Article No : NPIJT010926

தலைப்பு : பெண்ணியம் - சங்ககாலம் முதல் தற்காலம் வரை

ஆய்வாளர் : முனைவர் அ. அப்சர் , உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புதுக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 600014

முன்னுரை :

சமுதாயத்தில் பெண் என்பவள் தாழ்ந்த நிலையிலேயே பழங்காலத்தில் இருந்து வந்தாள். ஆணுக்கு அடிமைப்பட்டு ஆணின் செயலுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்து வந்தாள். சங்ககாலத்தில் குழந்தைத் திருமணம், பொருந்தாத் திருமணம், பெண்ணின் விருப்பம் மதிக்கப்படாமல் ஆண்களாக அவளது திருமணத்தை முடிவு செய்வது போன்றவை நடைமுறையில் இருந்து சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு கொத்தடிமையாகவே, எடுப்பார் கைப்பிள்ளையாகவே, ஆண்களின் கைப் பாவையாகவே வாழ்ந்து வந்திருக்கிறாள் என்பது தமிழ் இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது. 

பெண்ணியம் - விளக்கம் :

பெண்ணின் இயல்புகளைப் பெற்றிருப்பது பெண்மையாகும். பெண்ணைப் பற்றிய கொள்கை அல்லது கோட்பாட்டைக் குறிப்பது பெண்ணியமாகும். சமுதாயம் காலந்தோறும் பெண்களுக்குக் கொடுத்திருந்த இடத்தையும், விதித்திருந்த கட்டுப்பாடுகளையும், அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் விடுதலைப் பெறவும் சம உரிமை பெறவும் தோன்றியதே பெண்ணியம் ஆகும். Feminism என்ற ஆங்கிலச் சொல் Femina என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்ததாகும். பெண்ணியம் என்பது பெண்களின் சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் பெண்களின் குணாதிசயங்களையும் எடுத்துக்கூறுவதாகப் பொருள்படும்.

பெண்ணியம் என்பதற்கு “பெண் எந்த ஆணுக்கும் நிகரானவளே! எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும், அவள் அடக்கி வைக்கப்படக்கூடாது, தனிமைப்படுத்தி வைக்கப்படக்கூடாது, சார்பு நிலைப்படுத்தக் கூடாது” (1) என்று பொருள்படுவதாக பிரேமா விளக்கம் தருகிறார்.

சுதந்திரமாக செயல்படாமல் தனித்துவம் பெறாமல் தன்னைச் சார்ந்துள்ள ஆணின் மேலாதிக்கத்தில், அவனது செயல்களுக்குத் தலையாட்டி அடிமைப்பட்டுக்கிடப்பது; அவனது பாலியல் இச்சைகளுக்கு அடிபணிந்து காமத்தின் ஒரு கருவியாக இருப்பது; எத்தனை இன்னல்கள் அவன் தந்தாலும் அவற்றை மறைத்து அவனது நலனில் அக்கறை கொள்வது; அவனது வளர்ச்சியையும் அவனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதையும் கடமையாகக் கொண்டிருப்பது என இத்தகைய வாழ்க்கை நடைமுறையே இக்காலப் பெண்கள் தங்களின் வாழ்வியல் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

சங்ககாலத்தில் பெண்ணியம் :

அக்காலத்தில் மக்கள் கடல் கடந்து வாணிகம் செய்து அங்குத் தமது பண்பாட்டுக் கூறுகளைப் பரப்பியத்துடன் வாழ்க்கையினைப் பல கோணங்களில் அனுபவித்து வந்தனர் என்று கூறுவதெல்லாம் ஆண்களையே மையப்படுத்திய கருத்துக்களைத் தவிர பெண்களையும் உட்படுத்திய கருத்துக்கள் இல்லை என்பதைச் சங்ககால இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். “இல்லுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்”(2) (குறுந்தொகை), “முந்நீர் வழக்கம் மகடூவோடில்லை”(3)(தொல்-பொருள்-980) என்னும் வரிகள் சங்ககாலப் பெண்கள் கடல்கடந்து குறிப்பாக வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன. அக்காலத்தில் பெண்கள் தம் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டை உலகமாகவும் கணவனை உயிராகவும் பாவித்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறாள். கணவன் பொருளீட்ட பல இடங்களுக்கும் செல்லும்போது அங்குப் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவற்றை மனைவியானவள் சுட்டிக்காட்டவோ, எடுத்துக்கூறவோ அவளுக்கு முற்றிலும் உரிமையில்லாத நிலை, பெண்கல்வி அறிவைப் பெறாதநிலை என்று பெண்களுக்குச் சங்ககாலத்தில் எந்த உரிமையும் ஆண் வர்க்கத்தால் கிடைக்கவில்லை, அவள் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே இருந்தாள் என்பதை, “வினையே ஆடவர்க்கு உயிரே” என்னும் குறுந்தொகைப் பாடல் வரியின் வாயிலாக அறியலாம்.

