"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு,
அருந்தியது அற்றது போற்றி உணின்."
— திருக்குறள்
மனித உடல்நலத்தின் அடிப்படை ரகசியத்தை திருவள்ளுவர் ஒரே குறளில் சொல்லிவிட்டார். முன்பு உண்ட உணவு முழுமையாகச் செரித்த பிறகு, உடலுக்குத் தேவையான அளவில் மட்டுமே உணவு உண்டால், தனியாக மருந்து தேவைப்படாது. இதைத்தான் நம் முன்னோர்களும் "பசித்து புசி" என்று எளிமையாகச் சொல்லி வாழ்ந்து காட்டினர்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இயற்கை உரங்களும் விதைகளும் செயற்கையாக மாற்றப்பட்டதன் விளைவுகளை இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதோடு, அவசர வாழ்க்கை முறையும், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் மனிதனை ஆரோக்கியத்திலிருந்து விலக்கி, மருந்துகளையும் மருத்துவமனைகளையும் நோக்கித் தள்ளுகின்றன.
இளைப்பாறுவதற்காக இறைவன் இரவை ஏற்படுத்தினான். ஆனால் "மிட்நைட் கிரேவிங்" என்ற பெயரில் நள்ளிரவில் உண்பதும், தூக்கத்தை இழப்பதும் இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறையாகிவிட்டது. அதன் விளைவாக, இளமையிலேயே கிட்னி, ஈரல், இதயம் போன்ற உறுப்புகளில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்று இதய அறுவைச் சிகிச்சை கூட சாதாரண செய்தியாகிவிட்டது.
முன்னோர்களின் அனுபவ அறிவை இளைய தலைமுறையிடம் பகிர்ந்தால், "பூமர்ஸ்" என்று கேலி செய்து கடந்து செல்கின்றனர். அந்தச் சிரிப்பைக் காணும்போது, எதிர்கால சந்ததியினரின் உடல்நலன் குறித்த கவலை என் இதயத்தை வலிக்கச் செய்கிறது.
இயற்கையை நோக்கித் திரும்புவோம். பசியறிந்து, அளவறிந்து உண்போம். அப்போது மருந்து என்பது மருந்துக் கடையில் கிடைப்பதல்ல; நமது ஒழுக்கமான வாழ்க்கை முறையிலேயே இருப்பதை உணர்வோம்.

0 Comments