இலக்கிய வரலாறு

1. மரபுக்கவிதை என்றால் என்ன?

தொன்றுதொட்டு வருவதையே 'மரபு' என்பார்கள். இவ்வகையில் செய்யுள் வடிவக் கவிதையை 'மரபுக் கவிதை' என்றழைக்கின்றனர். வாய்மொழியாகக் காலந்தோறும் வந்த மரபுக்கவிதையைச் 'செவியுறு கனிகள்' என்றழைத்தனர். மக்களின் உணர்ச்சிக்கும் கருத்திற்கும் ஏற்ற வகையில் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, போன்றவை அமைந்தன. இதன் வளர்ச்சியாகவே பரிபாடல், விருத்தப்பா முதலிய வடிவங்கள் தோன்றின.

2. சங்க இலக்கியத்தின் தனித்தன்மை யாது.

சங்க இலக்கியங்கள் உரிப்பொருளை மையப்படுத்தி உள்ளது. அதற்குரிய பின்னணிகளாக முதற்பொருளையும், கருப்பொருளையும் கொண்ட அகப்பாடல்களையும் புறப்பாடல்களையும் பெற்றுள்ளது. இதுவே சங்க இலக்கியத்தின் தனித்தன்மை ஆகும்.

3. புதுக்கவிதை என்றால் என்ன?

பழைய செய்யுள் மரபுகளைத் தவிர்த்து புதுவகையாகவும் எழுதப்படுகிறது. இத்தகைய கவிதைகள் 'கட்டற்ற கவிதைகள் அல்லது 'புதுக்கவிதைகள்' எனப்படுகின்றன. ஆங்கில மொழியில் 'வால்ட் விட்மன்' என்னும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய புல்லின இதழ்கள் (Leaves of Grass) புதுக்கவிதை வகையின் முதன் முயற்சி ஆகும்.

4. புதினம் (நாவல்) - வரைவிலக்கணம் தருக.

நாவெல்லா (novella) என்ற இத்தாலியச் சொல்லடியாகப் பிறந்த கலை வடிவம் ஆங்கிலத்தில் நாவல் எனப்பட்டது. அதற்குப் புதியது என்பது பொருள். நவீனம் என்று தொடக்கத்தில் அறிமுகமானது. இன்று புதினம் என்றழைக்கப்படுகிறது. அடிப்படையில் நெடுங்கதை தான் புதினம். காவியங்களிலும் நெடுங்கதைதான் சொல்லப்படுகிறது. தற்காலத்தில், சமகால மனிதர்களையும் அவர்கள் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு உரைநடையில் புதினங்கள் படைக்கப்படுசின்றன. கதை மாந்தர்களாலும் கதைக் கருவாலும், கதை நிகழும் நடையாலும் மாறுபட்ட வடிவாக இது தோன்றியமையால் புதினம் என்றனர்.

5. தமிழின் முதல் நாவல்கள் குறித்து எழுதுக.

1876ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக இருந்த வேதநாயகம் பிள்ளை, தமிழில் பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் முதல் புதினம் படைத்தார். சுகுணசுந்தரி என்ற புதினத்தை 1887ஆம் ஆண்டு எழுதினார். பிரதாப முதலியார் சரித்திரம் படைக்கப்பட்ட அதே காலத்தில் இலங்கையில் சித்திலெவ்வை மரைக்காயர் என்பவரால் 'அசன்பே சரித்திரம்' என்னும் புதினம் படைக்கப்பட்டு வெளிவந்தது. இவை இரண்டும் தமிழின் முதல் நாவல்கள் ஆகும். ال

6. சிறுகதையின் இலக்கணம் யாது?

ஏதேனும் ஒரு நிகழ்வு, ஒரு பொழுது, ஒரு சில கதாப்பாத்தி ரங்களை மையமாகக் கொண்டு குறைந்த நேரத்தில் படித்து முடிக் கப்படும் வகையில் படைக்கப்படுவது சிறுகதை ஆகும்.

7. தமிழில் முதன்முதலில் சிறுகதை எழுதியவர் யார்?

