மிலாது நபி விழா நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரெங்கும் விழாக்கோலம் தொடங்கியிருந்தது. பள்ளிவாசல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வீதிகளில் மக்கள் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த ஊரின் முக்கியமான ஆட்டுக்கறி கடைகளில் ஒன்று மொய்தீனுடையது.

மொய்தீன் நல்ல உழைப்பாளி மட்டுமல்ல, தன்னிடம் வேலை செய்பவர்களைத் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதும் நல்ல மனம் கொண்டவரும் கூட. அவருடைய கடையில் பல ஆண்டுகளாக கரீம் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார்.

கரீம் அதிகம் படிக்காதவர். ஆனால் உழைப்பில் நேர்மையானவர். அதிகாலையிலேயே கடைக்கு வந்துவிடுவார். கடையைச் சுத்தம் செய்து, தேவையான பணிகளைச் செய்து, ஆடுகளைப் பராமரித்து, தொழுகையை நிறைவேற்றி, பின்னர் தனது வேலையைத் தொடங்குவார். மொய்தீனின் மகனும் அவ்வப்போது கடைக்கு வந்து கணக்கு வழக்குகளைப் பார்ப்பது வழக்கம்.

மொய்தீன் காலையில் கடையில் அமர்ந்து வியாபாரத்தைக் கவனிப்பார். மதியம் வந்ததும், ஊர் ஊராகச் சென்று நல்ல ஆடுகளை வாங்கி வந்து வீட்டில் பாதுகாப்பாக வைத்துவிடுவார்.

"கரீம், கடையை உன்னிடம் நம்பிக்கையோடு விட்டுச் செல்கிறேன். நீயும் இதை உன் கடை போல பார்த்துக்கொள்," என்று மொய்தீன் அடிக்கடி சொல்வார்.

"முதலாளி, நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்," என்று கரீம் பதிலளிப்பார்.

அவர்களுக்கிடையிலான உறவு முதலாளி–தொழிலாளி உறவாக மட்டும் இருக்கவில்லை. அது நம்பிக்கையால் கட்டப்பட்ட உறவாக இருந்தது.

அடுத்த வாரம் மிலாது நபி விழா.

அன்று கடையில் வழக்கத்தைவிட அதிகமான வேலை மற்றும் வியாபாரம் இருக்கும் என்று மொய்தீன் நினைத்தார். அதனால் கூடுதல் ஆடுகளை வாங்கி வர வேண்டும் என்று முடிவு செய்தார்.

அன்று காலை கரீம் வழக்கம்போல் கடையைத் திறந்தார். ஊதுவத்தி ஏற்றி அல்லாவைத் தொழுது தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தார்.

மதிய நேரம் நெருங்கியதும் மொய்தீன் தனது மகனிடம், "நான் கொஞ்சம் வெளியூருக்குச் சென்று ஆடுகள் வாங்கி வருகிறேன். நீ இங்கேயே இரு," என்று கூறிவிட்டு புறப்படத் தயாரானார்.

அப்போது கரீம் தனது வேலையில் கவனமாக இருந்தார்.

ஒரு கணத்தில் எதிர்பாராத விபத்து நடந்தது.

கரீம் வெட்டுக்கத்தியால் கறி வெட்டிக்கொண்டிருந்தபோது கை தவறி அவரது இடது கையின் கட்டைவிரலில் கத்தி பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. வலியைத் தாங்க முடியாமல், "அல்லாஹ்!" என்று கரீம் கதறினார்.

அந்தச் சத்தத்தைக் கேட்ட மொய்தீன் உடனே ஓடிவந்தார்.

"கரீம்! என்ன ஆயிற்று?" என்று பதற்றத்துடன் கேட்டார்.

கரீமின் கையில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்ததும் மொய்தீன் ஒரு கணம் அதிர்ந்துபோனார். ஆனால் பதற்றத்தில் நின்றுவிடாமல் உடனடியாக முதலுதவி செய்யத் தொடங்கினார்.

