பர்வீன் பானு

    தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியவரல்லர்; தமிழகத்தின் பிரபல இதழ்களான தினமணி, தினமலர், ஆனந்த விகடன் வாசகர் வட்டத்தின் வழி நன்கு அறிமுகமான பெண் எழுத்தாளர்.

புதிய நூற்றாண்டிற்கான சமூகத்தேடலை எழுத்தில் வடித்து வாசகர்களின் இதயத்தைத் தொடுபவர்.

புறக்கணிக்கப்படும் பெண்கள், வயோதிகத் தம்பதிகள், ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அடித்தட்டு மக்கள் அனைவருகாகவும் உரத்துக் குரல் கொடுப்பவர்.

"ஒரு நல்ல கதையைப் படித்த உள்ளத்தில் அது குடைந்து கொண்டேயிருக்கும் ஒரு நல்ல இசையைக் கேட்ட காதுகளில் அது திரும்ப திரும்ப ஒளிப்பது போல" என்கிறார் சி.சு.செல்லப்பா.

சி.சு. செல்லப்பா வரைந்துதந்துள்ள சிறுகதை இலக்கணத்திற்கேற்ப, இன்றைய வாசக வட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியான கதைகளை நெய்து தந்துள்ளர் பர்வீன் பானு. இவருடைய சிறுகதைகளில் அன்பின் நிழல் என்ற சிறுகதை நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.


அன்பின் நிழல்

சூரியனின் மஞ்சள்கதிர் பூமியெல்லாம் ஒத்த பட்டு, உடை உடுத்திக் கொண்டிருந்த பின்மாலைப் பொழுது. நீண்டு விழுந்த நிழல் இன்னும் கொஞ்ச நேரத்தில் இரவு பூத்துவிடும் என்று கட்டியம் கூறிக்கொண்டு இருந்தது. இயற்கை வார்ப்பில் மதுரை மண்ணிற்கு எப்போதுமே வெப்பவீச்சு அதிகம். சூரியன் உதிக்கும்போதே உக்கிரமாய் ரோசப்பட்டுக் கொண்டுதான் பிறக்கும் எப்போதும். அதுவும் ஜனப்பெருக்கம் கூடக்கூட வெப்பப் பெருக்கமும் வீறுகொண்டுதான் போய்விட்டது.

வாசலில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்து மடிக்க ஆரம்பித்தாள் ஜரினா. வீதியில் ஒரே இரைச்சல். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்குப் பரபரப்பாய் ஓடிக்கொண்டு இருந்தனர். அவர்களின் கிச்சுமுச்சு சத்தம், ஆயிரம் குருவிகள் ஒருசேர கூடு திரும்பிய அற்புதக் காட்சியாய் அமைந்திருந்தது. ஆனால் இது பள்ளிக்கூடம் விடும் நேரமல்லவே?

'த பிள்ளைகளா, என்ன இந்நேரம் வீட்டுக்குப் போறவுக. மணி மூணுதான் ஆச்சு. த அதாரூ, பதார்நீசா மவ ஷாகிராதானா? ஏ புள்ளை இந்நேரத்துல வீட்டுக்குப் போறவ... பள்ளியுடத்துல எதுவும் நடந்து போச்சா...?" என்றாள்

உண்மையான பதபதப்போடு.

அவள் குறிப்பிட்டுக் கேட்ட ஷாகிராவும் அவளுடைய தோழிமார் நான்கைந்து பேரும் அப்படியே நின்று மூச்சிரைத்தார்கள்.

சாச்சி. "பள்ளியுடத்துல எதுவும் நடக்கல ஊருக்குள்ள ஒரே கலவரம். கடைவீதில இந்து-முஸ்லிம் கலவரம் வந்து சைக்கிள்கடை ஜப்பாரை வெட்டிட்டாங்களாம். அதுக்காக இவங்கயெல்லாம் சேர்ந்து போய் மணியக்காரு மவன் சுப்பிரமணிய குத்திப்புட்டாங்களாம். ரெண்டு பேருமே உசிருக்குப் போராடிட்டு டவுன்ஹால் ஆஸ்பத்திரியில் கிடக்காகளாம். கடைத்தெருவே அமிலோக திமிலோகப்படுது, அதான் எல்லா பள்ளியுடமும் அனுப்பிச்சுட்டாக.” விட்டு ஷாகிரா கண்களை அகலவிரித்து திகில் பட்டுக்கொண்டு பேசினாள். ஜரினா மனதொடிந்து போய் நின்றாள். அடிக்கடி ரெண்டு பட்டு பட்டே ஊர்நிலை கெட்டுப் போய்விட்டது. ஒண்ணு மண்ணாய்த் திரிந்த ஊர் சனமெல்லாம் ஒருத்தருக் கொருத்தர் ஒவ்வாமல் போய் விட்டார்கள். இதெல்லாம் எங்கு தொடங்கியது? யார் தொடங்கி வைத்தார்கள். எப்போது எதைக்கொண்டு முடியப்போகிறது?

