Article No :
 NPIJT011126

தலைப்பு : கவிதாசனின் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்

ஆய்வாளர் : ச.கார்த்திக், உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை, யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரப்பட்டு, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்

இன்றைய சமுதாயம் மலைவழிப்பாதையைப் போன்று கோணல்களும் ஏற்ற இறக்கங்களும் கொண்டதாக அமைந்துள்ளது. இப்பாதையில் பயணிக்கும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அச்சூழலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். 

இந்நிலையில் சமூக அக்கறைக்கொண்ட படைப்பிலக்கியவாதிகள், அவர்களுக்கு நல்லதன் பயனையும், தீயதன் விளைவையும் சுட்டிக் காட்டி, தம்மை உணர்ந்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்திட வழிகாட்டும் வகையில் படைப்புக்களை அளித்துவருகின்றனர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், கவிஞர் கவிதாசனின் ‘மூன்றாவது கை‘ இளைஞர்களின் மனங்களை நிமிர்த்தும் ‘நெம்புகோலாக‘ விளங்கும் தன்மையை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

விழித்தாக வேண்டும் :

இன்றைய காலக்கட்டத்தில் மேற்கத்தியமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல், புதிய தொழில்நுட்பங்களின் வரவு, அயல் நாட்டு வேலைவாய்ப்புகள், நுகர்வுக் கலாச்சாரம் போன்றவை இளைஞர் வாழ்க்கையில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரம் அவர்கள் போராட்டங்களையும், முரண்பாடுகளையும்கூட எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு இளைஞனுக்கும் வாழ்ந்தாக வேண்டும் என்ற உத்வேகம் வேண்டும், தனக்குள் உள்ள தன்னை உணர்ந்து, வெளிக்கொணர்வதுதான் அதற்குரிய முதற்படி என்பதைக் கவிஞர் எடுத்துக்காட்டுகின்றார்.

ஆற்றுக்குக் கரைகள் தடைகள் அல்ல. அதைப் போல சிக்கல்கள் வாழ்வை நெறிப்படுத்தும் வடிகால்கள் –

வாழ்க்கை ஓட்டம் சீராகச் செல்ல சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை அவசியம். ஏனெனில் அவைதாம் பிரச்சனைகள் ஆகிய வாழ்க்கையை நெறிப்படுத்தும் நெறிகள் என்று கவிஞர் எடுத்துக்காட்டுகின்றார்.

ஒவ்வொரு இளைஞனுக்கும் வாழ்வதற்குரிய துடிப்பு வேண்டும். உழைப்பதற்குத் தயாராக வேண்டும்.

பொருளற்ற கனவுகளில் புதையுண்டு போகாமல், ஒவ்வொரு விடியலும் தனக்காகத்தான் என்ற விழிப்பு வேண்டும். அதற்காக மனமும் விழிகளும் விழித்தாக வேண்டிய கட்டாயத்தைக் கவிஞர்,

“இருளைச் சுருட்டி

அடுப்பில் எரிக்கும்

ஆற்றல்

உனது சுட்டுவிழிகளில்

கொட்டிக் கிடக்கிறது

இளைஞனே

உனது சூரியவிழிகளை

உடனேதிறந்திடு “

என்று தோழமையுடன் கட்டளையிடுகின்றார்.

ஆளுமை வளர்ச்சிக்குரிய படிநிலைகள் :

இன்றைய உலக வாழ்க்கையில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடான நிலைகளைக் கவிஞர்,

தடைகள், தோல்விகள், வீழ்ச்சி, புயல், தேய்பிறையான எண்ணங்கள், மனம் வறட்டு வேதாந்தங்களால் மலடாக

மயங்கியிருத்தல், ஏமாற்றங்கள், முட்கள் நிறைந்த பாதையாக வாழ்வின் வெளி என்று எடுத்துக்காட்டுகின்றார்.

இந்த வாழ்க்ககையை மலர்க்காடாக மாற்ற யாரும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருத்தல் கூடாது. அறிவுக்கண்ணைத் திறந்து பார்த்தால், திசைகள் தோறும் வாய்ப்பின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன என்பதை

உணரமுடியும். ஆனால், இளைஞர்கள் உணராத போக்கைச் சுட்டிக் காட்ட அவர்,

நீயேன்

ஊமை விழிகளால்

வாழ்வை ஊனப்படுத்திக் கொள்கிறாய்?

என்று கேட்கிறார். தேவையற்ற விமர்சனங்கள் – ஆளுமையைச் சிதைக்கும் விமர்சனங்களை இன்னல்

நாக்குகள் என்று குறிப்பிடும் கவிதாசன், தடைகள் பயணத்தின் படிகளாகட்டும். தோல்விகள் இறகுகளாகட்டும்.

