Article No : NPIJT040926
தலைப்பு : அரபு - தமிழ் உறவு
ஆய்வாளர்கள் : முனைவர் மு. முஸ்தபா, உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, புதுக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 600014 & முனைவர் ம. ஜகீர் கான், உதவிப் பேராசிரியர், அரபு முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, புதுக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 600014.
தமிழகத்தில் இஸ்லாம் நிலைபெறுவதற்கு முந்திய காலத்திலிருந்தே தமிழர்களுக்கும், அரபியர்களுக்கும் கடல் வழி வாணிகத் தொடர்பு இருந்திருக்கிறது என்பதற்குத் தமிழில் பல்வேறு சான்றுகள் உள்ளன. இது தவிர மொழி வழியிலும் இரண்டுக்குமான ஒப்புமைகள் பல இருப்பதை மொழி அறிஞர்கள் நிறுவியுள்ளனர். உலக மாந்தரெல்லாம் ஒரு தாய் வழியினராதலால் அவர் வழங்கி வரும் பல்வேறு மொழி ஒரு தாய் வழியாக இருத்தல் வேண்டும். எனவே உலக மொழிகளுக்கெல்லாம் ஒரு மூலமொழி உண்டு என்பது தேவநேயப் பாவாணர் போன்றோர்களால் முன்னெடுக்கப்படும் மொழிக்கோட்பாடாக அமைந்தது.
இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன்னரே அரபு மக்கள் திரைக் கடலோடித் திரவியம் தேடுபவர்களாக வாழ்ந்து வந்தனர். பல நாடுகளைப்பற்றி அறிந்திருந்தனர். சீனதேசம் வரை சென்றிருந்தனர் 'சீனம் சென்றேனும் ஞானம் தேடு' என்னும் நபிகள் நாயகம் முகம்மது (சல்) அவர்களின் பொன்மொழியிலிருந்து அவர்களும் அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களும் சீனம் முதலிய நாடுகளைப் பற்றி அறிந்திருந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே அரபியர் பண்டமாற்று வியாபாரத்துக்காகக் கப்பல் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றனர் என்பதற்குச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலே சான்றுகள் உள்ளன.
சங்க கால இலக்கியமான எட்டுத்தொகை பத்துப்பாட்டையும் கருதுகிறோம்.
" இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன்பிருந்தே அராபியர் மேற்கு இந்திய நாடுகளுடன் பெருமளவிலான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்." (1)
என எஸ். சிறிகந்தயா என்னும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
முகமது நபியின் வருகையினாலும் அவரின் பின் வந்தவர்களின் தலைமையில் இஸ்லாம் வளர்ச்சி அடைந்தமையினாலும் ஒரே முறையில், அட்லாண்டிக் கடலிருந்து பசுபிக் வரை உள்ள பிரதேசங்களில் பரவிய போதிலும் அவர்களின் செல்வாக்கு நிலையாக இருந்தது. இஸ்லாம் உலகில் பரவத் தலைப்பட்டதும் இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம் குடியேற்றங்கள் அவர்களின் வியாபாரக் குறிக்கோள்கள் நிறைவேற அந்நாட்டு இந்து மன்னர்கள் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் அளித்தனர். இதன் பயனாக அவர்களுடைய பண்டமாற்று வியாபாரம் பல்கிப் பெருகியது.
இந்த நிலையில் 'திரைக்கடலோடியும் திரவியம் தேடு' என்னும் குறிக்கோளுடன் இயங்கிய முஸ்லிம்கள் கி.பி.9 ஆம் நூற்றாண்டில் அத்தகைய உச்ச நிலையை அடைந்தனர். இஸ்லாமிய அரபியரின் கப்பல்கள், இந்தியாவின் மேற்குக் கரையோரத் துறைமுகங்களுடன் மட்டுமின்றி இலங்கைத் துறைமுகங்களுடனும் பண்டமாற்ற வியாபாரத்துறைகளில் ஆர்வமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன.
கி.பி. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக அமைந்து விடுகின்றது. ஹிஜ்ரீ ஆண்டு 578 இல் அதாவது கி.பி. 1182 இல் அரபு நாட்டில் உள்ள மதீனா மாநகரிலிருந்து ஒரு மனிதப் புனிதர் தமிழகத்துக்கு வருகைத் தந்தார். அப்பொழுது அரபு நாடுகளிலே சிலுவை யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த மனிதப் புனிதரான சையத் இபுராஹீம் அவர்கள், நபிகள் முகம்மது (சல்) அவர்களின் புதல்வி பாத்திமா நாயகி அவர்களின் புதல்வர் ஹுசைன் (ரலி) அவர்களின் வழித்தோன்றலாக வந்துள்ளார். சையது இப்ராஹீம் அவர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கண்ணனூரில் வந்திறங்கி உள்நாட்டுக்குச் சென்றார்கள்.