இந்த காசுக்காரன்புதூருக்கு ஜரினா வாக்கப்பட்டு வந்து வருசம் முப்பதுக்கு மேல் ஆகிறது. மதுரையை ஒட்டிய கூட்டு ரோட்டில் அம்பது கிலோ மீட்டர் பயணத்தில் இருந்தது காசுக்காரன்புதூர். சத்தம் போட்டுப் பேசினாலே ஊர் நெலவரம் காதுக் கெட்டி விடும் கிட்டம்தான் கிராமம்.

வந்த புதுசில் ஊர் அத்தனை கித்தாளமாய் இருக்கும். செட்டியார் மெஸ்ஸில் இடியாப்பமும் சாயபு கடை பாயாவும் வாங்கித்தான் ஊர்சனம் திண்ணும். அதைப் பார்க்கையில் ஜரினாவிற்குப் புதுமையாய் இருக்கும்.

"இதென்னங்க உங்கவூர் புதுமை. சோறு ஒரு எடத்திலயும், அதுக்கு ஊத்தித் திண்ண ஆணத்தை இன்னொரு இடத்திலயும் வாங்கிக்கிற கித்தாப்பு" என்று சிரிப்பாள்.

அவள் கணவன் ஷம்சுதீனோ அந்தக் கேலியை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ள மாட்டான்.

"அப்படியில்லை ஜரினா, செட்டியார் வீட்டு ஆச்சி இடியாப்பம் சுடறுதுல கில்லாடி. சாயுபு வீட்டு சாச்சி பாயா வைக்கிறதுல கைகாரி, பக்கத்துப் பக்கத்து வீடு. ரெண்டுபேரும் ஒத்துச்சு அவுகவுகளுக்குத் தெரிஞ்சத செஞ்சு விக்கயில, ரெண்டு குடும்பத்துக்கும் பொழப்பு ஆகுதுல...."

பிரமிப்பான நியாயம். இந்த நியாயம் நிறைவேற அந்த ரெண்டு குடும்பத்துக்கும் இருந்த அன்யோனயம் தான் முதல் காரணம். அப்படிப் பின்னிக்கிடந்த ஊரா இது? அவள் பார்க்கப் பார்க்கவே அவிழ்த்து விட்ட கொண்டை முடியாய் சேராமல் நிற்கிறது ஊர்சனம். நடையைச் சாத்திவிட்டு துணிகளை அள்ளிக்கொண்டு உள்ளுக்கு வந்தாள். மூலையில் சுருண்டு படுத்துத் தானாகவே எதுவோ பினாத்திக் கொண்டு இருந்தாள் சமினா. ஜரினாவின் ஆசைமகள்.

அவளை உற்றுப்பார்த்த ஒரு நொடி உள்ளுக்குள் மளுக்கென்று துக்கம் திரண்டது. அலைமீது தடுமாறும் படகுபோல் நிலைமீறிய துக்கத்தில் உடம்பு பதறியது.

அல்லாவின் கருணை அவள் இப்போது உயிரோடு இருப்பது. அவன் காட்டிய இரக்கத்தின் வெளிப்பாடு அவள் நடமாடிக் கொண்டு இருப்பது. மனிதனுக்கு எதைத் தரவேண்டும் என்று தீர்மானிப்பவன் அல்லாவாக மட்டும் இருக்கின்றான். அவனைக் கடந்து எதைச் சிந்திக்க முடியும்? அவனை மீறி எதைச் சாதிக்க முடியும்?

'சமினா, காப்பி வச்சு தரட்டுமா?' மகளின் தலையை வாஞ்சையாய் நீவித் தந்தாள். அந்தக் கருணையும், பாசமும் அந்த வளர்ந்த குழந்தைக்குப் புரியவில்லை. அம்மாவைப் பார்த்து எச்சில் ஒழுக சிரித்தது.

