும் வச்சிரம் என்பதற்கு வைரம் அல்லது இடி மின்னல் என்று பொருள். வச்சிர ஆயுதத்தை உடைய நெடியோன் என்று இந்திரன் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதற்கு ஒப்புமையாக,
“The lurid thunderbolt, which are the shafts of great Zeus” (hesiod, theogany ,707-709) என்றும்,
“Kronian zeus , strong spirited god Thunderbolt is your scepter” (orphic hymns,15 - To Zeus) தியோகனி (theogany), ஆர்பிக் கீதங்கள் (orphic hymns) போன்ற பண்டைய கிரேக்க சமய இலக்கியங்களில், ஜீயஸ் ’thunderbolt’ (இடி/மின்னல்) என்ற ஆயுதத்தைக் கொண்டிருப்பதாகவும், அது அவரின் செங்கோலாகவும் (Scepter) விளங்கிய தன்மையைக் காண முடிகிறது. இந்திரன் மற்றும் ஜீயஸ் ஆகிய இரு கடவுள்களும், ஒத்த தன்மையுடையவர்களாக விளங்குகின்றனர்.
வருணன் – பொஸைடன் (Poseidon):
“வருணன் மேய பெருமணல் உலகமும்”என்கிறார் தொல்காப்பியர். கடற்கரையோரத்தில் வாழ்ந்த நெய்தல் நில மக்கள் வருணனை வழிபட்டனர். வருணன் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படவில்லை. சங்க கால இறுதியில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலேயே கடல் தெய்வம் என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.
“கடற்றெய்வங் காட்டிக்காட்டி” (சிலம்பு. கானல்வரி-5)
“மாக்கடல் தெய்வத்தின் மலரடி வணங்குதும்” (சிலம்பு. கானல்வரி - 51)
இவ்வரிகளில் குறிப்பிட்டுள்ள கடல் தெய்வத்தை வருணன் என்றே உரை மரபுகளில் கூறப்படுகின்றன.
வருணன் பற்றிய நேரடி சான்றுகள் நமக்குப் போதிய அளவில் கிடைக்கவில்லை என்றாலும், தமிழர்களின் இறைச் சிந்தனையில் கடலுடன் தொடர்புடைய தெய்வ வழிபாட்டு முறை இருந்தது என்பது தெளிவாக அறிய முடிகிறது.
கிரேக்க புராணங்களில் கடல் மற்றும் கடல் சார்ந்த ஆற்றல்களின் கடவுளாகக் கருதப்படுபவர் பொஸைடன் (Poseidon) ஆவார். இவர் ஜீயஸ் கடவுளின் சகோதரர். கடலை ஆள்பவராகவும் கடலில் பயணம் செய்பவர்களின் பாதுகாவலராகவும் விளங்குகிறார். இதனை,
“He who moves the earth and the desolate sea the deep water god” என்றும்,
“Help those who sail upon the sea in ships” (Homeric Hymn, 22 - To Poseidon)
என்றும் இடம்பெறும் ஹோமரிக் கீதப் பாடல் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடற்கரை ஓரங்களில் வாழும் மக்கள் கடல் சீற்றத்தில் இருந்தும், கடல் பயணங்களின் போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கடல் தொடர்பான தெய்வங்களை வழிபட்டனர்.
இத்தகைய தெய்வ வழிபாட்டு மரமானது தமிழ், கிரேக்க இரு நாகரிகங்களிலும் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளது.
கொற்றவை - ஏதெனா (Athena):
பாலை நில தெய்வமான கொற்றவை போர், வீரம், வலிமை ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகச் சங்க காலத்தில் போற்றப்படுகிறார். சங்க இலக்கியங்களில் கொற்றவை பற்றிய செய்திகள் குறைவாகக் காணப்பட்டாலும், சிலப்பதிகாரம் வேட்டுவ வரி காதையில் கொற்றவை பற்றிய பல குறிப்புகள் கூறப்படுகின்றன. தொல்காப்பியத்திலும்,
”மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல்.பொருள். 62)
என்ற நூற்பா, போருக்குச் செல்லும் மறக் குடியினரின் சிறப்புகள், செயல்பாடுகள் மற்றும் போரில் வெற்றிப்பெற வேண்டும் என அவர்கள் கொற்றவையை வழிபட்ட செய்தியும் கூறப்படுகிறது.
“விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்” (குறுந். 218)
என்ற பாலைத் திணை சார்ந்த குறுந்தொகைப்பாடல் வரிகளில், ’வெற்றிப்பொருந்திய சூலி தெய்வத்திற்குப் பலி கொடுக்க மாட்டோம்’ என்று தலைவிக் கூறுவதாக அமைந்துள்ளது. இதில் சூலி என்னும் சொல், வீரமும் வெற்றியும் கொண்ட பெண் தெய்வத்தைக் குறிக்கிறது. உரை மரபு, சூலி என்பது ’சூலம் ஏந்தியவள்’ என்ற பொருளைத் தருகிறது. இதன் அடிப்படையில் போர் மற்றும் வெற்றிக்கொண்ட பெண்தெய்வமாகக் கூறப்படும் சூலி, கொற்றவையுடன் தொடர்புடைய கடவுளாக உள்ளார்.
