பிறமொழிச் சொற்களைக் களைதல்
பயிற்சி
- காலேஜ் தொடங்க இன்னும் பத்து தினங்களே உள்ளன.
- கல்லூரி தொடங்க இன்னும் பத்து நாள்களே உள்ளன.
- அப்ளிகேசன் போடும்போடு தெளிவான விலாசம் எழுத வேண்டும்.
- விண்ணப்பிக்கும்போது தெளிவான முகவரியை எழுத வேண்டும்.
- எனது நண்பர் ஸ்கூல் ஃபர்ஸ்ட் ஸ்டூடண்ட்.
- என் நண்பர் பள்ளியிலேயே முதல் மாணவராக வந்தார்.
- பந்துமித்திரர் சகிதம் வந்து மணமக்களை ஆசீர்வதிக்கக் கோருகிறோம்.
- சுற்றமும் நட்பும் சூழவந்து மணமக்களை வாழ்த்த வேண்டு கிறோம்.
- மெட்ராஸ் சிட்டியில் எங்குப் பார்த்தாலும் பஜார்கள் காணப்படுகின்றன.
- சென்னைப் பெருநகரில் எங்குப் பார்த்தாலும் கடை கண்ணிகள் காணப்படுகின்றன.
- அந்த வீட்டிற்கு ரெண்ட் எவ்வளவு? எத்தனை ரூம்கள் உள்ளன?.
- அந்த வீட்டிற்குக் குடிக்கூலி எவ்வளவு? எத்தனை அறைகள் உள்ளன?
- பஸ் ஏறி ஆஸ்பத்திரிக்குச் சென்று அவுட்பேஷண்ட் வார்டில் நின்று டாக்டரைப் பார்த்து வா.
- பேருந்தில் ஏறி மருத்துவமனைக்குச் சென்று புறநோயாளிப் பிரிவில் நின்று மருத்துவரைப் பார்க்கலாம்.
- இன்று எங்கள் வீட்டில் சகலரும் சந்தோஷமாய் சம்பாஷித்துக் கொண்டனர்.
- இன்று எங்கள் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
- கஷ்டப்பட்டு உழைத்தால் ஜெயம்.
- நிச்சயம் கடுமையாக உழைத்தால் வெற்றி உறுதி.
- வேலை பர்மனெண்ட் ஆக வேண்டுமானால் இரண்டு வருஷம் கம்ப்ளீட் ஆகவேண்டும்.
- பணி நிலைபேறுக்கு இரண்டு ஆண்டுகள் முழுமை பெற வேண்டும்.
- அனைவரும் நமஸ்காரம் செய்து அனுகிரகம் பெற்றனர்.
- அனைவரும் வணக்கம் செய்து அருள் பெற்றனர்.
- எங்கள் வீட்டுக் கிருகப் பிரவேசத்திற்கு எல்லோரும் வந்தி ருந்தனர்.
- எங்கள் புதுமனைப் புகுவிழாவிற்கு எல்லோரும் வந்திருந்தனர்.
- ஆஸ்தியில் பங்கு கேட்டுச் சகோதரர்கள் பெற்றோரிடம் சண்டை போட்டனர்.
- சொத்தில் பங்கு கேட்டு உடன்பிறந்தோர்கள் பெற்றோரிடம் சண்டை போட்டனர்.
- என் தோழியின் விவாகப் பத்திரிகை இன்றுதான் கிடைத்தது.
- என் தோழியின் திருமண அழைப்பிதழ் இன்றுதான் கிடைத்தது.
- என்னுடைய சின்சியர் ஒப்பினியன் என்னவென்றால் நீ படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- எனது மனமார்ந்த கருத்து என்னவென்றால் நீ படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- உனக்கு பிரீவியஸ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா?
- உனக்கு முன்அனுபவம் இருக்கிறதா?
- தேவையான வஸ்துகள் இந்த பஜாரில் கிடைக்கும்.
- தேவையான பொருள்கள் இந்தக் கடைக்கண்ணிகளில் கிடைக்கும்.