கிட்டத்தட்ட நாலு வருடமாகிறது. சமினா மறுபடியும் மழலையாய் மாறி, அவள் புருஷனுடைய மவுத்தை அருகிலிருந்து பார்த்த அதிர்ச்சி. அவள் மூளையை மழுங்கடித்து விட்டது. அதுகூட நல்லத்துக்குத் தான். ஒருவேளை அவன் சுயபுத்தியுடன் இருந்திருந்தால் அந்தத் துயரமே அவளைத் துண்டுத் துண்டாக்கி விட்டிருக்குமே. அன்றிலிருந்து இன்று வரைக்கும் அவளுக்கு சோறூட்டுவதும், உடை மாற்றி விடுவதும்கூட ஜரினாதான். அந்தத்தாய் தாதியும் ஆகிப்போனாள். சம்சுதீன் மவுத்திற்குப் பிறகு அவள் வாழ்க்கைக்கு இருந்த ஒரே ஆதாரம் சமீனாதான். ஆனால் இன்று சமினாவிற்கு இருக்கும் ஒரே ஆதாரமாய் ஜரினாவை அல்லாஹு இடம் மாற்றி வைத்திருந்தான்.

கலவரப் பயத்தில் சூரியன் விரைவாகவே ஓடி ஒளிந்திருக்க இருள் சூழ்ந்த வீதிகளில் பயம் சூழ்ந்த முகங்களோடு மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.,

ஜரினா அடிக்கடி அக்கம்பக்கம் போய்க் கலவர நிலவரத்தை விசாரித்துக் கொண்டு வந்தாள். இரவு உணவு முடித்துப் படுக்கை விரித்த நொடி, பின் வாசற்கதவு மிகச் சன்னமாய்த் தட்டப்பட்டது. லேசாய் அடிவயிற்றில் பயம்.

"யார் அவுக? பின்வாசலைத் தட்டுறது?' என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"ஆன்ட்டி ப்ளீஸ்...கதவு திறங்களேன். நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இங்கவந்து மாட்டிக் கிட்டேன். வந்த இடத்துல பெரிய கலவரம். எனக்கு என்ன பண்றதுன்னு புரியல.'

பெண் குரல். அபயம் தேடுகின்ற பெண் குரல். இளமையின் வாசலில் நிற்கின்ற ஒரு நாசுக்கான பெண் குரல். பயமும், பீதியும் கலந்த பெண்குரல். சட்டென்று கண்முன்னே சமினாவின் முகமும் அவள் கணவன் இறந்த தினமும் நினைவில் வர, எதையும் யோசிக்காமல் ஓடிப்போய்க் கதவு திறந்தாள்.

வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களில் எதிர்பாராத மனிதர்களை நம் வாழ்வோடு இணைத்து வைத்து வேடிக்கை காண்பிக்கிறது. இன்னும் கலவரம் விலகாத கண்களோடும், லேசாய்க் காயம்பட்ட உடம்போடும் அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் தள்ளி, அவள் வயசே மதிக்கத்தக்க இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் தோளில் கேமரா இருந்தது.

"செத்தநேரம் இருங்க. உங்களுக்குச் சாப்பிட தோசை ஊத்தி எடுத்தாரேன்..” ஜரினா எழுந்து கொள்ள, அந்தப் பெண் பதறிப்போய்த் தடுத்தாள்.

“எங்களுக்கு எதுவும் வேணாம் ஆன்ட்டி. எங்களுக்கு நீங்க செய்த இந்த உதவியே ரொம்பப் பெரிசு.." என்றாள் நன்றியோடு.

"அடுத்த வீட்டுக்காரன் பசிச்சிருக்கயிலே நாம சாப்பிடற தையே பாவமா சொல்லுது இஸ்லாம். அப்படியிருக்கயிலே நீங்க எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி. உங்களைப் பசியோட விடலாமா?" கனிவாய்ச் சொல்லிவிட்டு, அரை நொடியில் சுடச்சுட தோசையும், தேங்காய் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள். அவர்கள் சாப்பிட்டு முடிக்க காத்திருந்து மெதுவாய்க் கேட்டாள்.

"இப்போ சொல்லுங்க. யாரு நீங்க? இங்ஙன எதுக்கு வந்தீங்க?"