எட்கர் ஆலன்போ என்னும் அமெரிக்க எழுத்தாளர் மூலம் சிறுகதை வடிவம் அறிமுகமானது என்பர். தமிழில் இத்தகைய சிறுகதை வடிவங்களை அறிமுகப்படுத்தியவர் வ.வே.சு. ஐயர். இவரே முதன்முதலில் தமிழச் சிறுகதையையும் எழுதினார். 'மங்கை யர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்' என்பது அவருடைய கதைத் தொகுப்பு ஆகும்.

8. தற்காலத் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களுள் சிலரைக் குறிப்பிடுக. 

இன்று பல்வேறு போக்குகளில் சிறுகதை எழுதப்படுகிறது. ஜெயகாந்தன். அழகிரிசாமி, சுந்தர ராமசாமி போன்றோர் மிகச்சிறந்த சிறுகதைகளைப் படைத்துள்ளனர். பிரபஞ்சன், வண்ண நிலவன். சூரிய தீபன், பூமணி, பாமா, அம்பை, பாவண்ணன், சூடாமணி. ஜோதிர்லதா கிரிஜா, சிவகாமி. ஜே.எம்.சாலி, அ. முத்துலிங்கம். ஹெச்.ஜி.ரசூல், கோணங்கி, தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன், சுப்ர பாரதிமணியன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் முதலியோர் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் ஆவர்.

9. நாடகம் விளக்கம் தருக.

இயல். இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைக் கெண்டது தமிழ்மொழி. எனவே இதனை முத்தமிழ் என்று பாராட்டப்படுகிறது. நாடகம் என்பது தமிழின் தொன்மையான கலை வடிவம். ஒரு கதையை உணர்வை, நிகழ்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் ஆகும்.

10. பழந்தமிழ் நாடக இலக்கண நூல்கள் யாவை?

சயந்தம், செயிற்றியம் முறுவல், மதிவாணர், நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார்கூத்து, குணநூல், கூத்தநூல் ஆகியவை நாட்டியத் துக்கும் நாடகத்துக்கும் இலக்கணம் வகுக்கும் நூல்கள் ஆகும்.

11. தெருக்கூத்து - குறிப்பு வரைக.

மேடை நாடகங்களுக்கு அப்பால் தெருக்கூத்து என்னும் நாடக வகை தமிழகச் சிற்றூர்களில் சிறப்பாக இயங்கி வந்தது. அரங்கம் இல்லாமல் தெருக்களில் வெட்ட வெளியில் தெருக்கூத்துக்கள் நடிக்கப் பட்டன. இரவு விடிய விடியத் தெருக்கூத்துகள் நடைபெறும், புராணக் கதைகளை மையமாக வைத்தே தெருக்கூத்துக்கள் நடிக்கப்பட்டன. பெண் பாத்திரங்களையும் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பர். தெருக்கூத்துக் கலைஞர்களுக்குத் தனிப் பள்ளியோ கல்விக் கூடமோ இல்லை. ஆயினும் அவர்களது நடிப்பு என்பது கடுமையான கூட்டுப்பயிற்சியின் விளைவாகத் தோன்றியது.மேடையறியாத தமிழகச் சிற்றூர்கள் பல இந்தக் கூத்துக்களின் வழியாகத்தான் நாடகச் சுவையை உணர்ந்தன. புரிசை கண்ணப்பத்தம்பிரான் குழுவினர் நிகழ்த்திய கூத்துகள் புகழ் பெற்றவை.

12. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப்பணியைக் குறிப்பிடுக.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத் துறைக்குப் பெருந்தொண்டு புரிந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். புராணக் கதை களை மையமாக வைத்தே இவருடைய நாடகங்கள் அமைந்தன. இசை வடிவம் மேலோங்கிய நாடகங்கள் இவருடையவை. பிரகலாதன், சிறுத்தொண்டர், லவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி, சதி சுலோசனா, சதி அனுசூயா போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங் களை இவர் எழுதியுள்ளார்.

13. பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் நாடகத் தொண்டினை எழுதுக.

பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964) அரை நூற்றாண்டுக் காலம் நாடகத்துக்குத் தொண்டு செய்தவர். நீதிபதியாகப் பதவி வகித்த போதிலும் நாடகங்கள் எழுதி இயக்கித் தாமே நடித்தும் வந்தி ருக்கிறார். நாடகத்திற்கென்றே 'சுகுணவிலாச சபா' என்னும் சங்கத்தை நிறுவியுள்ளார். ரத்னாவளி, மனோகரா, இரண்டு நண்பர்கள், கள்வர் தலைவன், வேதாள உலகம் முதலியவை அவரது சிறந்த படைப்புகள், சேக்ஸ்பியருடைய மாக்பெத். ஹாம்லெட் போன்ற நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். உரையாடல் வாயிலான நாடகத்தைப் பம்மல்சம்பந்தனார் முதன்மைப்படுத்தினார்.