இதற்கு ஒப்புமையாக, கிரேக்கத்திலும் பெண் தெய்வத்தைப் போர் மற்றும் வீரம் சார்ந்த பொருண்மையுடன் தொடர்புபடுத்தும் போக்கு உள்ளது. பெண் தெய்வமான ஏதெனா (Athena) கிரேக்க மரபில் வீரம், அறிவு, போர்த்தந்திரம் போன்றவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகப் போற்றப்படுகிறார். போரில் வன்முறையாக மட்டுமல்லாமல் அறிவு, உத்தி மற்றும் வீரத்துடன் கூடிய செயல்பாடு மிக்க தெய்வமாகவும் விளங்குகிறார். ‘ஏதெனா’ பற்றிய ஆர்பிக் கீதத்தில்,
“Noble and Blessed goddess Brave in Din of war” (Orphic Hymns, 22 To Athena)
என்ற வரிகளில் ஏதெனா, போரின் ஆரவாரத்திலும் துணிச்சலோடு விளங்குபவர் எனப் போற்றப்படுகிறார்.
மேலும் ஹோமரிக் கீதத்திலும்,
“Ares she cares for the work of war” என்றும்,
“It is she who watches over the people,
when they go out to war
and when they come” ( Homeric Hymns, 11 To Athena)
என்றும் கூறப்படுகிறது.
இவ்வரிகள் மூலம், போர் தெய்வமான ஏரிஸுடன் இணைந்து போர் செயல்பாடுகளைக் கவனிக்கும் தெய்வமாக ஏதெனா விளங்கியதையும், போருக்குச் செல்லும் மக்களையும் போரிலிருந்து திரும்புவோரையும் பாதுகாக்கும் தெய்வமாகக் கருதப்பட்டதையும் அறிய முடிகிறது. எனவே, கிரேக்க மரபில் ஏதெனா போருடன் தொடர்புடைய பெண் தெய்வமாக மட்டுமன்றி, வீரம், போர்த்திறன் மற்றும் போரில் ஈடுபடுவோரின் பாதுகாப்பு ஆகியவற்றுடனும் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது புலப்படுகிறது.
போர், வீரம் ஆகியவை ஆண்களுக்கு உரிய பண்புகளாக மட்டும் கருதப்படாமல், பெண்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கும் மரபு தமிழ் (ம) கிரேக்கம் என இரு சமூகங்களில் உள்ளன. இவ்வகையில், பெண்களையும் போர், வீரம், வெற்றி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திய சிந்தனை, பின்னர் பெண் தெய்வக் கருத்தாக்கம் உருவாவதற்கும் வழிவகுத்திருக்கக் கூடும்.
முடிவுரை :
மானிடவியல் நோக்கில் பார்கும்போது, தமிழ் (ம) கிரேக்க சமூகங்கள் வெவ்வேறு பண்பாட்டு, நாகரிகப் பின்னணிகளைக் கொண்டிருந்தபோதிலும், இயற்கையின் ஆற்றலைக் கண்டு அச்சமும் வியப்பும் கொண்ட மனிதனின் தொடக்கால அனுபவங்கள் அவர்களின் தெய்வக் கருத்தாக்கங்களில் ஒற்றுமைகளை உருவாக்கியுள்ளன. இயற்கை, பாதுகாப்பு, வளம் போன்ற மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் தெய்வங்களின் ஆற்றல்களாகவும் பண்புகளாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறுபட்ட நாகரிகங்களிலும் பொதுவான மானுட அனுபவங்கள் தெய்வக் கருத்தாக்கத்தில் ஒத்த கூறுகளை உருவாக்குகின்றன என்பது புலப்படுகிறது.
துணைநூற்பட்டியல் :
- அறவேந்தன். இரா., குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2016.
- இராமசுப்பிரமணியம். வ.த., தொல்காப்பியம் பொருளதிகாரம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2018.
- ஔவை துரைசாமிப் பிள்ளை, நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (2), பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2011.
- சுப்பிரமணியன். ச.வே., சங்க இலக்கியம் எட்டுத்தொகை, தொகுதி 3, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2013.
- முனைவர் விசுவநாதன், கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
- Athanassakis, Apostolos N., and Benjamin M. Wolkow, [trans]. The Orphic Hymns. Baltimore: The Johns Hopkins University Press, 2013.
- Edmonds, J. M., [trans]. The Greek Bucolic Poets, London: William Heinemann; New York: G. P. Putnam’s Sons, 1919.
- Homer. The Iliad, [trans]. Robert Fagles , Penguin Books, New York ,1990

0 Comments