அவரது கருத்துப்படி உலகின் முதல் மொழியாக அவர் சுட்டும் மொழித் தமிழேயாகும். உலகின் முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டமாகும். அங்குதான் முதன்மொழித் தோன்றியது என்பது ஒரு கருத்து.
" ஒரு மொழியின் தொன்மையை அதுபோலவே தொன்மையானதாகக் கருதப்படும் பிறிதொரு மொழியில் இடம் பெற்றுள்ள சில ஒப்புமைகளைக் கொண்டும் இரண்டின் தொன்மையும் உறுதிப்படுத்துவதுண்டு. ஆனால் இதன் மூலம் இரண்டு மொழிகளையும் ஒரே குடும்ப மொழிகள் என்றோ, ஒரே இனம் என்றோ கருதமுடியாது." (2).
இவ்விடத்து கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் சுட்டும் சில கருத்துக்களைக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
தமிழர் அரபியர் உறவு என்பது மொழிவழி ஏற்பட்டதன்று. அது சுமார் நான்காயிரம் ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்த வணிக உறவின் காரணமாக ஏற்பட்டது என்பர். சங்க இலக்கியத்தில் யவனர் என்ற சொல் பல்வேறு இடங்களில் பயின்று வந்துள்ளதைச் சங்க இலக்கியச் சொல்லடைவு நூல் வழி அறியமுடியும். அவற்றுள்,
யவனர் தந்த வினைமான் நன்கலம் (அகம். 149) (3)
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் (புறம். 56) (4)
யவனர் இயற்றிய வினைமான் பாவை (நெடு நல்) -101 (5)
தமிழ்நாட்டுக்கு அவ்வரபு மக்கள் வந்து கிழக்கு மேற்கு வணிகத்துறையிலே பெரிதும் ஈடுபட்டு வந்தனர். அதற்கான அகச் சான்றுகளைச் சங்ககால இலக்கியங்களிலே நிறையக் காணலாம்.
யவன சோனகர் :
யவனரின் தமிழ்நாட்டு வருகையின் பிரதான குறிக்கோள் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வியாபார நோக்கமாகவே வந்தனர். கிழக்கு நாடுகளுக்கு அவசியமான பொருள்களை மேற்கிலிருந்து கொண்டுவரவும் மேற்கு நாடுகளுக்குத் தேவையான பொருட்களைக் கிழக்கு நாடுகளிலிருந்து பண்டமாற்று வியாபாரத்திலே தான் அவர்கள் பெரிதும் ஈடுபட்டுவந்தனர்.
" கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த விணைமாணன்கலம் பொன்னொடு வந்து
கறியொடு பெயரும் வனங்கெழு முசிறி." (6)
இங்கே கறி என்னும் சொல் மிளகினைக் குறிக்கிறது. மிளகு போன்ற வாசனைத் திரவியங்களினால் ஈர்க்கப்பட்டே யவனர் முதலியோர் பொதுவாகக் கிழக்கு நாடுகளுக்கும் சிறப்பாகத் தமிழ்நாட்டுக்கும் வருகைத் தந்தனர். அவர்கள் பெரிதும் விரும்பிய பொருள்களுள் ஒன்று மிளகு. இதனாலேயே 'யவனப் பிரியம்' என மிளகு அழைக்கப்படுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள முசிறி என்ற நகர்ப்பெயரும் அரபு மொழியிலிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர்.
எட்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திவர் கரநிகண்டு ‘யவனர் சோனகர்' எனக் குறிப்பிடுகிறது. சோனகர் தாம் யவனர் என நிரூபிக்கிறது. அதன் பின்னர்த் தோன்றிய பிங்–கலந்தை என்னும் பிங்கல நிகண்டும் அவ்வாறே கூறுகின்றது.
யவனர் தச்சர்களாக இருந்தனர் என்பதை மணிமேகலை,
“அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
என்றும், பெருங்கதை
யவனத் தச்சரும் அவந்தித் கொல்லரும் “
என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். உண்மையிலேயே யவனர்கள் தச்சுத் தொழிலில் திறமை மிக்கவர்களாக இருந்தனர் என்பதற்கு சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் பலசான்றுகள் உள்ளன.