14. தற்காலத் தமிழ் நாடகம் குறித்து எழுதுக.

முத்துசாமியின் கூத்துப்பட்டறை இன்றளவும் தெருக்கூத்துக் கலைக்கும். நவீன நாடகங்களுக்கும் அரிய தொண்டாற்றி வருகிறது. மௌனக்குரல் என்னும் மகளிர் அமைப்பின் சார்பில், பெண்ணியம் சார்ந்த நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அ. மங்கை, பிரசன்ன ராமசாமி. ஜீவா போன்ற பெண் நாடகக் கலைஞர்களின் நெறியாள் கையில், புதுப் போக்குடைய நாடகங்கள் பல வருகை புரிகின்றன. பேராசிரியர் ராமானுஜம், நிஜநாடகம் மு. இராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பரீக்ஷா ஞாநி. வேலு சரவணன், முருக பூபதி போன்ற பலர் இன்றைய தமிழ் நாடகத்துக்குப் புத்துயிரூட்டி வருகின்றனர்.சில திரைப்டக் கலைஞர்களும் மக்கள் இரசனைக்கேற்ப நகைச்சுவை கலந்து சமூகச் சிந்தனைகளைப் புகுத்தும் நோக்கில் நாடகக் கலைக்குப் புத்துயிருட்டி வருகின்றனர்.

15. மரபுக் கவிதையில் எவ்வாறு மறுமலர்ச்சி ஏற்பட்டது?

செய்யுள் மரபில் இராமலிங்கனார் மறுமலர்ச்சியினை ஏற்படுத் தினார். வெறும் கடவுளைப் போற்றுதல் மட்டுமின்றிச் சமூக நோக் குடனும் இவர் கவிதைகள் அமைந்தன. 19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மேலும் அது மலர்ச்சி அடைந்தது. இதனைப் பாரதியார் மேலும் சிறப்புறச் செய்தார். சோதிமிக்க நவகவிதைகளை எழுதினார். இதனால் மரபுக் கவிதையின் மறுமலர்ச்சிக் கென்றே பாரதி, மற்றும் பாரதிதாசன் பரம்பதை தோற்றம் கொண்டது. இவ்வகையில் வாணி தாசன், முடியரசன், சுரதா, கவிமணி, நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் போன்றோரை மறுமலர்ச்சிக் கவிதை முன்னோடிகள் எனலாம்.

இவர்களைத் தொடர்ந்து கம்பதாசன், தமிழ்ஒளி, புலவர் குழந்தை, கவி கா.மு. ஷெரீப் போன்றவர்களால் வளர்க்கப் பெற்றது. தற்போது குலோத்துங்கள், ஆலந்தூர் கோ. மோகனரங்கன், அதிரை தாஹா, ஜின்னா சரிபுத்தீன் போன்றவர்களால் மரபுக்கவிதை மக்க ளிடம் இன்னமும் ஆட்சி செலுத்துகிறது. தற்போது புதுக்கவிதைக் கவிஞர்களாக அறியப்படுகிற புவியரசு, கவிக்கோ அப்துல்ரகுமான், இன்குலாப், தமிழன்பன், அபி. ஞானக்கூத்தன், வைரமுத்து, மு.மேத்தா ஆகியோர் சிறந்த மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

16. தமிழ்ப் புதுக்கவிதை குறித்து எழுதுக.

புதுக்கவிதை முதன்முதலில் வசன கவிதை என்றே அறியப் பட்டது. பின்னர் அறிஞர் க.நா. சுப்பிரமணியம் தமிழில் புதுக்கவிதை என்னும் சொற்றொடரை முதலில் அறிமுகம் செய்தார்.

