அந்த நிமிடத்தில் எனக்குள் ஒரு சிந்தனை பிறந்தது.

"தலைமை என்பது ஒரு பதவி அல்ல. ஒரு பொறுப்பும் அல்ல. தலைமை என்பது தன்னலமற்ற சேவை."

சூழ்நிலைகள் சிக்கலாகும் போது, மற்றவர்கள் யாராவது வருவார்கள் என்று காத்திருக்கிறார்கள்.

தலைவன் மட்டும், "யாராவது" ஆக மாறுகிறான்.

ஒரு சாதாரண மனிதன், ஓர் அசாதாரண தருணத்தில் எடுத்த ஒரு முடிவு, அவரைத் தலைவனாக மாற்றிவிடுகிறது.

அந்த எண்ணங்களோடு வீட்டை அடைந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் என் மகன் என்னை நோக்கி ஓடி வந்தான்.

அவனை மடியில் அமர வைத்துவிட்டு,

"இன்று நான் ஒரு தலைவனைப் பார்த்தேன். அதைப் பற்றி உனக்கு ஒரு பாடம் சொல்லப் போகிறேன். கேட்கிறாயா?" என்று கேட்டேன்.

அவன் சில வினாடிகள் யோசித்தான்.

பிறகு மிகவும் தீவிரமான முகத்துடன்,

"அப்பா... முதலில் எனக்கு ஓர் ஐஸ்கிரீம் வாங்கித் தாருங்கள். அதற்கு பிறகுதான் கேட்பேன்!" என்றான்.

வாழ்க்கையின் பெரிய உண்மைகளைப் புரியவைக்க நினைத்த அப்பாவுக்கு, முதலில் சிறிய பொருளாதார முதலீடு செய்ய வேண்டிய நிலை வந்தது.

வேறு வழியில்லை.

அவனுக்குப் பிடித்த ஐஸ்கிரீமை வாங்கிக் கொடுத்தேன்.

அவன் சாப்பிடத் தொடங்கினான்.

நானும் என் கதையைத் தொடங்கினேன்.

வடபழனி ரவுண்டானா...

போக்குவரத்து...

சாமானிய மனிதன்...

தலைமை...

பொறுப்பு...

சேவை...

எல்லாவற்றையும் அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அவன் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவனுக்குள் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்கள் இறங்கிக் கொண்டிருந்தன.

ஒன்று ஐஸ்கிரீம்.

மற்றொன்று அந்தக் கதை.

கதை முடிவதற்குள் ஐஸ்கிரீம் முடிந்துவிட்டது.

கடைசி ஸ்பூனையும் சாப்பிட்டுவிட்டு அவன் என்னை நோக்கிப் பார்த்தான்.

நான் நினைத்தேன்.

"இப்போது அவன் என்ன கற்றுக்கொண்டான் என்று சொல்லப் போகிறான்."

அவன் அமைதியாகக் கேட்டான்.

"அப்பா... தலைவனாக ஆக இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கணுமா?"

அந்த நொடியில் நான் சிரித்தேன்.

ஏனென்றால் குழந்தைகள் வாழ்க்கையை எளிமையாகப் புரிந்துகொள்கிறார்கள்.

நாமோ பெரியவர்கள், தலைமைப் பற்றிய புத்தகங்களை எழுதுகிறோம்.

ஆனால் உண்மையான தலைமை என்றால் என்ன?

ஒரு நாள், ஒரு சாமானியன் போக்குவரத்து நெரிசலுக்குள் இறங்கி அதைச் சரிசெய்ததைப் போல...

யாரும் பார்க்காத நேரத்தில், யாரும் பாராட்டாத வேளையில், யாருக்கோ உதவுவதற்காக முன்னே வந்து நிற்பது.

அதுதான் தலைமை.

அதுதான் சேவை.

அதுதான் மனிதனின் உண்மையான உயரம்.