மடல் வரைதிறன்
அலுவல்முறை மடல்கள்
விண்ணப்பித்தல், முறையீடு செய்தல், வணிகம் தொடர்பாக எழுதுதல், இதழசிரியருக்கு எழுதுதல் ஆகியன அலுவல் முறை மடல்கள் ஆகும். அலுவல்முறை மடல்களின் அமைப்புப் பின்வருமாறு அமைகிறது.
அனுப்புநர் / விடுநர்முகவரி (From)
பெறுநர் முகவரி (To)
மரியாதை நிமித்தமான விளி (Salutation)
பொருள் (Subject)
பார்வை (Reference)
மடலின் உடற்பகுதி (Body of the letter)
நன்றி கூறி முடித்தல் (Complimentarty close)
இடம், நாள் (Station, Date)
இணைப்பு (Enclosure)
அனுப்புநர் முகவரி
மடல் எழுதுபவர் தம் பெயரையும் முகவரியையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பெறுநர் முகவரி
மடல் எவருக்கு எழுதப்படுகிறதோ அவரது பெயரும் முகவரியும் தெளிவாக எழுதப்பட வேண்டும்.
மரியாதை நிமித்தமான விளி (தொடக்கப்பகுதி) (Salutaion)
மடலைப் பெறுபவர் ஆடவராயின் ஐயா என்று விளிக்க வேண்டும். மகளிராயின் அம்மையீர் என்று குறிப்பிட வேண்டும். பக்கத்தில் காற்புள்ளி () இடவேண்டும்.
பொருள் (Subject)
பொருள் என்று குறிப்பிட்டு முக்காற் புள்ளி (;) இட்டு விண்ணப்பத்தின் செய்தியைச்சுருக்கமாக எழுத வேண்டும்.
பார்வை (Reference)
மடல் பெறுநருக்கும் அனுப்புநருக்கும் முன்பே தொடர்பு இருப்பின் அது குறித்த விவரம் பார்வை என்ற பகுதியில் குறிக்கப்பெறும். வேலை வேண்டி எழுதப் பெறும் மடலில் வேலைவாய்ப்புத்தொடர்பான நாளிதழ் விளம்பரம் பற்றிய குறிப்பு இப்பகுதியில் எழுதப்பெறும்.
மடலின் உடற்பகுதி (Body of the Letter)
எந்த நோக்கத்திற்காக மடல் எழுதப்படுகிறதோ அதனைத் தெளிவாக விவரித்தல் இப்பகுதிக்குள் அடங்கும். எழுதப் பெறும் செய்தி மூன்று பத்திகளுக்குள் சொல்லப் பட்டிருப்பின் சிறப்பாக அமையும்.
நன்றி கூறி முடித்தல் (Complimentary Close)
மடலின் உடற்பகுதியை எழுதிமுடித்த பின்னர் அதன் கீழே நடுவில் நன்றி என்று எழுதிவிட்டு, வலப்பகுதியில் கையொப்பமிட வேண்டும்.
இடம், நாள் (Station, Date)
கையொப்பம் இட்ட இடத்தின் இடப்பக்கத்தில் அனுப்புநரின் இடமும் (ஊர்)மடல் எழுதப்பெறும் நாளும் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதப்பெற வேண்டும்.
இணைப்பு (Enclosure)
மடலுடன் ஏதாவது வரைவோலையோ, காசோலையோ தன் விவரப்பட்டியலோ (வேலைக்கான விண்ணப்பமாயிருப்பின்) மதிப்பெண் சான்றிதழோ இணைத்து அனுப்பினால் அவற்றை இணைப்பு என்ற தலைப்பின் கீழ்ப் பட்டியலிட்டு எழுதவேண்டும்.
விண்ணப்பங்கள்
அலுவல் முறை மடல்கள் பல்வேறு வகையில் அமையும். ஒன்றைப் பெறக்கருதி வேண்டிக்கொள்வது விண்ணப்பமாகும்.
வேலைவேண்டி இதழ்களில் வரும் விளம்பரப் பகுதி யைப் பார்த்துத் தம் கல்வித்திறன் முதலியன குறித்தெழுதி விண்ணப்பித்தல் இதன் வகைப்படும்.
