தொடர்ப் பிழை நீக்கம்
பயிற்சி
அ) ஓர் - ஒரு, ஈர் - இரு
1. ஓர் கன்னத்தில் அடித்தால் மறு கன்னங்காட்டு.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்டு.
2. இரு உடல்கள் கிணற்றில் மிதக்கின்றன.
ஈருடல்கள் கிணற்றில் மிதக்கினற்ன.
3. முக்கியமான ஒரு அறிவிப்பு.
முக்கியமான ஓர் அறிவிப்பு.
4. ஒரு உயிரும் ஒரு உடலுமான மெய்க்காதல் இது.
ஓர் உயிரும் ஓர் உடலுமான மெய்க்காதல் இது.
5. அன்புக்கொரு அக்காவும், பண்புக்கோர் தங்கையும் எனக் குண்டு
அன்புக்கு ஓர் அக்காவும், பண்புக்கு ஒரு தங்கையும் உண்டு.
6. உண்மையில் ஒரு உறவும் உண்மையன்று பொய்த் தோற்றமே உண்மையில் ஓர் உறவும் உண்மையன்று பொய்த்தோற்றமே.
7. கனவிலோர் காரிகை தோன்றினாள்.
கனவில் ஒரு காரிகை தோன்றினாள்.
8. தான் குபேரனாவதாக அவனுக்கோர் நம்பிக்கை; பலிக்குமா?
தான் குபேரனாவதாக அவனுக்கு ஒரு நம்பிக்கை; பலிக்குமா?
9. வாழ்விலோர் திருநாள், கல்லூரி நாளன்றோ?
வாழ்வில் ஒரு திருநாள் கல்லூரி நாள் அன்றோ?
10. ஒரு ஆதாரமும் இல்லாமல் தூற்றிப் பேசாதே.
ஓர் ஆதாரமும் இல்லாமல் தூற்றிப் பேசாதே.
11. நீர் ஓர் நாளாவது ஒழுங்காக வந்ததுண்டோ?
நீர் ஒரு நாளாவது ஒழுங்காக வந்தது உண்டோ?
ஆ) தன், தம்
1. தாய்மார்கள் தன் குழந்தைகளைக் கவனமாக வளர்க்க வேண்டும் தாய்மார்கள் தம் குழந்தைகளைக் கவனமாக வளர்க்க வேண்டும்.
2. பேராசிரியர் தன் மாணவர்களை ஊக்குவிப்பவர்.
பேராசிரியர் தம் மாணவர்களை ஊக்குவிப்பவர்.
3. மாணவன் தம்படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.
மாணவன் தன் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்
4. கலைமகள் இதழும் குங்குமம் இதழும் தன் வாசகர்களை மதிக்கின்றன.
கலைமகள் இதழும் குங்குமம் இதழும் தம் வாசகர்களை மதிக்கின்றன.
5. என் நண்பன் தம் துன்பத்தைத் தீர்க்க உதவி கேட்டான்.
என் நண்பன் தன் துன்பத்தைத் தீர்க்க உதவி கேட்டான்.
6. மாணவர் தலைவரும், மாணவச் செயலரும் தனக்கு வாக்க ளித்தவர்களுக்கு நன்றி கூறினர்.
மாணவர் தலைவரும், மாணவச் செயலரும் தமக்கு வாக்களித் தவர்களுக்கு நன்றி கூறினர்.
7. தன் தகுதிக்கு ஏற்ற மதிப்பெண்களை மாணவர்கள் பெறுகின்றனர். தம் தகுதிக்கு ஏற்ற மதிப்பெண்களை மாணவர்கள் பெறுகின்றனர்.
8. வீரன் ஒவ்வொருவனும் தம் படைக்குப் பெருமை சேர்க்கிறான்.
வீரன் ஒவ்வொருவனும் தன் படைக்குப் பெருமை சேர்க்கிறான்.
இ) ஒருமை பன்மைப் பிழைகள்
1. கேள்விகள் எதிர்பார்த்ததாய் இருந்தது.