“சமூகத்தில் பால்ரீதியாக ஏற்பட்ட வேலை பிரிவினையே பெண்ணின் அந்தஸ்தை குறைத்தது” (4) என்னும் இக்கூற்று பெண் ஆணின் காம நுகர்வுப் பொருளாகவும் குழந்தைகளைப் பெறும் இயந்திரமாகவுமே இருந்தாள் என்பதை மெய்ப்பிக்கின்றது. இல்லறத்தில் ஈடுபட்ட பெண் ஒரு சிறைப்பறவை போன்றே வாழ்வதும், வயதான ஒருவனுக்கு இளம் வயதுப் பெண்ணை மனம் முடித்து வைக்க, அவன் சிறிது காலமே அவளுடன் வாழ்ந்து இறந்துவிட, அப்பெண் விதவையாவதும் இன்றும் உள்ள நடைமுறை; அக்காலங்களில் கணவனை இழந்த கைம்பெண் கணவன் உடல்எரியும் சிதையிலே பாய்ந்து உடன்கட்டை ஏறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.

பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் தோன்றிப் பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பெண் விடுதலைக்காகப் பாடல்கள் பல பாடிய பின்னரே பெண் உரிமை மதிக்கப்பட்டு பெண்களுக்கான இயக்கங்கள் வளர்ந்தன எனில் இது மிகையாகாது.

எண்பதுகளில் பெண்ணியம் :

தமிழ்ப்புனைக்கதைகளில் தொடக்க காலத்தில் குழந்தை மணம், இளமைக்கால மணம் என்ற நிலையில் இருந்த போக்கு எண்பதுகளில் மாறியுள்ளது. இக்காலகட்டத்தின் கடைசியில் தான் மேலைநாடுகளில், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் பெண்ணிய இயக்கம் ஒன்றனைத் தோற்றுவிக்கவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. இதன் விளைவாக பெண்ணியச் சிந்தனையானது உலகளாவிய இயக்கமாக உருபெற்றது. அனைத்துத் துறைகளிலும் பெண் சமநிலைப் பெறுதல் வேண்டும் என்னும் நிலை உருவாகியதோடு அரசாங்கம், கல்வி, அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் பெண்கள் எழுச்சிப்பெற வழிவகுத்தது. பெண்கள் நல்வாழ்வு மையங்கள், சமதர்மப் பெண்கள் சங்கம், எழுத்தாளர்கள் அமைப்பு முறை, மகளிர் சங்கங்கள், தேசிய கருக்கலைப்பு எதிர்ப்புப் பிரச்சாரக் குழு, பாலியல் வன்முறை எதிர்ப்புக்குழு, பெண்கள் பாதுகாப்பு மையங்கள் என உலகம் முழுவதும் பல்வேறுபட்ட அமைப்புகள் பெண்களுக்காக எண்பதுகளில் தோன்றின. பெண்களுக்காகப் பல அமைப்புகள் தோன்றினாலும் பெண்ணின் விருப்பத்தைக் கேட்காமல் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் முடிவெடுக்கும் மனநிலை மக்களிடம் மாறாமலே இருக்கிறது. திருமணத்தின் போதும் சரி; பிறவேளைகளிலும் சரி; ஆணின் எதிர்பார்ப்புகளை மதிக்கின்றனரே தவிர பெண்ணானவள் கல்வியறிவு பெற்றிருந்தாலும் கூட அவளது விருப்பத்திற்கு இடம் தரப்படுவதில்லை. நன்றாகப் படிக்கும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து மேற்படிப்புக்கு அனுப்பாமல் வீட்டிலேயே முடக்கிவிடுகின்றனர். அதிக அளவில் படித்தால் அப்பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாகிவிடும் எனப் பல குடும்பங்கள் நினைத்து இங்ஙனம் செய்கின்றனர்.

