ஒற்றுப்பிழைகளை நீக்கி எழுதுதல்
(அ) வல்லின ஒற்று மிகும் இடங்கள்
1. பொதுவாக உயிர் ஈற்றுச் சொற்களின் முன் க,ச,த,ப மிகும்
கட்டி + போட்டான் = கட்டிப்போட்டான்
வெட்டி + பேச்சு = வெட்டிப்பேச்சு
2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லெழுத்து மிகும்.
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை
வாடா + பயிர் + வாடாப்பயிர்
3. அன்றி, இன்றி என்னும் குறிப்பு வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்.
அவனன்றி + செய்யாதே = அவனன்றிச் செய்யாதே
துணையின்றி + போகாதே = துணையின்றிப் போகாதே
4. குறில் நெடில் இணைந்துள்ள சொற்களின் முன்வரும் வல்லினம் மிகும்.
கனா + கண்டான் = கனாக்கண்டான்
நிலா + சோறு = நிலாச்சோறு
5. என, ஆக, விட என்னும் உயிரீற்றுச் சொற்களின் முன் (அல்லது) அகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகும்.
தேடென + சொன்னேன் = தேடெனச் சொன்னேன்
படிப்பதாக + கூறனாள் = படிப்பதாகக் கூறினாள்
அவனைவிட + சிறியன் + அவனைவிடச் சிறியன்
6. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் முன்னும் எ என்னும் வினா எழுத்தின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
அ + கூடை = அக்கூடை
இ + சிறுமி = இச்சிறுமி
உ + பக்கம் = உப்பக்கம்
எ + பையன் = எப்பையன்
7. அந்த, இந்த, அங்கு, இங்கு. ஆண்டு, ஈண்டு, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களை அடுத்தும் எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களை அடுத்தும் வரும் வல்லினம் மிகும்
சுட்டுக்களை அடுத்து வந்த வல்லினம்
அந்த + பாடல்கள் = அந்தப்பாடல்கள்
இங்கு + பார்த்தான் = இங்குப் பார்த்தான்
ஆண்டு + சென்றான் = ஆண்டுச் சென்றான்
அப்படி + கேள் = அப்படிக்கேள்
வினாச்சொற்களை அடுத்து வந்த வல்லினம்
எங்கு + சென்றாய் = எங்குச் சென்றாய்
எப்படி + கேட்டார் = எப்படிக் கேட்டார்
எந்த + பூ = எந்தப்பூ
8. இரண்டாம் வேற்றுமை விரி, நான்காம் வேற்றுமை விரி ஆகிய வற்றைத் தொடர்ந்து வரும் வல்லினம் மிகும்.
சிலையை + செதுக்கினான் = சிலையைச் செதுக்கினான்
பாலை + குடித்தான் = பாலைக்குடித்தான்
இரண்டாம் வேற்றுமை விரியைத் தொடர்ந்து வல்லினம் மிகுந்துள்ளமை காண்க.
பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச் சென்றான்
ஆணைக்கு + பணிந்தான் = ஆணைக்குப் பணிந்தான்
நான்காம் வேற்றுமை விரியைத் தொடர்ந்து வல்லினம் மிகுந்துள்ளமை காண்க.
9. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆகியவற்றினைத் தொடர்ந்து வரும் வல்லினம் மிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன்பு.
தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த் தொட்டி
மலர் + கூடை = மலர்க்கூடை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன்பு
மரம் + பெட்டி = மரப்பெட்டி
இரும்பு + சாவி = இரும்புச்சாவி
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன்பு
சட்டை + துணி = சட்டைத்துணி
குடை + கம்பி = குடைக்கம்பி
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன்பு
அடுப்பு + புகை = அடுப்புப் புகை
விழி + புனல் = விழிப்புனல்
10. ஆறாம், ஏழாம் வேற்றுமைத் தொகைகளை அடுத்து வரும் வல்லினம் மிகும்
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
தாமரை + பூ = தாமரைப்பூ
குதிரை + கால் = குதிரைக்கால்
ஏழாம் வேற்றுமைத் தொகையில்...
குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்
வழி + சென்றார் = வழிச்சென்றார்
11. பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உவமைத் தொகை ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் வல்லினம் ஆகும்.
பண்புத் தொகையில்...
சதுரம் + கள்ளி = சதுரக்கள்ளி
உண்மை + செயல் = உண்மைச்செயல்
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்...
மழலை + பள்ளி = மழலைப்பள்ளி
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
உவமைத் தொகையில்...
பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
மலர் + பாதம் = மலர்ப்பாதம்
12. உகர ஈறு -வன்தொடர்க் குற்றியலுகரம், முற்றியலுகரம், நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் வல்லினம் மிகும்.
வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்
எடுத்து + சென்றான் = எடுத்துச் சென்றான்
பட்டு + சட்டை = பட்டுச்சட்டை
முற்றியலுகரத்தின் முன்...
பொது + தமிழ் = பொதுத்தமிழ்
பொது + குளம் = பொதுக்குளம்
திரு + பாட்டு = திருப்பாட்டு
ட.ற. ஒற்று இரட்டிக்கு முயிர் மற்றும் நெடில் தொடர்க் குற்றிய லுகரத்தின் முன்...
காடு + தேன் = காட்டுத்தேன் (நெடில்)
கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில் (உயிர்)
நாடு +பற்று = நாட்டுப்பற்று (நெடில்)
முரடு + காளை = முரட்டுக்காளை (உயிர்)
13. ஓரெழுத்து ஒரு மொழியின் முன் வல்லினம் மிகும்.
தை + பொங்கல் = தைப்பொங்கல்
கை + தடி = கைத்தடி
பூ + சாடி = பூச்சாடி
14. இடை உரிச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்
இனி + காண்போம் = இனிக்காண்போம்
சால + பசித்தது = சாலப் பசித்தது
தவ + பிஞ்சு = தவப்பிஞ்சு
(ஆ) வல்லினம் மிகா இடங்கள்
1. சில, பல, நல்ல, கெட்ட என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.
சில + பாடல் = சில பாடல்
பல + குதிரை = பல குதிரை
நல்ல + பையன் = நல்ல பையன்
கெட்ட + பொருள் = கெட்ட பொருள்
2. பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகாது.
படித்த + பாடம் = படித்த பாடம்
சென்ற + பையன் = சென்ற பையன்
3. எழுவாய் முன்னும் விளியின் முன்னும் வரும் வல்லினம் மிகாது.
தம்பீ + பார் = தம்பீ பார் (விளி)
யானை + பெரியது = யானை பெரியது (எழுவாய்)
4. வினாச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.
அவனா + சொன்னான் = அவனா சொன்னான்?
இவனோ + செய்தான் = இவனோ செய்தான்?
எது + பெரியது = எது பெரியது?
5. படி என முடியும் சொற்களின் முன் வரும் வல்லெழுத்து மிகாது. (அப்படி, இப்படி, எப்படி தவிர)
எழுதும்படி + கேட்டார் = எழுதும்படி கேட்டார்
பேசும்படி + சொன்னான் = பேசும்படி சொன்னான்
6. உகர ஈற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது.
நொந்து + போனான் = நொந்து போனான்
வந்து + சொன்னான் = வந்து சொன்னான்
அறிந்து + கொண்டேன் = அறிந்துகொண்டேன்
7. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.
அத்தனை + கடிதம் = அத்தனை கடிதம்
இத்தனை + புத்தகம் = இத்தனை புத்தகம்
எத்தனை + பாடல் = எத்தனை பாடல்
8. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஏவு + கணை = ஏவுகணை
செய் + பொருள் = செய்பொருள்
9. எட்டு, பத்து ஆகியவற்றைத் தவிரப் பிற எண்களின் முன் வல்லினம் மிகாது.
மூன்று + பேர் = மூன்றுபேர்
நான்கு + கால் = நான்கு கால்
10. இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் ஆகியவற்றில் வல்லினம் மிகாது.
பள + பள = பளபள (இரட்டைக்கிளவி)
பாம்பு + பாம்பு=பாம்புபாம்பு (அடுக்குத்தொடர்)
11. வியங்கோள் வினைமுற்றையடுத்து வரும் வல்லினம் மிகாது.
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
கற்க + கசடற = கற்க கசடற
12. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது.
புஷ்ப + பல்லாக்கு = புஷ்பபல்லாக்கு
13. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
வள்ளுவர் + கருத்து = வள்ளுவர் கருத்து
14. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது.
செய்து + கொடுத்தான் = செய்து கொடுத்தான்
15. சில வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
பறந்தது + பறவை = பறந்தது பறவை
16. உயிர், இடை, ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், முற்றியலுகரம் ஆகியவற்றின் முன் வல்லினம் மிகாது.
எஃகு + சாலை = எஃகு சாலை
மரபு + போற்று = மரபுபோற்று
குறிப்பு: வல்லின றகர டகரத்தின்பின் ஒற்று வராது.
எ.கா:
பயிற்சி - சரி
பயிற்ச்சி - தவறு
கேட்க - சரி
கேட்க்க - தவறு
All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.

0 Comments