"என் பேரு வசந்தி. சுடரொளி பத்திரிகையிலே வேல பாக்குறேன். இவர் எங்க பத்திரிகையோட போட்டோகிராபர் கிருபாகர். நாங்க எங்க பத்திரிகையுடைய ஒரு கவர் ஸ்டோரிக்காக காசுக்காரன்புதூருக்கு வந்தோம்.வந்த இடத்துல கலவரத்துல மாட்டிக்கிட்டோம். ஊர் திரும்பறதுக்கு முடியல. எங்களையும் ஏதோ கலவரக்காரங்கன்னு நினைச்சுகிட்டு ரெண்டு பக்கத்து ஜனங்களும் வெட்டவர்றாங்க. அதுனால பெரும்பாடுபட்டு இங்க வந்து சேர்ந்துட்டோம். காலையில் முத பஸ்ஸை பிடிச்சா மதுரைக்கு போயிடுவோம். இப்போதான் நான் பத்திரமான இடத்துல இருக்கிறதா வீட்டுக்குத் தகவல் தந்தேன்_" தன்னுடைய நிகழ்காலத்தை மிகச் சுருக்கமாய்ச் சொல்லி முடித்தாள் வசந்தி.

கொஞ்ச நேரத்தில் பயம் விலகி இயல்பாய்ச் பேச ஆரம்பித்தாள்.

“ஏன் ஆன்ட்டி. இந்த வீட்ல பேச்சு துணைக்குக் கூட ஆளில்லாம தனியா வாழறது கஷ்டமாயில்லயா?"

ஜரினா மென்மையாய்ச் சிரித்தாள்.

"ஆண்டவன் துணையை விடவா ஆளுக துணையா இருந்துடப் போறாக, எல்லாம் அவனோட தீர்ப்பு. அதுல அர்த்தமில்லாமயா இருக்கும்."

"அது சரி ஆன்ட்டி. இந்த மாதிரி மோசமான கலவரம் நடக்கும்போது தனியா இருக்கோமேன்னு தோணாதா? அதுக்குக் காரணமான மனுசங்க மேல கோபம் வராதா?"

அந்தப் பெண் கேட்டபோது ஜரினா அமைதியானாள். அருகில் படுத்திருந்த மகளின் தலை கோதி விட்டாள். நீண்டதொரு பெருமூச்சு நெஞ்சு கடந்தது. கண்களை இறுக்கி மூடி பேச ஆரம்பித்தாள்.

“யம்மாடி, யார்மேல கோவப்படட்டும். இப்படி சுணங்கிப் போய் கிடக்கிற எம் மவளை, விருதுநகர்ல கட்டிக் குடுத்தோம். அங்க இருந்து ஊருக்கு வர்ற வழியில நடந்த மதக்கலவரத்துல எந்த வெவரமும் அறியாத என் அப்பாவி மருமவ புள்ளையை பலபேர் வெட்டிக் கூறு போட்டுட்டாக. அத்தனை பேரும் இந்துக்கள். அத பக்கத்துல இருந்து பார்த்த இவ பைத்தியமாயிட்டா. அதுக்காக நான் யாரை வெறுக்க? யாரோ நாலு பேர் செஞ்ச தப்புக்காக உம்ம மாதிரி இந்துச் சகோதரர்களை கண்டாலே ஆவாதுன்னு ஒதுங்கிப் போவணுமா? ஏதோ நாலு கூறுகெட்ட பயலோட செயலுக்கு ஒரு இனத்தையே பழிகெடாவாக்கணுமா?”

இதுபோன்ற சிந்தனை யாருக்கு வரும்? எத்தனை தெளிந்த பார்வை. பரந்த மனசு. வசந்தியும் கிருபாகரனும் ஜரினாவை மிகுந்த கண்ணியத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

"நீங்க பத்திரிகையில வேல பாக்குறவகதான, நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?"

"கேளுங்க ஆன்ட்டி."

“உங்கள் மாதிரி பத்திரிகைகள்ல அடிக்கடி 'இசுலாமிய தீவிரவாதி'ன்னு எழுதுறீகளே, அந்த வார்த்தையோட ஆழம் உங்களுக்குத் தெரியுமா?"

வசந்தி கூர்மையாகப் பார்த்தாள்.