இவ்வாறாகவே பெண்ணின் திருமணம் அவளது விருப்பமின்றியே நடக்கிறது என்பதை ,

“நான் எம்.எஸ்ஸி., பண்ணனும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன்?. ஃபஸ்ட் கிளாஸில் தான் பாஸ் பண்ணி இருந்தேன். ஸீட்கூட சுலபமா கிடைச்சிருக்கும். ஆனா எதுக்கு இதுக்கு மேல படிப்பு? எம்.எஸ்ஸிக்கு மேல மாப்பிள்ளை தேட முடியமா! காலத்தில்? கல்யாணத்தைக் கட்டி ஒருத்தன் வீட்டுக்கு அனுப்பனும்னு ஒரே பிடியா அப்பா மனசு இளகிவிடாதபடி கெஞ்சா…”(5)

“ ஆமா! நீ எம்.ஏ‌., முடிச்சாலும் என்ன பெருசா நடந்துடப் போகுது!.... வீட்டோடு இருந்து நல்லபடியா குடும்பம் பண்ணி, குழந்தை பெத்து வளக்க, பட்டமும் கண்றாவியும் என்னத்துக்கு” (6)

எனும் இப்பகுதிகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பெண்ணின் பெற்றோர் கட்டாயப்படுத்தி மணவாழ்க்கையில் பெண்களைத் தள்ளி விடுவதை இதன் மூலம் நம்மால் காண முடிகிறது‌ பெண்ணுக்கு அவளது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து வைப்பதுடன் வரதட்சணை என்னும் பாழங்கிணற்றில் பெற்றோர்கள் தாங்களாகவே சென்று விழுகின்றனர். வரதட்சணைப் பழக்கமானது, அனைத்து சமுதாயத்தினரிடமும் நகரம், கிராமம் என்ற வேறுபாடின்றிப் பரவிக் கிடக்கிறது. மணவாழ்க்கையில் சிக்கல் உருவாக இந்த வரதட்சணை ஒரு பெரும் காரணமாக அமைகிறது என்பதை,

“எம் பயலுக்கு நூறு சவரன் போட்டு, காரு வாங்கிக்கொடுத்து பொண்ணு கட்றதுக்கு இருக்கையில்…”(7)

“ஒரு சம்சாரி வேலை செய்யற குடிகாரப்பய, கூலி வாங்குற மொதக் கொண்டு பத்து பவுன் போடு, பதினைந்து பவுன் கொடு என்கிறான்” (8)

என்னும் பகுதியின் வாயிலாக அறியலாம். இன்னும் சில குடும்பங்களில் திருமணத்தின் போது வரதட்சணை என்று ஒரு பைசாக்கூட நாங்கள் வாங்கும் வழக்கம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்; ஆனால் வருபவர்களை நன்றாக கவனிக்க வேண்டும். மாப்பிள்ளை அலுவலகம் சென்று வர ஒரு வாகனம், திருமணத்திற்குப் பின் அவன் மனைவியோடு தனியாகச் செல்ல பென்ஸ் கார், கல்யாணச் செலவுக்கு ஒரு இலட்சம் இது செய்தால் போதும்; எல்லாம் உங்கள் மகள், மருமகனுக்குத் தானே செய்கிறீர்கள் என்று வரதட்சணையை மறைமுகமாகக் கேட்கும் வழக்கமும் இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தகுந்ததாகும்.

குடும்பச் சிதைவுகள் :

கூட்டுக்குடும்பமாக இருந்தாலும் தனிக் குடும்பமாக இருந்தாலும் கணவன், மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடின்றி அன்பும் அரசரணையும் இருந்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும். தவிர ஆணானவன் “தான் ஒரு ஆண்” (9) என்ற ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டுவதும் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி அடிமைப்படுத்தி நடத்துவதும் குடும்பச் சிதைவுக்குக் காரணமாக அமைகிறது.

இதன் காரணமாக மனநிம்மதியின்றித் தன் கணவன் வீட்டில் வாழும் பெண், வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பெண்களின் தத்துவத்தை ஏற்காத ஆண்களின் மனநிலை கேட்கும் சமயங்களில் எல்லாம் பெண் தன் தாய் வீட்டிலிருந்து பணம் கொண்டு வந்து தரவேண்டும் என்னும் கணவனின் எதிர்ப்பார்ப்பு, திருமணத்திற்குப் பின்பு பிறந்த வீட்டைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்று தடை விதிப்பது போலும் செயல்களும், கட்டுப்பாடுகளும் குடும்ப சிதைவுகளில் முடிவடைகிறது. இதனால் குழந்தைகளின் மனநிலையும் பெருமளவு பாதிக்கின்றது.

தற்காலப் பெண்ணியம் :