1934ஆம் ஆண்டு ந. பிச்சமூர்த்தியின் வருகையோடு தமிழில் புதுக்கவிதை வளரத் தொடங்கியது. இவரே தமிழின் புதுக்கவிதைப் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். கு.ப.ரா., க.நா.சு, வல்லிக் கண்ணன், சி.சு.செல்லப்பா, தருமு சிவராம், சி. மணி, நகுலன், பசுவய்யா, ஞானக்கூத்தன் போன்றோரும், வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, சிற்பி, அக்கினிபுத்திரன், மு. மேத்தா, புவியரசு போன்றோரும் அப்துல் ரகுமான், மீரா, ஈரோடு தமிழன்பன், நா. காமராசன், வண்ண நிலவன், கவிப்பிரியா, இன்குலாப், அபி. அப்துல்காதர், மனுஷ்ய புத்திரன், சல்மா, தமிழச்சி, கனிமொழி, இளம்பிறை போன்றோரும் இலங்கையிலிருந்து சேரன், ஜெயபாலன், நுஃமான், செல்வி, சிவமணி, அனார், வானதி முதலியோர் புதுக்கவிதைப் படைப்பாளிகள் ஆவர்.

17. தமிழ்நாடகம் குறித்து விளக்கி வரைக.

நாடகம் என்பது தமிழின் தொன்மையான கலை வடிவம் என்பர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பழந்தமிழ்ச் செய்யுள்களி லேயே நாடகம் பற்றிய குறிப்புகள் உண்டு.
தமிழ் நூல்களை இயல், இசை, நாடகம் என்று மூவகைப்படுத்திக் கூறும் மரபு இடைக்காலத்தில் ஏற்பட்டது என்பர் மு.வரதராசனார் (தமிழ் இலக்கிய வரலாறு, ப. 263) இறையனார் அகப்பொருள் களவியல் உரைகாரரும், சிலப்பதிகாரத்திற்கு உரைசெய்த அடியார்க்கு நல்லாரும் சில நாடக நூல்களைப் பற்றிக் குறித்துச் சொல்கின்றனர். சயந்தம், செயிற்றியம் முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல். விளக்கத்தார் கூத்து குணநூல், கூத்தநூல் என்று சுட்டப்படும் நாடக நூல்கள் எல்லாம் நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் இலக்கணம் வகுக்கும் நூல்கள் ஆகும். நாடக அரங்கம் நம் மரபில் உண்டு.

18. புதுக்கவிதையின் வளர்ச்சியை விளக்குக.

பழைய செய்யுள் மரபுகளைத் தவிர்த்துவிட்டுத் தோன்றிய புதுவகையான கவிதைகள் 'கட்டற்ற கவிதைகள்' அல்லது 'புதுக் கவிதைகள்' எனப்பட்டன. ஆங்கில இலக்கியத்தில் 'வால்ட் விட்மன்' என்னும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய புல்லின் இதழ்கள் (Leaves of Grass) என்னும் தொகுப்பு புதுக்கவிதையின் முதன் முயற்சி ஆகும். அறிஞர் க.நா. சுப்பிரமணியம் தமிழில் புதுக்கவிதை என்னும் சொற்றொடரை முதலில் அறிமுகம் செய்தார்.

1934ஆம் ஆண்டு ந.பிச்சமூர்த்தியின் வருகையோடு தமிழில் புதுக்கவிதை வளரத் தொடங்கியது. இவரே தமிழின் புதுக்கவிதைப் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். கு.ப.ரா., க.நா.சு., வல்லிக் கண்ணன், சி.சு. செல்லப்பா, தருமு சிவராம். சி. மணி, நகுலன். பசுவய்யா, ஞானக்கூத்தன் போன்றோரும், வானம்பாடி கவிஞர் களான கோவை ஞானி, சிற்பி, அக்கினிப் புத்திரன், மு. மேத்தா, புவியரசு போன்றோரும் அப்துல் ரகுமான், மீரா, ஈரோடு தமிழன்பன். நா. காமராசன், வண்ண நிலவன், கவிப்பிரியா, இன்குலாப், அபி, அப்துல்காதர், மனுஷ்யபுத்திரன், சல்மா, தமிழச்சி, கனிமொழி. இளம்பிறை போன்றோரும் இலங்கையிலிருந்து சேரன், ஜெயபாலன். நுஃமான், செல்வி. சிவமணி, வானதி போன்றோரும் புதுக்கவிதைகள் எழுதி வருகின்றனர்.

19. புதினம் (நாவல்) வளர்ந்த விதத்தை விளக்குக.