வீழ்ச்சி எழுச்சியின் ஏணியாகட்டும். தேடல் மூச்சாகட்டும். தோல்விகள் செதுக்கும் உளிகள் ஆகட்டும். ஏமாற்றங்கள் பாடம் சொல்லும் பள்ளிகள் ஆகட்டும். நெடும்பாதைகளில் பாதங்களைப் பதிக்கக் கற்க வேண்டும். கற்றல் மட்டுமல்ல,

உனது ஞான விழியைத்திற

பத்து திசைகளையும்

ஒரு சேரப் பார்க்கும்

இலட்சியப் பார்வையை விரி

என்று கூறும் கவிஞர், அதற்குரிய விளைவுகளை ஊசியின் நுனியிலும் உலகத்தை நிறுத்த முடியும்.

வெளிச்சத்தின் புன்னகை எங்கும் விரியும். வெற்றியின் தரிசனம் விரைவில் கிடைக்கும்.

தோல்விகள்

உன்னிடம் தோற்றுப்போகும்

உற்சாகத்தின் உயிரோட்டம்

உனது உயிருடன்

கலந்து இயங்கும்

என்று ஆணித்தரமாக உரைக்கிறார்.

உயர்ந்த எண்ணங்களே எரிபொருள் :

ஒவ்வொரு மனிதனின் சாதனைகளுக்கும், அவனுடைய உயர்ந்த எண்ணங்களே எரிபொருளாக

அமைகின்றன. ஆக்கப்பூர்வமாகச் சிந்தனைகள் பிரம்மிக்கத்தக்க மாற்றத்தை உருவாக்கும் என்பதைக் கவிஞர் விளக்குகின்றார்.

உலகின் வளர்ச்சியைக் கவிதாசன் தாவர வளர்ச்சி, விலங்கு வளர்ச்சி, மனித வளர்ச்சி என்று மூன்றாகக் காட்டுகிறார். 

முன்னவை இரண்டும் சூழலைச் சார்ந்திருப்பவை. சூழல் சரியில்லையென்றால் இவற்றின் வளர்ச்சி தடைப்படும். ஆனால், அந்தத் தடைகளை விலக்கிட, வாழ்ந்திட மனிதனால் தான் முடியும், இந்த ஆக்கத்தை அவனுடைய எண்ணங்களே நிர்ணயிக்கின்றன என்பதைக் கவிஞர் விளக்கமாக எடுத்துக்காட்டுகின்றார். இதனை அவர்,

உனது முன்னேற்றத்திற்கு

சூழ்நிலை தடையல்ல

எண்ணந்தான் தடை

எண்ணத்தை மாற்று

எல்லாம் மாறும்

வினாக்குறிகளே

விடைகளாகும்

என்று வழிகாட்டுகிறார். வழிகாட்டும் கவிஞர் உயர்ந்த எண்ணங்களுக்குரிய பேராற்றலை, சருகையும்

மலரவைக்கும், திறமைப்பூக்களைப் பூக்கவைக்கும்; மணித்துளிக்கும் உழைப்பாகிய மகுடத்தைச் சூடவைக்கும்;

வாய்ப்பின் கதவுகளைத் திறக்க வைக்கும், முடியாது என்பது முடியாது போகும்; முடியும் என்பதை மூச்சாக்கும்;

சூரியனால் கூட விழுங்க முடியாத பனித்துளிகளை உருவாக்கும் என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றார். ஆசையால்,

உனது எண்ணங்களே

மண்ணையும் விண்ணையும்

இணைக்கும் ஏணிப்படிகள்

என்று காட்டி, மேலே மேலே ஏறிச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகின்றார்.

தேடல் வேண்டும் :

மனிதன் முன்னேற அனுபவ முத்திரைகளைப் பெற வேண்டும். புதிய கருத்துக்களுக்காக மனக்கதவுகள்

எப்போதும் திறந்தே கிடக்க வேண்டும். தேடல் முதலில் தன்னிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதைக் கவிதாசன், கல்லுக்குள் சிலை ஒளிந்திருக்கிறது. அதைப் போல, நீ உன்னைக் கண்டடைதல் வேண்டும்; உன் ஆற்றலைத் தேடி, அதன் அடையாளத்தை உணர்ந்திட வேண்டும். இலக்கை அடையும் வரை இடைவெளி இல்லை என்ற இலக்கோடு தேடும்போது, புதிய ஆற்றல் பிறக்கின்றது என்பதை உணர்த்தும் கவிஞர் இளைஞர்களை நோக்கி,

உன்னால் முடியும்

ஒப்புக் கொள்

உன்னால் முடியும்

முயற்சிக்கிறேன்

என்பதை விடுத்து

முடித்துக் காட்டுகிறேன்

என்று உறுதிசொல்

என்று அறிவுறுத்துகின்றார், வழிகாட்டுகின்றார்.

உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும் :

Start With Yourself என்னும் ஆங்கிலப் பழமொழியைக் கவிஞர் தக்க இடத்தில் பயன்படுத்திக்காட்டுகிறார்.

எந்த உதவியும், உயர்வும் தன்னிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதை அவர், 

முதலில்

உன்னை உயர்த்து

பிறகு உலகத்தை எடுத்து

விரல் நுனியில் வைத்து

அதனை

உனக்கும் மேலே உயர்த்து

என்று சொல்லிக் கொடுக்கிறார்.

விமர்சனங்கள் உரமாகட்டும் :

மனிதனின் வாழ்க்கைப்பாதையில் அவர் எதிர்கொள்ளும் கேலிச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு ஆகியவை,

அவனுக்குச் சிறையாகக் கூடாது. அவை மனிதனைச் சிந்திக்க வைக்கும் சிறகுகள் ஆகவேண்டும். முடியாது

என்பதை உள்ளம் ஒரு நாளும் ஏற்கக் கூடாது. உறக்கமும், சோம்பலும் உடல் ஓய்வுக்காக மட்டுமே என்றாக

வேண்டும். தன்னைத் தொலைக்காமல் வாழ இமைகள் மூடிய நிலையிலும் மனம் விழித்திருக்க வேண்டும் என்று

விளக்கும் கவிஞர்,

நீ விழி,

உலகையும் விழிக்கவைக்க

ஆம்

விழிப்புதான்

விடியலின் அழைப்பு

என்று உணர்த்துகின்றார்.

முயற்சி மூலதனமாகட்டும் :

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும், அப்பொருளையே ஈட்டும் மூலதனமாகக் கவிஞர்

முயற்சியைக் குறித்துக் காட்டுகிறார். முயற்சிக் கற்களானால் வெற்றிக் கனிகள் கொட்டிக் கிடக்கும்; முயற்சியும்

அதன் விளைவான பயிற்சியும் மனிதனின் சிறகுகளால் வாழ்க்கை வரலாற்று ஏடுகள் சாதனைகளையே பதிவு

செய்யும், புதிய பாதைகளைக் காட்டும், முயற்சிகள் முறியடிக்கப்படும்போது, காயங்களைக் கணக்கில் வைத்துக்

கொண்டு, மேலும் தொடர்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு தொடர்ந்து சென்று வெற்றிக்கண்டவர்களையும் கவிஞர் கோடிட்டுக் காட்டுகிறார். அதனால்,

முயற்சியின் கைகளால்

இமயத்தை

இன்று

நீ அசைத்தால்

நாளைய உலகம்

உனது பாதச் சுவடுகளில்

பாடம் படிக்கும்

என்று நட்புணர்வோடு உணரவைக்கிறார்.

மூன்றாவது கை :

மனிதனின் புறவாழ்க்கை இயக்கத்திற்கு அடித்தளமாக, அவனுடைய இரண்டு கைகள் அமைகின்றன.

அகவாழ்க்கை இயக்கத்திற்கு அவனுக்கு மூன்றாவது கை அவசியமாகின்றது. இந்த மூன்றாவது கையின் இயக்கமே அவனுடைய புற வாழ்க்கையின் தரத்தையும், இலக்கையும், மேம்பாட்டையும் நிர்ணயிக்கின்றது,

நிலைநிறுத்துகின்றது.

மூன்றாவது கை முடங்கிக் கிடந்தால் முன்னேற்றம் சாத்தியமில்லை. அந்தக் கையைக் கொஞ்சம்

உயர்த்தினால் போதும். இலட்சியப்பூக்களை எளிதாகப் பறிக்க முடியும் என்று ஆற்றுப்படுத்தும் கவிதாசன்,

தன்னம்பிக்கை ஆகிய மூன்றாவது கையின் தனிச்சிறப்பை

மூன்றாவது கை

முடங்கிக் கிடக்கும் வரை

வாழ்வின்

உதயக்கிழக்கு விழிக்காது

முன்னேற்றக் கதவுகள் திறக்காது

என்று நம்பிக்கையோடு ஆற்றுப்படுத்துகின்றார்.

நிறைவாக :

கவிதாசனின் கவிதைகளைப்பற்றி ஜெ. கமலநாதன் தன் அணிந்துரையில், இவை பொழுதுபோக்குக் கவிதைகள் அல்ல, பொழுதைப் பயன்மிக்கதாகும் உத்வேகக் கவிதைகள், நலிவும் சலிப்பும், தோல்வி மனப்பான்மையும் துயரமும் கூடி வாடிக்கிடக்கும் இளைஞர்கள் – இதைக் கேட்டால் எழுச்சிபெற்றுப் புதுமை முயற்சிகளில் ஈடுபடப் புறப்படுவது உறுதி என்று நம்பிக்கையோடு கூறியுள்ள உறுதிப்பாட்டை வழிமொழிந்து, கட்டுரை நிறைவடைகின்றது.