மடலுடன் அந்த வேலைக்குரிய நமது கல்வித் தகுதி, பிற ஒரு வேலைக்காக விண்ணப்பிக்கும்பொழுது விண்ணப்ப தகுதிகள் பற்றிய தன்விவரக் குறிப்பை உடன்சேர்த்து அனுப்ப வேண்டும். அது நம்மைப் பற்றிய ஓர்அறிமுகமாக அமையும்.
தனிப்பட்ட விவரங்கள்
பெயர், வயது, பிறந்தநாள், பாலினம், தேசிய இனம், திருமணம் பற்றிய விவரம், வீட்டு முகவரி (தொலைபேசி எண், மின்னஞ்சல்) ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும்.
கல்வித்தகுதி
உயர்நிலைப்பள்ளி முதல் பட்டப்படிப்பு, பட்டமேற் படிப்பு, அதற்கும் மேலான கல்வியின் முழு விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும். இவற்றைக் கல்வி பயின்ற நிறுவனம், பாடம், தேர்ச்சிபெற்ற ஆண்டு,வகுப்பு, மதிப்பெண், விழுக்காடு என்ற வரிசையில் அட்டவணைப் படுத்துதல் நன்றாக இருக்கும்.
தொழிற்கல்வித் தகுதி - கூடுதல் தகுதி
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி தொடர்பான படிப்புப் போன்றவற்றைப் பற்றிய விவரங்களைத் தருதல் வேண்டும்.
முன் அனுபவம்
இதற்குமுன் வேலை பார்த்திருப்பின் வேலை பார்த்த நிறுவனம், பணிபுரிந்த காலம் குறிப்பிடல் வேண்டும். போன்றவற்றைக்
பிற சிறப்புகள்
போட்டிகளில் பெற்ற பரிசுகள், விருதுகள், நூல் வெளியீடுகள் இதழில் அச்சாகிய ஆய்வுக்கட்டுரைகள் போன்றவை இருப்பின் அவை தொடர்பான விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
தன்விவரக் குறிப்பு - மாதிரி
பெயர்: புகழேந்தி
வயது: 20
பிறந்தநாள்: 08.09.1991
பாலினம்: ஆண்
தேசிய இனம் : இந்தியர்
திருமணம்: ஆகவில்லை
முகவரி : 5, பாரதிசாலை, -600005
கைப்பேசி: 98765 43210
மின்னஞ்சல்: pughazhendhi@gmail.com
கல்வித் தகுதி: பிஎஸ்சி., கணிதம்
கல்வி நிறுவனம் : புதுக்கல்லூரி, சென்னை-600014
மதிப்பெண் விகிதம்: 75%
கூடுதல் தகுதி:
1. தட்டச்சு-தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மேனிலை
2. கணினி-பட்டயச் சான்றிதழ் இல்லை
முன்அனுபவம்:
1. தேசிய மாணவர் படையில் 'பி' சான்றிதழ்
2. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளும் சான்றிதழ்களும்
புகழேந்தி
(கையொப்பம் )
முறையீட்டு மடல்கள்
உரிய பொறுப்பாளர்களுக்குக் குறைநீக்கித் தருமாறு எழுதப்பெறுவன முறையீட்டு மடல்கள் என்று வழங்கப் பெறும். கல்லூரி, ஆசிரியர், முதல்வருக்கு எழுதுவனவும் இவ்வகையுள் அடங்கும்.
வணிக மடல்கள்
இரு வணிக நிறுவனங்களுக்கு இடையிலோ தனிப்பட்ட ஒருவரால் வணிக நிறுவனம் ஒன்றுக்கோ எழுதப்பெறும் மடல்கள் இவ்வகையில் அடங்கும்.
வாசகர் மடல்கள்
ஓர் இதழில் இடம்பெற்ற செய்தியைப்பற்றி அதன் வாசகர் ஆசிரியருக்கு எழுதும் மடல்கள் இவ்வகையுள் அடங்கும். ஒரு செய்தியைப் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும் கோணங்களையும் நோக்க நிலைகளையும் இவ்வகை மடல்களில் காணலாம்.