"பயப்படாதே கரீம். நான் இருக்கிறேன். உடனே மருத்துவமனைக்குப் போகலாம்," என்று ஆறுதல் கூறினார்.

தனது மகனையும் அழைத்துக் கொண்டு கரீமைத் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவமனையில் மருத்துவரிடம் நிலைமையை விளக்கிய மொய்தீன்,

"டாக்டர், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. முடிந்த எல்லா மருத்துவ உதவியையும் செய்து அவரது விரலைச் சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்," என்றார்.

உடனடியாக முன்பணத்தையும் செலுத்தினார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மொய்தீனின் மகனுக்கு அது பிடிக்கவில்லை. அப்பாவை தனியே அழைத்து "என்னப்பா இது? அவருடைய கவனக்குறைவால் நடந்த விபத்துக்காக நாம் ஏன் இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும்? அவர் வேலைக்காரர்தானே!" என்று கோபமாகக் கேட்டான்.

மொய்தீன் தனது மகனை அமைதியாகப் பார்த்தார்.

"மகனே, அவர் வேலைக்காரர்தான் ஆனால் அவரும் ஒரு மனிதர்தான் . நம்மைப் போலவே உயிரும் உணர்வும் கொண்டவர்.

இன்று அவருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கலாம்." என்றார் அமைதியாக.

மகன் அமைதியாக இருந்தான்.

மொய்தீன் தொடர்ந்து கூறினார்.

"நம்முடைய மார்க்கம் நமக்குக் கருணையையும் நன்மையையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. கஷ்டத்தில் இருப்பவரை விட்டுவிட்டு நாம் எப்படி நம்முடைய மனசாட்சியோடு வாழ முடியும்?"

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவர் கூறினார்:

"அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்.'"

அந்த வார்த்தைகள் மகனின் ஆழ்மனதைத் தொட்டன.

மொய்தீன் மீண்டும் சொன்னார்.

"செல்வம் நம்மிடம் இருப்பது நம்முடைய பெருமைக்காக அல்ல; தேவையான நேரத்தில் பிறருக்கு உதவுவதற்காகவும் இருக்கிறது. நமக்கு இருக்கும் வசதியில் ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சீராக்க முடிந்தால், அதைவிடப் பெரிய நன்மை என்ன இருக்கிறது?"

மகன் தலைகுனிந்தான்.

"அப்பா. நான் தவறாக நினைத்துப் பேசி விட்டேன், என்னை மன்னியுங்கள்"என்றான்.

மொய்தீன் அவனது தோளில் கை வைத்தார்.

"தவறை உணர்ந்து கொள்வதுதான் நல்ல மனிதனின் அடையாளம்." என்றார்.

கரீமுக்கு தேவையான சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்றன.

மருத்துவர்கள் தங்களால் இயன்ற சிறந்தச் சிகிச்சையை அளித்தனர்.

நாட்கள் கடந்தன.

மருத்துவமனையில் இருந்த கரீமை மொய்தீன் தொடர்ந்து, சென்று பார்த்தார்.

"கடவுளின் அருளாலும் உங்கள் அன்பினாலும் நான் நலமடைந்து நன்றாக இருக்கிறேன் முதலாளி," என்று கரீம் கண்களில் கண்ணீருடன் பதிலளிப்பார்.

ஒருநாள் கரீம் மொய்தீனிடம்,

"என்னால் உங்களுக்கு இவ்வளவு செலவு. நான் எப்படி இதைத் திருப்பித் தருவேன்?" என்று கேட்டார்.

மொய்தீன் சிரித்தார்.

"கரீம், இதைக் கடனாக நினைக்காதே. மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை என்று நினைத்துக்கொள்."

அந்த வார்த்தைகளைக் கேட்ட கரீமின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஒரு சில நாட்களிலேயே கரீம் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பினார்.