- வஸ்திரம் வாங்கி வந்தான்.
- துணிமணி வாங்கி வந்தான்.
- சினிமாவுக்குப் போகும்போது ஸ்கூட்டரில் சென்றான்.
- திரைப்படத்திற்குப் போகும்போது மிதியா வண்டியில் சென்றான்.
- தாசில்தார் ஆபீஸீல் போய் ரேஷன் கார்டு வாங்கி வா.
- வருவாய் அலுவலர் அலுவலகம்போய் குடிமைப்பொருள் அட்டை வாங்கி வா.
- சிட்பண்ட் நடத்திப் பலர் ஜனங்களை ஏமாற்றுகின்றனர்.
- நிதிநிறுவனம் நடத்திப் பலர் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.
- வேலைக்கு ஆர்டர் வந்துவிட்டது. இன்றே ஜாயின் ஆக வேண்டும்.
- பணி ஆணை வந்துவிட்டது. இன்றே பணியில் சேரவேண்டும்.
- தமிழகத்தில் லாரிகள் ஓடும்.
- தமிழகத்தில் சரக்குந்துகள் ஓடும்.
- இன்றைய மார்க்கெட் நிலவரம்.
- இன்றைய சந்தை நிலவரம்.
- ஐகோர்ட்டில் சகஜ நிலைக்கு உடனடி நடவடிக்கை.
- உயர்நீதி மன்றத்தின் இயல்பு நிலைக்கு உடனடி நடவடிக்கை.
- போலீஸ் கமிஷனருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
- காவல்துறை ஆணையாளருக்கு உச்சநீதி மன்றம் ஆணை.
- கோர்ட் வளாகத்துள் ஊர்வலம், தர்ணா போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும்.
- நீதிமன்ற வளாகத்துள் ஊர்வலம். மறியல் போன்றவற்றைத் தடைசெய்ய வேண்டும்.
- நமது தொழிலை விஸ்தரிக்க உதவும்.
- நமது தொழிலை விரிவாக்க உதவும்.
- பரோலில் வீடு திரும்பிய இராமச்சந்திரனை மணக்க பிரமிளா என்ற பெண் முன்வந்தார்.
- வெளியே செல்ல அனுமதியால் வீடு திரும்பிய இராமச் சந்திரனை மணக்க பிரமிளா என்ற பெண் முன்வந்தார்.
- 52 வயது ரயில்வே ஊழியர் ரத்தம் கொடுப்பதில் 'செஞ்சுரி'.
- 52 வயது தொடர்வண்டி ஊழியர் ரத்தம் கொடுப்பது நூறாவது முறை.
- அந்தப் பதவி காலியாகவே இருந்தது.
- அந்தப் பதவி வெற்றிடமாகவே இருந்தது.
- கிராமங்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி.
- கிராமங்களுக்கும் தொடர்வண்டி பயணச்சீட்டுக்கான முன் பதிவு வசதி.
- ஜார்க்கண்டில் ஏழு கிரிமினல்கள் கைது.
- ஜார்க்கண்டில் ஏழு குற்றவாளிகள் கைது.
- மும்பையில் பர்னிச்சர் கண்காட்சி.
- மும்பையில் அறைகலன் கண்காட்சி.
- பிரச்னையை சுமுகமாக தீர்க்க பேச்சுவார்த்தை.
- சிக்கலை இணக்கமாகத் தீர்க்கப் பேச்சுவார்த்தை.
- மின்கட்டண பாக்கியைச் சுட்டிக்காட்டினார்.
- மின்கட்டண நிலுவையைச் சுட்டிக்காட்டினார்.
- மின் கட்டணத்தின் யூனிட் ரேட்டை குறைக்க வேண்டும்..
- மின் கட்டணத்தின் அலகுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
- நன்றாக நனையுங்கள் எண்ட் ஆஃப் - சீஸன் விற்பனையில்.
- விற்பனைக் கால முடிவில் நன்றாக நனையுங்கள்.
All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.

0 Comments