நாவெல்லா (novella) என்ற இத்தாலியச் சொல்லடியாகப் பிறந்த கலை வடிவம் ஆங்கிலத்தில் நாவல் எனப்பட்டது. அதற்குப் புதியது என்பது பொருள். நவீனம் என்று தொடக்கத்தில் அறிமுகமானது. இன்று புதினம் என்றழைக்கப்படுகிறது. சமகால மனிதர்களையும் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு உரைநடையில் புதினங்கள் படைக்கப்படுகின்றன.

மேலை இலக்கியச் செல்வாக்கால் புதினம், சிறுகதை, புதுக் கவிதை போன்ற புத்திலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்தினர். 1876ஆம் ஆண்டு வேதநாயகம் பிள்ளை, தமிழில் முதல் புதினம் படைத்தார். இவரால் எழுதப்பட்ட முதல் புதினம் பிரதாப முதலியார் சரித்திரம் (1876) ஆகும். சுகுணசுந்தரி என்ற புதினத்தை (1887)இல் எழுதினார். இதனைத் தொடர்ந்து பலவகையான புதினங்கள் தோன்றின. வாழ்க்கையை நடப்பியல் பாங்கில் எழுதும் போக்கும் உருவானது. ராஜம் ஐயர் என்பவர் இந்த வகையில் 'கமலாம்பாள் சரித்திரம்' என்னும் புதினத்தையும் மாதவையா 'பத்மாவதி சரித்திரம் என்னும் புதினத்தையும் எழுதினர். மாதவையா 'விஜயமார்த் தாண்டன்', 'முத்து மீனாட்சி' என்னும் புதினங்களையும் எழுதினார்.

மாதவையாவுக்குப் பிறகு ஆரணி குப்புசாமி முதலியார் வடுவூர் துரைசாமி ஐயங்கார். கோதைநாயகி அம்மாள் போன்றோர் பொழுது போக்குப் புதினங்களை எழுதினர். இந்திய விடுதலைப் போராட்டம் புதின வகைகளையும் பாதித்தது. கே.எஸ். வேங்கட்ரமணி, 'முருகன் ஓர் உழவன் (1928), 'கந்தன் ஒரு தேசபக்தன்' (1930) முதலிய காந்திய நெறிப்பட்ட புதினங்களைப் படைத்தார்.

ரா. கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட கல்கியின் புதினங்கள், புதின வகைமைகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி 'தியாகபூமி', 'மகுடபதி', 'அலை ஓசை' முதலிய சமுதாயப் புதினங்களை அவர் எழுதினார். வரலாற்றை மையப்படுத்தி அவர் எழுதிய புதினங்கள் அவருக்கு அழியாப் புகழைச் சேர்த்தன. அவரது 'சிவகாமியின் சபதம்'. 'பார்த்திபன் கனவு', 'பொன்னியின் செல்வன்' போன்ற புதினங்கள், தமிழ் வாசகர்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றன.

நாரண துரைக்கண்ணனின் 'தியாகத் தழும்பு' என்னும் புதினம் 1942-இல் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அகிலனின் 'நெஞ்சின் அலைகள் நேதாஜியின் விடுதலைப் படையைப் பின்னணியாகக் கொண்டது. 'கயல்விழி' வேங்கையின் மைந்தன்' போன்ற வரலாற்றுப் புதினங்களையும் அவர் சிறப்பாகப் படைத்தார். 'சிநேகிதி', 'பாவை விளக்கு', 'சித்திரப் பாவை' போன்ற சமூகப் புதினங்களையும் அவர் எழுதினார். பாரதியாரின் அன்பராகிய வ.ரா. (வ. ராமசாமி) சீர்திருத்தக் கருத்து களுக்குப் புதின வடிவம் தந்தார். அவருடைய 'கோதைத்தீவு' குறிப் பிடத்தக்கது. தெளிந்த தமிழ்நடையில் போதனைத் தன்மையுடன் பல புதினங்களைத் தந்தவர் மு.வரதராசனார். அவருடைய கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு. கயமை போன்றவை குறிப்பிடத்தக்கவை. தி. ஜானகிராமனின் புதினங்களில் தஞ்சையின் மண்வாசனை மட்டுமல்லாது மன உணர்வுகளின் திட்ப நுட்பங்களும் இழையோடின.