தமிழகத்தில் பெண்களின் இழிநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டத் தமிழில் நாவல் எழுதிய முதல் நாவலாசிரியர்கள் வேதநாயகம் பிள்ளையும் மாதவையாவும் ஆவர். பெண்களின் இழிநிலையைத் தகர்த்தெரியப் பெண் கல்வி, கணவன் இறந்ததும் பெண் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கைவிடுதல், விதவை மறுமணம் செய்தல், படித்த மனைவியின் பண்பு நலன்கள் போன்ற கருத்துக்களைத் தங்களது நாவல்களில் இவர்கள் படைத்துப் பெண் இனத்திற்கான எழுச்சியை உண்டாக்கினர். இதன் அடிப்படையில் பல பெண்கள் எழுத்தாளர்களாக உருவாகிப் பெண்ணினத்தைப் பற்றி எழுதலாயினர். இந்திய சுதந்திரப் போராட்ட காந்தி, பாரதியார், பாரதிதாசன், பெரியார், அண்ணா போன்றோர் பெண் கல்விக்கும் பெண் உரிமைக்கும் பாடுபட்டு சமுதாயத்தில் அவர்களுக்கு ஓர் உயர்ந்த நிலையை உருவாக்கிக் கொடுத்தனர்‌. கு.ப.ரா, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் போன்றோர் பெண்ணியத்தின் சிக்கல்களைக் கருவாகக் கொண்டு நாவல், சிறுகதை எழுதிப் பெண்ணியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது போன்ற காரணங்களால் பெண்ணியச் சிந்தனைகள் உருவாக்கப்பட்டு அவர்களைப் பாதுகாக்க- அவர்களுக்கு சம உரிமைக் கொடுத்த - பல இயக்கங்கள் துவக்கப்பட்டன. இதனால் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ச்சிப் பெற்றன. இச்சிந்தனையின் தாக்கத்தால் இன்று பெண் கல்வி வளர்ச்சிப் பெற்று அனைத்துத் துறைகளிலும் பெண் சிறந்து விளங்குவதுடன் உயர்பதவிகளில் ஆணுக்கு நிகராக சமநிலையில் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

ராஜம் கிருஷ்ணன் மார்க்சிய பெண்ணியச் சித்தாந்தங்களைத் தம் புதினங்களில் கதைப்படுத்தியுள்ளார்; குடும்ப அமைப்பு ஆணின் ஆளுகையிலும் அதிகாரத்திலும் கட்டிக் காக்கப்படுவதால், அதன் சுதந்திரம் மறுக்கப்படும்போது, பெண் அதைவிட்டு வெளியேறுவதிலும் தவறில்லை என்று படைத்துக்காட்டியுள்ளார். குடும்பம் என்ற அமைப்பு பொருள் உறவு நோக்கில் கட்டமைக்கப்படுவதால், குடும்பமே பெண்களின் சகல ஒடுக்கு முறைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது என்றும், அவ்வமைப்பு சமூக உற்பத்தியில் பெண்கள் பங்கு கொள்வதைத் தள்ளி வைக்கிறது என்றும் தமது பொருளாதார ஆய்வில் எங்கல்ஸ் கூறியுள்ள கருத்தை வீடு புதினத்தின் மூலம் மிகத் தெளிவாக ராஜம் கிருஷ்ணன் கதைப் படித்துள்ளார்.

முடிவுரை :

பெண்கள் மிகப்பழங்காலத்திலிருந்து அடிமைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றனர். தற்காலம் வரையில் அவர்கள் பல இன்னல்களை எதிர்க்கொண்டும் அனுபவித்தும் வருகின்றனர். அண்மைக்காலத்தில் தான் பெண்கள் குறித்த இச்சிந்தனைகள் சிறிது மாற்றம் ஏற்பட்டுப் பெண்ணின் நிலை உயர்வடையத் தொடங்கியுள்ளது. பெண்களின் வளர்ச்சிக்குப் பலர் குரல் கொடுத்ததாலும் நாவல் சிறுகதைகளில் அவர்களின் நிலையை எடுத்துரைத்ததாலும் இன்று பெண்ணியம் குறித்த சிந்தனைகள் வளர்ச்சியுற்று அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் வலுவிழந்து ஆணுக்கு நிகர் பெண் என்ற நிலையை எட்டியுள்ளது. எனினும் பெண்ணியச்சிந்தனைகள் மேம்பாடடைய நாம் இன்னும் கூட நீண்ட தொலைவு நடக்கவேண்டியுள்ளது என்பதே உண்மை.

அடிக்குறிப்பு :

  • முனைவர் இ.பிரேமா, பெண்ணியம், பக்கம் - 02
  • குறுந்தொகை, பக்கம் - 135
  • தொல்காப்பியம் பொருளதிகாரம், பக்கம் - 980
  • ஃபிரடெரிக் எங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், பக்கம் - 355
  • ராஜம்கிருஷ்ணன், ஊமைஅரண்கள்,பக்கம் - 18
  • திலகவதி, அரசிகள் அழுவதில்லை, பக்கம் - 32 & 33
  • ராஜம்கிருஷ்ணன், ஆண்களோடும் பெண்களும், பக்கம் - 8
  • ராஜம்அகிருஷ்ணன், மண்ணகத்துப் பூந்தளிர்கள், பக்கம் - 209
  • ராஜம்கிருஷ்ணன் மண்ணகத்துப் பூந்தளிர்கள் பக்கம் - 209