நாளிதழில் வெளியான வேலை வாய்ப்பு விளம்பரத்தைக் கண்டு விண்ணப்பித்தல்
அனுப்புநர்:
அ. எழிலன்,
25, காமராசர் தெரு,
சென்னை-600018.
பெறுநர்:
ஆணையர்,
சென்னை மாநகராட்சி அலுவலகம்,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: இளநிலை எழுத்தர் பணிக்காக விண்ணப்பித்தல் தொடர்பாக.
பார்வை:- 5.5.2015 அன்றைய தினமணி நாளிதழில் வெளியான தங்கள் விளம்பரம் - எண்-5.
05.5.2015 அன்றைய தினமணி நாளிதழில் சென்னை மாநகராட்சியில் இளநிலை எழுத்தர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வெளியிடப்பட்ட விளம்பரத்தைக் கண்டேன். அப்பதவிக்கான என்னுடைய விண்ணப்பத்தை இத்துடன் அனுப்புகிறேன். நான் மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் 80 விழுக்காடு மதிப்பெண் பெற்றுச் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தட்டச்சுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் மேல்நிலைத் தகுதித் தேர்வில் (Higher Grade) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். கணினியில் பயிற்சி பெற்று அதற்கான பட்டயச் சான்றிதழ் பெற்றுள்ளேன். எனவே தங்கள் நகராட்சியில் நிரப்பப் படாமல் இருக்கும் எழுத்தர் பணியிடத்தில் பணிபுரிய வாய்ப்பு அளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
அ. எழிலன்
இடம்: சென்னை
நாள்: 06.05.2015
இணைப்பு:-
1. தன்விவரக் குறிப்பு
2. மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் நகல்
3. தட்டச்சுத் தேர்வுச் சான்றிதழ் நகல்
4. கணினி பட்டயச்சான்றிதழ் நகல்
சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நிதியுதவி வேண்டி வங்கிக்கு விண்ணப்பித்தல்
அனுப்புநர்:
அன்பு மணி,
50. திருவள்ளுவர்சாலை,
அம்பத்தூர்,
சென்னை-600 053.
பெறுநர்:
மேலாளர்,
பாரத ஸ்டேட் வங்கி,
அம்பத்தூர் கிளை,
சென்னை-600 053.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: சுயவேலைவாய்ப்புக்கு வேண்டி விண்ணப்பித்தல். நிதியுதவி
நான் சென்னைப் புதுக்கல்லூரியில் பயின்று பொருளாதாரப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன். முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நான் அரசுப் பணிக்குச் செல்வதைவிட, சுயமாக ஒரு தொழில் தொடங்குவதில் ஆர்வமாக உள்ளேன். எனவே சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் அரசின் நிதியுதவி வேண்டி விண்ணப்பிக்கிறேன்.
எங்கள் பகுதியில் உயர்நிலைப்பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகள் எனக் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. எனவே அக்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தேவைக்கான எழுதுபொருள் விற்பனை நிலையம் ஒன்றைத் தொடங்கினால் நல்ல பயனைத் தரும் என்று கருதுகிறேன் விற்பனை நிலையம் தொடங்குவதற்குத் தாங்கள் நிதியுதவி அளித்து உதவுவீர்களானால் குறைந்தது இருவர்க்கு வேலை வாய்ப்பினை என்னால் தர இயலும். கருத்துருவை உரிய படிவத்தில் இத்துடன் அனுப்புகிறேன்.
எனவே, தாங்கள் என் விண்ணப்பத்தைப் பரிசீலனை வழங்குமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் வழங்கும் உதவித் தொகையை மாதந்தோறும் தவணை முறையில் தவறாது செலுத்திவிடுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள
அன்புமணி
அம்பத்தூர்
10.07.2015
இணைப்பு
1. கருத்துரு திட்ட மதிப்பீடு
2. இளங்கலைப் பட்டச்சான்றிதழ் நகல்
3. நன்னடத்தைச்சான்றிதழ் நகல்
புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி மின்வாரியத்தின் உதவிப்பொறியாளருக்கு விண்ணப்பித்தல்
அனுப்புநர்:
மா. தமிழ்ச்செல்வன்,
206. இரண்டாவது தெரு,
பாரதி நகர், போரூர்,
சென்னை 600106.