சாண்டில்யனில் யவன ராணி, மன்னன் மகள், கடல் புறா, மலைவாயில் போன்ற வரலாற்றுப் புதினங்கள் சுவையும் கிளர்ச்சி உணர்வும் ஊட்டுபவை.

ஜெயகாந்தன் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அவருடைய சிலநேரங்களில் சில மனிதர்கள், பிரளயம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்றவை முக்கியமானவை. இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பூமணி, சிவகாமி, பாமா, அம்பை, பாவண்ணன், சு. சமுத்திரம், சா. கந்தசாமி, நீல. பத்மநாபன், கோணங்கி, இமையம், கண்மணி குணசேகரன், தோப்பில் முகம்மது மீரான் போன்ற பலரும் பல்வேறு வகையான படைப்பு முறைகளால் தமிழ்ப் புதினக் கலைக்கு வளம் சேர்க்கின்றனர்.

20. தமிழ்ச் சிறுகதை பற்றி ஒரு கட்டுரை வரைக.

ஐரோப்பியச் சமூகத்தில் புதினம் தோன்றியதைப் போலவே சிறுகதைகளும் தோன்றின. அவை சமகால மனிதர்கள், நிகழ்வுகள், செய்திகள் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப் பட்டன. ஆங்கிலம் கற்ற தமிழ் எழுத்தாளர்களால் தமிழுக்கு இப்புதுவகைச் சிறுகதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எட்கர் ஆலன்போ என்னும் அமெரிக்க எழுத்தாளர்தான் சிறுகதை வடிவத்தை அறிமுகப்படுத்தினார். தமிழில் வ.வே.சு. ஐயரே முதல் தமிழ்ச் சிறுகதையையும் எழுதினார். மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தலைப்பில் அவருடைய கதைத் தொகுப்பு வந்தது.

ஏதேனும் ஒரு நிகழ்வு ஒரு பொழுது. ஒரு சில கதாபாத்தி ரங்களை மையமாகக் கொண்டு குறைந்த நேரத்தில் படித்து முடிக் கப்படும் வகையில் படைக்கப்படுவது சிறுகதை எனலாம்.

பாரதியாரும் தமிழில் சிறுகதைகளைப் படைத்தார். வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் பதினொரு சீறுகதைகளை மொழி பெயர்த்துத் தந்தார். ஆறில் ஒரு பங்கு, பூலோக ரம்பை முதலானவை அவர் எழுதிய சிறுகதைகளில் சில. இப்படி அறிமுகமான சிறுகதை வடிவத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தியவர்கள் புதுமைப்பித்தன், கு.ப. ராசகோபாலன், மௌனி ஆகியோர் எனலாம்.

கு.ப.ரா. என்றழைக்கப்படும் கு.ப. ராசகோபாலனுக்குப் பெண்மையின் மன உணர்வுகளை மிக நுட்பமாகச் சித்திரிக்க முடிந்தது. காணாமலே காதல், புனர் ஜென்மம், கனகாம்பரம் முதலியன அவருடைய சிறுகதைத் தொகுதிகள்.

மௌனியின் சிறுகதைகளில் ஆழ்ந்த உணர்வுகளும் தத்துவ விசாரணையும் உண்டு. மிகக் குறைவாக எழுதியுள்ள மௌனியின் பெயர் சிறுகதை வரலாற்றில் அழியாத இடம் பெற்றுள்ளது.

மணிக்கொடி போன்ற இதழ்கள் தரமான சிறுகதை வளர்ச்சிக்கு இடமளித்தன. இன்று ஏராளமான வணிக இதழ்களில் சிறுகதை களுக்கு இடமளித்துள்ளன.

இன்று பல்வேறு போக்குகளில் சிறுகதை எழுதப்படுகிறது. ஜெயகாந்தன், அழகிரிசாமி, சுந்தர ராமசாமி போன்றோர் மிகச்சிறந்த சிறுகதைகளைப் படைத்துள்ளனர். பிரபஞ்சன், வண்ண நிலவன். சூரிய தீபன், பூமணி, பாமா, அம்பை, பாவண்ணன், சூடாமணி. ஜோதிர்லதா கிரிஜா, சிவகாமி, ஜே.எம். சாலி, அ. முத்துலிங்கம். ஹெச்.ஜி. ரசூல் முதலியோர் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் ஆவர்.