"இசுலாம்ங்கறது அன்பையும், ஒழுக்கத்தையும், நீதியையும் வழிகாட்டுற அற்புதமான மார்க்கம். தீவிரவாதிங்கறவன் இதுக்கெல்லாம் மாறுபட்டு நடக்கற தனி மனுஷன் அப்புறம் எப்படி அந்த வார்த்தை சரியான அர்த்தம் தரும்? இசுலாமில் மட்டும்தான் தீவிரவாதி இருக்கானா? அப்படியிருக்கயில இசுலாம் தீவிரவாதி'ன்னு முத்திரை குத்தி குத்தி இசுலாத்தைக் காயப்படுத்தலாமா?"

வசந்திக்குச் பொட்டில் சரீரென்று போலிருந்தது. எத்தனை நியாயமான கேள்வி. அறைந்தது.

"நம்ம சமுதாயத்துல எத்தனை மனுஷங்க இருக்காங்க. அவங்க நல்ல கொணம், வள்ளல் கொணத்துக்கு மதத்தோட பேர் தர்றதில்லை. இசுலாமிய வள்ளல், இசுலாமிய மேதை, இசுலாமிய விஞ்ஞானி'ன்னு வழக்கத்துல யாரையும் நாம் சொல்றதில்ல. அப்படி இருக்கயிலே மதம் சொல்ற வழிகாட்டலைப் புறந்தள்ளிட்டு, தப்பு செய்றவனுக்குப் புனிதமான இசுலாத்துடைய அடையாளத்தை ஏன் தர்றிங்க? அது எங்களை மாதிரி கோடான கோடி இசுலாமியர் மனசை ரணப்படுத்தாதா?”

வசந்தியும், கிருபாகரும் அமைதியாய் அமர்ந்திருந்தார்கள்.

"யம்மாடி உன்னை காப்பாத்த நெனச்சப்போ நீ வஹிதாவா, வசந்தியான்னு நான் யோசிக்கல. உன்னை வேத்து இனமா பார்க்கக்கூடயில்ல. அதுதான்மா மனுஷத் தன்மை. அந்த மனுஷத்தன்மைக்கும், மிருகத் தன்மைக்கும் எந்த மதத்தையும் அடையாளமா சொல்லாதீக. இது என் வேண்டுகோள். முதல்ல அதை நீ செய், உன்னைப் பார்த்து இந்த ஊரும், நாடும் அதன்படியே செய்யட்டும்."

இருள் பிரியாத அந்த அதிகாலைவேளையில் காசுக்காரன் புதூரில் இருந்து பேருந்து சீறிக்கொண்டு கிளம்பியது.

கண்களை மூடி அமர்ந்திருந்தாள் வசந்தி.

"என்ன வசந்தி, இன்னும் நீ அந்த நிகழ்வில் இருந்து விலகலயா?" என்றான் கிருபாகர்.

'ஆமாம் கிருபா, எத்தனை அற்புதமான மனுஷி. படிப்பு வாசனை இல்லாத மனசில் எத்தனை அறிவு வாசனை. தன்னுடைய துயரே மலையளவு இருக்கும் போது, தன் மதத்துடைய பேர் காயப்படக் கூடாதுன்னு எத்தனை பரிதவிப்பு. பெரிய விஷயத்ததைக்கூட எத்தனை நாசுக்காய் சொன்னாங்க. அதிலேயும் தன்னுடைய கஷ்டங்களைப் பத்தி பேசும்போது, 'உன்னுடைய துயரம் எவ்வளவு பெரியதுன்னு இறைவனிடம் சொல்லாதே, உன்னுடைய துயரத்திடம் சொல், நம்முடைய இறைவன் எவ்வளவு பெரியவனென்று சொன்ன வார்த்தை எல்லாம் காதுக்குள்ளேயே ஒலிக்குது. பேசாம அவங்க அரசியல்வாதியாவோ, ஆன்மிகவாதியாகவோ ஆகியிருக்கலாம். நம்ம சமூகம் உருப்பட்டு இருக்கும்."

"நீயொரு மண்டு வசந்தி. அப்படியொரு துறையில் அவங்க இருந்திருந்தா சராசரி மனுஷி ஆகியிருப்பாங்க. எந்த கலப்படமும் இல்லாததாலதான் அவங்க நிழல்கூட, சுத்தமான அன்பைப் பேசுது. அந்த இசுலாமியத் தாய்க்கு என்னுடைய வந்தனம்" என்று கூறியபடி விரல் மடக்கி நெற்றியில் வைத்து சல்யுட் அடித்துக் காற்றில் பறக்கவிட, அது காசுக்காரன் புதூரில் இருக்கும் ஜரினாவுடைய வீடுநோக்கிப் பயணப்பட ஆரம்பித்தது.