பெறுநர்:
உதவிப்பொறியாளர்,
மின்இணைப்பு வழங்கும் பிரிவு,
போரூர்,
சென்னை-600106.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டுதல்
மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் நாங்கள் புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளோம். அவ்வீட்டில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற முறையில் தரமான மின்சாதனப் பொருள்களைக்கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துள்ளோம். என் வீட்டிற்கு மின் இணைப்புப் பெறுவதற்கு உரிய இணைப்புத் தொகை ரூ.6700 ஐ 06.03.2015 அன்று தங்கள் அலுவலகத்தில் செலுத்தி விட்டோம். அதற்குரிய பற்றுச் சீட்டின் நகலினை இத்துடன் இணைத்துள்ளோம். வரும் தமிழ்ப் புத்தாண்டு நாளன்று புதுமனையில் குடிபுக உள்ளோம். எனவே தாங்கள் அருள்கூர்ந்து எங்கள் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கும் ஆணையை விரைவில் தருமாறு மிகவும் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
மா. தமிழ்ச்செல்வன்
இடம்: சென்னை
நாள்: 06.05.2015
நூலக வசதிசெய்து தரவேண்டிப் பொது நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுதல்
அனுப்புநர்:
மு.உமர் பாரூக்,
47, கிழக்குத் தெரு,
பெரியார் நகர், பாலவாக்கம்,
சென்னை- 600041.
பெறுநர்:
பொதுநூலக ஆணையர்,
தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடம்,
அண்ணாசாலை, சென்னை-600 002.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: நூலக வசதி வேண்டுதல்.
நான் சென்னையில் திருவான்மியூரை அடுத்த பாலவாக்கத்தில் உள்ள பெரியார் நகரில் வாழ்ந்து வருகிறேன். பெரியார் நகர் சென்னை மகாபலிபுரம் கடற்கரைச்சாலையில் மேற்குப் புறத்தே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் புறநகர் ஆகும். இந்நகரில் ஏறத்தாழ ஐயாயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பள்ளிக்கூட கல்லூரி மாணவர்கள் மட்டும் ஏறத்தாழ எண்ணூறு பேர் உள்ளனர். எங்கள் நகருக்குப் பக்கத்தில் இலவசப் பொதுநூலகம் எதுவும் இல்லை. நான்கு கிலோ மீட்டர் தள்ளியே நூலகம் அமைந்துள்ளது. இங்கே உள்ள மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு உரிய நூல்களை வாங்கிப்படிக்கின்ற அளவிற்குப் போதிய பொருளாதார வசதி இல்லாதவர்கள். எனவே எங்கள் நகரில் ஒரு நூலகம் அமைத்துத் தந்தால் ஐயாயிரம் மக்கள் வாழும் இல்லங்களில் அறிவு விளக்கை ஏற்றியதற்கு ஒப்பாகும். எனவே அருள்கூர்ந்து எங்கள் பகுதியில் பொது நூலகம் ஒன்று அமைத்துத் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
மு. உமர் பாரூக்
இடம் : பாலவாக்கம்
நாள்: 14.05.2015
சாலையைப் பழுதுபார்த்துத் தருமாறு நகராட்சி ஆணையரை வேண்டிக் கடிதம் எழுதுதல்
அனுப்புநர்:
மா. பாண்டியன்,
25, இரண்டாவது சாலை,
எழில் நகர், வேலூர்.
பெறுநர்:
ஆணையர்,
வேலூர் நகராட்சி,
வேலூர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: சாலையைப் பழுதுபார்த்துத்தருமாறு வேண்டுதல்.