பொறிகள் இயற்றுவதில் யவனர்களுக்கு இருந்த திறமையைக் குறிப்பிடவந்த திருத்தக்கதேவர், அவர்களால் இயற்றப்பட்ட பொறிகளைக் குறிப்பிடுகின்றார். 'அம்புகளையும் வேல்களையும் கற்களையும் உமிழ்வனவாக - உமிழ்ந்து எறிவனவாக தங்கள் அறிவின் திறமையினால் பொறிகள் அமைத்தனர்'. இக்கருத்துக்களே யவனர் குறித்து ம. மு உவைஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வழங்கும் சிங்கள மொழியிலும் யவனர் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.
சிங்கள மொழியில் தோன்றிய பழைய இலக்கியங்களிலும் சோனகரைப் பற்றிய குறிப்புக்கள் வரும்பொழுது யோனக என்பதே உபயோகப்படுத்தப்படுவதைக் காணலாம். 'சோனக வீதி' என்பது கூட சிங்கள மொழியில் 'யோனக வீதி' அல்லது 'யொன் வீதி' என்றே இலங்கையில் இன்றும் வழங்கப்படுகின்றது.
சென்ற பல நூற்றாண்டுகளாக வாழையடி இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இன்றும் சோனகர் என்றே அழைக்கப்படுகின்றனர். இலங்கை அரசும் அவர்களை இனம் காண்பதற்காக இலங்கைச் சோனகர் என்றே அழைத்து வருகிறது. இந்தியாவிலிருந்து சிறப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து அண்மைக்காலங்களில் இலங்கை வந்த முஸ்லிம்கள் இந்தியச் சோனகர் என வழங்கப்படுகின்றனர். (அரபு மக்களின் பரம்பரையினரைச் சோனகர் என்று சுட்டும் வழக்கம் இன்று இலங்கையில் மாத்திரமே இருந்து வருகிறது) அரசு அங்கீகாரம் பெற்றதாய் அவ்வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதாக இஸ்லாம் வளர்த்தத் தமிழ் நூலில் சுட்டி விளக்கப்பட்டுள்ளது.
'யவனர்' என்னும் சொல் 'ஆனர்' ஆகத் திரிந்து சகர மெய் பெற்று 'சோனகர்' என, ஆன்றோன் சான்றோர் எனத் திரிந்தது போல் திரிந்துள்ளது என்றும் பின்னர் 'சதம்' என்னும் சொல் 'சதகம்' ஆனது போல் 'சோனர்' என்பது 'சோனகர்' ஆக மாறி உள்ளது என்றும் வந்துள்ளமைப் புலனாகின்றது. "
யவனர் என்னும் சொல்லிலிருந்து சோனகர் என்னும் பதம் மருவியதாக இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் கூறுகிறது.
முஸ்லிம்களையோ, முஸ்லிம்களின் மூதாதையாரான அரபு மக்களையோ குறிக்கவே இவ்வாறு ஒரே ஆசிரியர் இவ்விரண்டு சொற்களையும் தமது நூலில் பயன்படுத்தி உள்ளமையைக் காணலாம். எனவே, யவனர், சோனகர் என்னும் இரண்டு சொற்களும் பண்டு தொட்டு ஒரே கருத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம்.
சங்ககால இலக்கியங்களில் யவனர் என வந்த சொல்லுக்கு, அவ்விலக்கியங்களுக்கு உரைவகுக்க முற்பட்ட பிற்காலத்தில் வந்த நச்சினார்க்கினியர் சோனகர் என்றே பொருள் தந்துள்ளார். திவாகரம் என்னும் நிகண்டும் அதனைத் தொடர்ந்து வந்த பிங்கலந்தை என்னும் நிகண்டும் 'சோனகர் யவனர்' என்றே கூறுகின்றன. முதலில் சோனகர் என்ற பதத்தைக் குறிப்பிட்டு விட்டே யவனர் எனக் குறிப்பிடுகின்றன.
அடிக்குறிப்பு :
- ம. முகம்மது உவைஸ், இசுலாம் வளர்த்த தமிழ், பக்-8
- அ. ஏகாம்பரம், தமிழ் இஸ்லாமிய மரபுகள், பக்-2
- கழக வெளியீடு, அகநானூறு, பக்-68
- கழக வெளியீடு, புறநானூறு, பக்- 96
- கழக வெளியீடு, நெடுநல்வாடை, பக்- 72
- தமிழ்நாடு பாடநூல் கழகம், பக்- 106

0 Comments