கேள்விகள் எதிர்பார்த்தனவாய் இருந்தன.
2. பாபு சேகரித்த தகவல்கள் சரியானதா?
பாபு சேகரித்த தகவல்கள் சரியானவையா?
3. செல்லாத வாக்குகள் நிறைய இருந்தது. எனவே தேர்தல் முடிவும் மாறின,
செல்லாத வாக்குகள் நிறைய இருந்தன. எனவே தேர்தல் முடிவும் மாறியது.
4. தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தந்தது.
தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தந்தன.
5. நகரப் பேருந்துகள் ஏன் மெதுவாகச் செல்கின்றது?
நகரப் பேருந்துகள் ஏன் மெதுவாகச் செல்கின்றன?
ஈ) கலப்பட நடை
1. எஸ் நீ போகலாம்.
ஆம். நீ போகலாம்.
2. அப்கோர்ஸ் உன் Problem எனக்கு அன்டர்ஸ்டாண்ட் ஆகுது.
சொல்லப் போனால் உனது பிரச்சனை எனக்குப் புரியது.
3. யூ ஆர் கிரேட் : உங்க Answers எல்லாம் கரக்ட்.
நீங்கள் மிகச்சிறந்தவர். உங்கள் விடைகள் எல்லாம் சரியே.
4. வீர பாண்டியன் was grilling கோபாலன்
வீர பாண்டியன் கோபாலனைத் துருவித் துருவிக் கேட்டார்.
5. எனினும் ஜார்ஜ் வாஷிங்டன் சொன்னதுபோல் It is better to be along than in bad company.
எனினும் ஜார்ஜ் வாஷிங்டன் சொன்னதுபோல் தீமையளிக்கும் நட்பு வட்டத்தில் இருப்பதைவிட நீடித்து நிலைக்கும் நட்பு வட்டத்தில் இருப்பது நல்லது.
உ) பால், திணைப் பிழைகள்
1. தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கியது நீதான்.
தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கியவன் நீதான்.
2. போர்க்களத்தில் முன்னே நின்று போரிட்டது சேரமானே.
போர்க்களத்தில் முன்னே நின்று போரிட்டவன் சேரமானே.
3. அடிக்கடி கடிதம் எழுதியது நான்.
அடிக்கடி கடிதம் எழுதியவன் நான்.
4. தேர்தலில் வென்றது நீங்கள்தாம்.
தேர்தலில் வென்றவர் நீங்கள்தாம்.
5. நம் அனைவருக்கும் பயணச்சீட்டு வாங்கியது யார்?
நம் அனைவருக்கும் பயணச்சீட்டு வாங்கியவர் யார்?
6. சிக்கலைத் தீர்க்க முன்வந்தது கலாதானே?
சிக்கலைத் தீர்க்க முன்வந்தவள் கலாதானே?
7. ஆபத்தில் உதவியது நாம் என்பதை ஏழுமலை மறந்துவிட்டான்.
ஆபத்தில் உதவியவர்கள் நாம் என்பதை ஏழுமலை மறந்துவிட்டான்.
8. கதை வசனம் எழுதியது கண்ணதாசன். இயக்கியதோ டி.ஆர். சுந்தரம்.
கதை வசனம் எழுதியவர் கண்ணதாசன். இயக்கியவரோ டி.ஆர். சுந்தரம்.
9. கல்விக்காகப் பேரளவில் பணம் கொடுத்தது வள்ளல் பச்சை யப்பரே.
கல்விக்காகப் பேரளவில் பணம் கொடுத்தவர் வள்ளல் பச்சை யப்பரே.
10. வந்த விருந்தாளிகள் ஹில்லாரியும் கிளிண்டனும். வரவேற்றது டோனிப் ப்ளேர் தம்பதி.
வந்த விருந்தாளிகள் ஹில்லாரியும் கிளிண்டனும். வரவேற்றவர் டோனிப் ப்ளேர் தம்பதியர்.
All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.

0 Comments