நாங்கள் வாழும் எழில் நகரில் உள்ள இரண்டாவது சாலை கடந்த பத்து நாட்களாகப் பெய்த தொடர் மழையினால் மிகவும் பழுதடைந்து விட்டது. சாலையில் எங்குப் பார்த்தாலும் குண்டும் குழிகளும் நிறைந்து, அவற்றில் மழைத் தண்ணீர் தினமும் தேங்கிக் கிடக்கிறது. இதனால் இந்தச் சாலை வழியே நடந்து செல்பவர்கள் அனைவரும் இடர்ப்படுகின்றனர். குறிப்பாகக் குழந்தைகளும் பெரியவர்களும் சொல்லொணாத் துயர் அடைகின்றனர். மேடு பள்ளமாகி விட்ட இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் நிலைதடுமாறிக் கீழே விழுந்து விபத்திற்கு ஆளாகின்றனர். மேலும் வேலூரின் தென்பகுதியிலிருந்து மையப்பேருந்து நிலையம், செல்வதற்கு இதுவே முதன்மைச்சாலை என்பதால் வாகனப் போக்கு வரத்தும் அதிகமாக உள்ளது. எனவே தாங்கள் அருள்கூர்ந்து தனிக்கவனம் செலுத்தி இச்சாலையைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டுத் தருமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
மா. பாண்டியன்
இடம்: வேலூர்
நாள்: 30.10.2015
கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டிக் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதுதல்
அனுப்புநர்:
க. இராமலிங்கம்,
இளங்கலை மூன்றாம் ஆண்டு வரலாறு,
புதுக்கல்லூரி, சென்னை-600 014.
பெறுநர்:
முதல்வர்,
புதுக்கல்லூரி,
சென்னை-600014.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: கல்வி உதவித் தொகை வழங்குமாறு வேண்டுதல் தொடர்பாக..
நான் இளங்கலை மூன்றாம் ஆண்டு வரலாறு பயின்று வருகிறேன். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். மூன்றாம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை 16.07.2015 அன்று எங்கள் துறைத்தலைவரிடம் கையொப்பம் வாங்கி அலுவலகத்தில் தந்தேன். தற்போது எல்லா மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எனக்கு மட்டும் வழங்கப்படவில்லை. சுல்வி உதவித் தொகை பெறுவதற்கு வேண்டிய வருகை பதிவு சற்றுக் குறைவாக இருந்ததே காரணம் என்று எழுத்தர் கூறினார். ஐயா, டி.சம்பர் திங்களில், நான் டைபாயிடு காய்ச்சலால் துன்புற்றதால் ஒரு மாதம் முழுமையாக என்னால் வகுப்புக்கு வர இயலவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான மருத்துவரின் சான்றிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
ஐயா, இனிமேல் நாள்தோறும் தவறாது வகுப்புகளுக்கு வந்து நல்ல முறையில் படிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே எனக்குகல்வி உதவித்தொகை பெற்று வழங்கி அருளுமாறு தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
க. ராமலிங்கம்
இடம்: சென்னை
நாள்: 30.08.2015
பதிப்பகத்தார்க்கு நூல்கள் வேண்டி மடல் எழுதுதல்
அனுப்புநர்:
இ. அறிவழகன்,
108, அண்ணா நகர், கிளியனூர்,
விழுப்புரம் மாவட்டம்-604102.
பெறுநர்:
மேலாளர்,
மணிவாசகர் பதிப்பகம்,
31, சிங்கர் தெரு,
பாரிமுனை - 600108.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: நூல்கள் சிலவற்றை அனுப்புமாறு வேண்டுதல்.
தங்கள் பதிப்பகம் வெளியிட்ட நூல்களின் புதிய விலைப்பட்டியலைப் பார்த்தேன். அப்பட்டியலில் உள்ள நூல்கள் சில எனக்குத் தேவைப்படுகின்றன. அவற்றிற்கு உரிய விலையையும், அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான செலவுத் தொகையையும் பணவிடை மூலம் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். எனவே அருள்கூர்ந்து நான் கீழே குறிப் பிட்டுள்ள நூல்களை மேலே குறிப்பிட்டுள்ள என்னுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தேவையான நூல்கள்
1. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் -தமிழ்த் தென்றல் திரு. வி.க. - ஒருபடி
2. வள்ளுவம் - முனைவர் வ.சுப. மாணிக்கம் ஒரு படி
நன்றி
தங்கள் உண்மையுள்ள
இ. அறிவழகன்
இடம்:சென்னை
நாள்: 18.09.2015
All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.

0 Comments