செம்மொழித் தமிழ் வரலாறு
1.தமிழ்மொழியின் தொன்மையைக் கூறுக.
தமிழ்மொழி வரலாற்றுத் தொன்மையும் தனித்தன்மையும் பெற்ற மொழியாகும். இந்திய மொழிக் குடும்பங்களுள் திராவிட மொழிக் குடும்பம் மிகப் பெரிது. அக்குடும்பத்தில் முதன்மையாகத் தமிழ் மொழி திகழ்கிறது.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்படப் பல்வேறு இலக்கியங்களும் இலக்கண நூல்களும் தமிழைச் செம்மொழி என்று உணர்த்துகின்றன.
2.செம்மொழித் தகுதிக்கான வரையறைகள் யாவை?
தொன்மை,
தனித்தன்மை,
பொதுமைப் பண்பு,
நடுநிலைமை,
கிளைமொழிகளின் தாய்,
பட்டறிவு இலக்கியங்கள்.
பிறமொழித் தன்மை,
சமயச்சார்பு,
உயர் சிந்தனை,
கலை,
மொழிக் கோட்பாடுகள் என்பனவாகும்.
3.எந்த அடிப்படையில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி அளிக்கப் பட்டுள்ளது? விளக்குக.
1. மனித நாகரிகம் தோன்றிய பகுதியில் தோன்றி வளர்ந்த தொன்மை.
2. 2500 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமும் இலக்கியமும் தோன்றிய மொழி.
3. மனித வாழ்வை அகம்புறம் எனப் பிரித்துக்காட்டியது.
4. திருக்குறளின் சார்பின்மை நடுநிலைமை மற்றும் உலகப் பொதுமை.
5. தென்மொழிகளுக்கும் வடமொழிகளுக்கும் தாய்மொழி எனும் தலைமை.
6. தமிழ் இலக்கியங்களில் மனித அனுபவங்களே பேசப்பட்டுள்ளன.
7. பழந்தமிழ் இலக்கியங்களில் பிறமொழித் தாக்கம் இருந்த தில்லை.
8. சங்க இலக்கியத்தின் சமயச் சார்பில்லாத் தன்மை.
9. உலகினைப் பொதுத்தன்மையில் பார்க்கும் உயர்சிந்தனை.
10. இயல், இசை, நாடகம் எனும் பிரிவும், குடிமக்களையும் காப்பிய நாயகர்களாக்கிய உயர்வும் கொண்டமை.
11. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றிய இலக்கியங் களிலிருந்தும், தமிழ்மொழி வழக்குகளிலிருந்தும் கோட்பாடு களை வகுத்துத் தொல்காப்பியம் இயற்றப்பட்டமை.
எனச் செம்மொழித் தகுதிகளனைத்தும் பொருந்தி அமைந்திருப்ப தால், தமிழ் செம்மொழியாயிற்று.
4. செம்மொழிக்குரிய இரண்டு தகுதிகளைக் கூறுக.
ஒரு செம்மொழிக்கு இரு தகுதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். இலக்கிய வளமும் தொன்மையுமே அவ்விரு தகுதி களாகும். இவற்றில் ஏதாவது ஒரு தகுதியை மட்டும் பெற்றிருந்தால். அந்த மொழி செம்மொழியெனக் கருதப்படுவதில்லை. எடுத்துக் காட்டாக, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் பேசிவரும் 'முண்டா' மொழிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. ஆயினும், இந்த மொழிகளுக்கு இலக்கிய வளம் கிடையாது. எழுத்துகள் கூட இல்லை. ஆகையால், முண்டா மொழிகள் செம்மொழி என்ற தகுதியைப் பெறவில்லை. இன்னொரு பக்கம் ஆங்கில மொழி, நிரம்பிய இலக்கிய வளம்பெற்ற மொழியாகத் திகழ்கின்றது. ஆயினும், இம்மொழியின் தொன்மை ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலே இல்லை. ஆகவேதான், ஆங்கிலேயரும் தம் மொழியைச் செம்மொழி எனக் கூறிக்கொள்வ தில்லை.
5. சங்ககால மக்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதற்குச் சான்று தருக.
தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் அகழ்வாய்வுகளில் நூற்றுக் கணக்கான எழுத்துப் பொறித்த சில்லுகள் கிடைத்து வருகின்றன. எழுத்துப் பொறித்த சில்லுகள் தமிழகமெங்கும் சின்னஞ்சிறு குக் கிராமங்களிலும் அகழ்வு செய்யும்போது கிடைத்து வருகின்றன.
இந்திய நாட்டிலேயே தமிழகத்தில்தான் எழுத்துப் பொறித்த சில்லுகள் மிக அதிகளவில் கிடைத்துள்ளன. சாமானிய மக்கள் தங்கள் வீடு களில் புழங்கிய சட்டி, பானைகளின் மீது கையில் கிடைத்த இரும் பாணியைக் கொண்டு தங்கள் பெயர்களைக் கீறியுள்ளனர். சங்க காலத்தில் தமிழகத்தில் எழுத்தறிவு பரவலாக இருந்துள்ளது என்ப தற்கு இச்சில்லுகள் மிக முக்கியமான புறச்சான்றுகளால் உள்ளன.
6. தமிழர்களின் வாணிகத் தொடர்பை விளக்குக.
தமிழர்கள் சங்க காலத்திற்கு முன்னரே மேலை நாடுகளுடனும் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். ரோமானிய நாணயங்களிலிருந்தும் தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறித்த சில்லுகள், எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் உள்ள துறைமுகங்களிலிருந்தும், தாய்லாந்து நாட்டில் அகழ்வு ஆய்வுகளிலும் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவை தமிழரின் வெளிநாட்டு வாணிபத்தை உறுதி செய்கின்றன. தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள இச்சில்லுகளின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது.
7. பிராமி எழுத்துக்கள் - குறித்து விளக்குக.
பிராமி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மதுரையில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் காணப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் அசோக மன்னரின் புகழ் பெற்ற கல்வெட்டு எழுத்துக்களைப் பெரும்பாலும் ஒத்திருப்பதால் தமிழ்நாட்டுக் குகைக் கல்வெட்டுகளின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 2ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகக் கணிக்கப்பட்டுள்ளது. பிராகிருத மொழிகளுக்கான மௌரிய காலத்துப் பிராமி எழுத்துகளைக் கூட்டியும் குறைத்தும், வேறு பல மாற்றங்களைப் புகுத்தியும் தமிழை எழுதுவதற்கு ஏற்றத் தமிழ்ப் பிராமி எழுத்து முறை உருவாக்கப்பட்டது. இந்த எழுத்துகளே குகைக் கல்வெட்டுகளிலும் காசுகளிலும் இலச்சினைகளிலும் சில்லுகளிலும் பயன்படுத்தப்பட்டுவந்தன. இவையே சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் ஆகும்.
கல்வெட்டுகள்
குகைக் கல்வெட்டுகளில் மிகவும் முக்கியமானவை மூன்று. அவை, மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் (கி.மு. 2ஆம் நூற்றாண்டு) ஜம்பையில் அதியன் நெடுமான் அஞ்சியும் (கி.பி. முதல் நூற்றாண்டு) புகழூரில் சேரல் இரும்பொறையும் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) வெட்டிவைத்த கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியைக் கொண்டு இவை சங்க காலத்தைச் சார்ந்தவை என்று உறுதியாகக் கூறலாம்.
நடுகற்கள்
அண்மையில் வைகைக் கரையில் புலிமான்கோம்பை என்ற ஊரில் மூன்று நடுகற்களும், தாதப்பட்டி என்ற ஊரில் ஒரு நடு கல்லும் கிடைத்துள்ளன. இவை பெருங்கற்காலச் சின்னங்களாகும். இவற்றில் தமிழ் பிராமி எழுத்துகளில் தமிழ் மொழியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
காசுகள்
பாண்டியன் பெருவழுதியின் பெயர் பொறித்த செப்புக்காசு, அதன் எழுத்தமைதியிலிருந்து கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் கரூரில் அமராவதி ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த பல இலச்சினைகளும் மோதிரங்களும் சங்க காலத்தைச் சார்ந்தவைகளாகும்.
0 Comments