மிலாது நபி விழாவும் நெருங்கியது.

கரீம் மீண்டும் கடைக்கு வந்தபோது மொய்தீன் அவரை அன்புடன் வரவேற்றார்.

"கரீம், இனிமேல் முன்புபோல் அதிகமாக உடல் உழைப்பு செய்ய வேண்டாம்."

கரீம் ஆச்சரியமாக மொய்தீனைப் பார்த்து என்ன முதலாளி. அப்படியானால் நான் என்ன வேலை செய்வது முதலாளி?"

மொய்தீன் கடையின் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் காட்டினார்.

"இனிமேல் நீ கடையின் கணக்குகளைப் பார்த்துக்கொள். உன் நேர்மையையும் நம்பிக்கையையும் நான் பல ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறேன். உனக்கு இந்தப் பொறுப்பு பொருத்தமானது என்றார்."

கரீமால் எதுவும் பேச இயலவில்லை.

"முதலாளி... நான் இதற்குத் தகுதியானவனா?" என்றார் கரீம்.

"உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் கரீம். உன் கையில் ஏற்பட்ட காயம் உன் வாழ்க்கையில் ஒரு துன்பமான சம்பவமாக இருக்கலாம். ஆனால் அந்தச் சம்பவம் நம்முடைய உறவை இன்னும் வலுப்படுத்தியது."

கரீமின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

"அல்லாஹ் உங்களுக்கு நன்மை அளிக்கட்டும் முதலாளி." என்றார் கரீம்.

மிலாது நபி நாள் வந்தது.

மொய்தீன் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி விழாவைக் கொண்டாடினர்.

அன்று மாலை கரீமும் தனது குடும்பத்துடன் மொய்தீன் வீட்டிற்கு வந்தார்.

மொய்தீன் அவரை அன்புடன் வரவேற்றார்.

அந்த வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி.

கரீம் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

"எனக்கு ஏற்பட்ட ஒரு துயரமான விபத்து, என் விரலை மட்டுமல்ல.. என் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது. ஒரு முதலாளியின் கருணை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையைத் தர முடியும் என்பதை நான் இப்போது உணர்கிறேன்."

மொய்தீனின் மகனும் கரீமிடம் வந்து,

மாமா , அன்று மருத்துவமனையில் நான் பேசியது தவறு. அப்பா எனக்கு, மார்க்கத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிய வைத்தார்," என்றான்.

கரீம் அவனது கையைப் பிடித்துக் கொண்டார்.

அங்கே மதத்தைப் பற்றிய பேச்சைவிட மனிதநேயமே அதிகமாகப் பேசப்பட்டது.

அங்கே பணத்தைவிட அன்பே உயர்ந்திருந்தது.

அங்கே முதலாளி–தொழிலாளி என்ற வேறுபாடு மறைந்து, மனிதன் மனிதனை மதிக்கும் உறவு மட்டும் இருந்தது.

மிலாது நபி நமக்கு நினைவூட்டும் நற்பண்புகளில் கருணையும், அன்பும், பிறருக்கு உதவும் மனமும் முக்கியமானவை.

மார்க்கம் என்பது வெறும் வழிபாடுகளில் மட்டும் வெளிப்படுவதல்ல.

துன்பத்தில் இருக்கும் ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும் கையிலும், உதவி தேவைப்படும் ஒருவரைத் தாங்கும் தோளிலும், பிறருக்காகத் திறக்கும் இதயத்திலும் மார்க்கத்தின் மகத்துவம் வெளிப்படுகிறது.

கரீமின் காயம் ஆறியது.

ஆனால் அந்தச் சம்பவம் மொய்தீனின் குடும்பத்தில் விதைத்த மனிதநேயம் என்ற விதை என்றும் அழியவில்லை. வளர ஆரம்பித்தது

அதுதான்... மார்க்க நெறி தந்த மனிதநேயம்.