நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவன் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இருப்பினும் அவனுக்கு வாழ்க்கையை, செல்வாக்கு நிறைந்ததாகப் பெரிய வாழ்க்கை வாழ வேண்டுமென்ற மாபெரும் ஆசை. அந்த ஆசைக்கு அடிமையாகி அன்றாட சின்ன சின்ன அன்பு, மகிழ்ச்சி அனைத்தையும் இழந்தவன் தான் மாறன்.

தினமும் வேலைக்குப் போவதும் வீட்டிற்கு வருவதும், தன் மனைவியிடமோ, குழந்தையிடமோ சிறிது நேரம் கூட செலவிடுவதுமில்லை.

சிரித்துப் பேசி மகிழ்வதுமில்லை. வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலே எல்லோரிடமும் எரிந்து எரிந்து விழுவான்.

எப்போதும் போல அலுவலகம் முடித்து வருகையில் மழைப் பெய்ய தொடங்கியது. அவன் தனது மிதிவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓரிடம் ஒதுங்கினான். அப்போது மழையையும் பொருட்படுத்தாமல் வயதான முதியவர் தன் மனைவியை மிதிவண்டியில் வைத்து ஆனந்த புன்னகைச் சிதற சிரித்து நனைந்துக் கொண்டிருந்தார்.

அதனை கண்ட மாறன், அய்யா! இந்த மழையில் நனைந்து எதற்கு இப்படி செல்கிறீர்கள் ? வயதான காலத்தில் உடம்புக்கு ஏதாவது ஆகிவிட போகிறது என்றான்.

அதற்கு அவர் கூறினார், தம்பி! என் மனைவிக்கு மழையில் நனைவது பிடிக்கும். அதுவும் நனைந்தபடி என்னோடு மிதிவண்டியில் முன்புறம் அமர்ந்து பயணம் அனுபவிப்பது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி. பெரிய பொன்னோ பொருளோ வாங்கித் தரும் பொருளாதார நிலை என்னிடம் இல்லை. அவளும் என்னிடம் எதையும் கேட்டதில்லை .

என்னை நம்பி கைக்கோர்த்தவளுக்கு அவளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதில்தானே எனக்கு அதீத மகிழ்ச்சி என்பதாலே நான் வாழ்வின் பெரும் நிம்மதியடைகிறேன்.

தம்பி வாழ்வில் சின்ன சின்ன தருணங்களை அன்றே அனுபவித்து வாழ்ந்துவிட வேண்டும். நாளை என்பது நிலையற்ற ஒன்று என்று கூறிவிட்டு மீண்டும் இருவரும் மழையில் ஆனந்த கூத்தாடினார்கள்.

அவன் மழை நின்றதும் மிதிவண்டி எடுத்து வீடு நோக்கிப் பயணிக்க தொடங்கினான்.

அப்போது அவன் மனதில் கடந்த வாரம் உடல்நலமின்றி மருத்துவமனையில் படுத்திருந்தபோது, தன் நிலையைக் கண்டு பரிதவித்த மனைவியின் அன்பும், பாசமும் அதைக்கூட நான் உணராமல் முகம் சுளித்துவிட்டேனே என்று யோசித்தபடி வந்தான்.

அது அவனுக்குப் பல உண்மைகளைக் கற்றுக்கொடுத்திருந்தது.

ஆடம்பர கனவுகளுக்குப் பின்னால் ஓடிய ஓட்டத்தில், அருகில் இருக்கும் நிஜமான உறவுகளை நான் இழந்திருந்தேன் என்பதை அவன் உணர்ந்தான்.

மழை நின்று தூரல் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்த மாலையின் ஈரம், அந்தச் சிறிய வாடகை வீட்டுத் திண்ணையில் கணவனை எதிர்ப்பார்த்து நின்றாள் மாதவி.

வேலை முடிந்து களைப்புடன் வந்த மாறனின் கையில் சுடசுட ஒரு கப் தேநீரை நீட்டினாள் மாதவி.

எப்போதும் எதற்கும் ஒரே பாவனையில் இருக்கும் மாறன் அன்று சற்றே புன்னகைச் செய்தான் "இன்னும் நம்மால் பெரிய வாழ்க்கை வாழ முடியலையேங்கிற வருத்தம் உங்களை விட்டு இன்னும் போகலையா?" என்றாள். அவளது கண்களில் தெரிந்த கவலை மாறனுக்குள் ஏதோ ஒன்றைச் சுட்டது.

அந்தச் சொற்கள் அவனுக்குள் ஒரு பெரிய அலையை எழுப்பின. மாறன் பதில் கூறினான் "இல்லை மாதவி என்றான்.

எப்போதும் எரிந்துவிழும் பேச்சு கொண்ட அவனது பேச்சில் சற்று சோகம் தழு தழுத்தது மாதவியின் கைகளைப் பற்றிக்கொண்டு, "இத்தனை நாளா நான் தேடித் திரிந்த மகிழ்ச்சி எங்கோ தொலைவில் இருப்பதாக நினைத்தேன்.

ஆனால், அது எங்கே இருக்கிறது தெரியுமா?" வீட்டின் ஹாலில், மழைக் குளிர்ச்சியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மூன்று வயது மகனின் முகத்தைப் பார்த்தான். "இவன் நிம்மதியா தூங்குறானே... இந்தத் தூக்கத்துல இருக்கு. நீ என் அருகில் நின்று குடுக்குற இந்தத் தேநீர்ல இருக்கு. வாடகை வீடுதான்; ஆனாலும், நம்ம வியர்வையில நனைஞ்ச இந்த நாலு சுவத்துக்குள்ள கிடைக்கிற அமைதி இருக்கே... அதுக்கு ஈடு இணையே இல்லை.

"மனைவியின் உதடுகளில் மெல்லியதாய் ஒரு புன்னகை மலர்ந்தது.

கணவனின் கண்களில் இருந்த ஏக்கம் மறைந்து, எல்லாவற்றையும் பெற்றுவிட்ட ஒரு பரிபூரண அமைதி அங்கே ஒளிர்ந்தது. வாழ்க்கைப் பெரிதாக எதையும் தந்துவிடவில்லைதான்; ஆனால், இருப்பதை வைத்துக்கொண்டு நிறைவடையத் தெரிந்த மனசுக்கு முன், பேரண்டத்தின் சகல செல்வங்களும் தோற்றுதான் போகும்.

தேடல்கள் யாவும் திசைகள் தொலைத்திருக்க,, வாழ்க்கை பெரிதாய் எதையும் தராவிட்டாலும்... இருப்பதை வைத்து மலரும் புன்னகையில்,, பெருவானம் கைகளில் அடங்குவதை உணர்ந்தது அந்த மனம்!

பரிபூரண மனநிறைவின் வாசலில்,

மகிழ்ச்சி மெல்லச் சிறகடித்து நின்றது! 

சின்ன சின்ன அன்பிலும் மகிழ்ச்சியிலுமே வாழ்க்கையின் பேரானந்தம் இருக்கிறது