மாறனின் காலணி, நகரத்தின் தார்ச்சாலையில் நடக்க நடக்கத் தேய்ந்து கொண்டிருந்தது. ஆனால், அவனை விட வேகமாகத் தேய்ந்து கொண்டிருந்தது அவனது கனவுகள். அவன் கிராமத்தின் பச்சை வயல்வெளிகளின் வாசம் மறைய, நகரத்தின் புகை மண்டலம் அவனைச் சூழ்ந்தது. பையில் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் மழையில் நனைந்த காகிதங்கள் போல, ஒருவித ஈரப்பதமான சோகத்தைச் சுமந்திருந்தன.

பசி என்பது மாறனுக்கு ஓர் உணர்வு அல்ல; அது அவனது உடலோடு ஒட்டியிருக்கும் ஒரு நிழல். மதியம் இரண்டு மணி. சாலை ஓரத்தில் சுடச்சுட உணவு ஆவி பறந்து கொண்டிருந்தது. அதன் மணம் அவனது மூக்கைத் துளைத்தது. பாக்கெட்டில் இருந்த இருபது ரூபாய் நோட்டைத் தொட்டுப் பார்த்தான். அது இரவு உணவிற்கானது. ஒரு சிறுவன், பசியின் உச்சத்தில் கடையின் ஓரத்தில் நின்றுகொண்டு, அந்தச் சூடான இட்லியைக் கற்பனையில் தின்றுவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

தன்மானத்திற்கும் வயிற்றுக்கும் இடையே நடக்கும் அந்தப் போரில், அன்று 'தன்மானம்' வென்றது. மாறன் வெறும் தண்ணீரை அருந்திவிட்டு, நேர்காணல் நடக்கும் இடத்திற்கு நடக்கத் தொடங்கினான். அந்தப் பெரிய கண்ணாடி அலுவலகக் கதவுகளைத் தள்ளும்போது, அவன் கைகள் நடுங்கின. உள்ளே நுழைந்ததும், குளிரூட்டப்பட்ட அந்த அறையின் சத்தம் அவனுக்கு ஒருவித பயத்தை அளித்தது. கோட்-சூட் அணிந்தவர்கள் அவனை ஒருவித அலட்சியத்துடன் பார்த்தனர்.​

"உன் படிப்புக்கும், எங்களுடைய வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே?" என்று ஓர் அதிகாரி கேட்டபோது, அந்த அறையே சுழன்றது போல இருந்தது. அவனது எம்.எஸ்சி (M.Sc) படிப்பு, கிராமத்துப் பள்ளியில் அவன் கற்றுக்கொண்ட பாடங்கள், அவன் அப்பா வியர்வை சிந்தி சம்பாதித்த பணம் - இவை அனைத்தும் ஒரு கேலியாக அவனுக்குத் தோன்றியது.

"எங்களுக்குத் திறமையானவன் தேவை, ஆனால் அந்தத் திறமை உடையவன், எங்கள் பாணியில் பேச வேண்டும்," என்றனர் அவர்கள். மாறன் வெளியே வந்தபோது, வெயில் அவனது முகத்தில் அறைந்தது. அவன் அழுதான். தெருவோரக் குழாய் ஒன்றின் ஓரத்தில் அமர்ந்து, தன் அழுக்கான சட்டையைத் தடவிப் பார்த்தான். அந்தச் சட்டை அவனது வறுமையின் சாட்சி. அவன் தோல்வி அடையவில்லை; அந்த உலகம் அவனைத் தோல்வியாளனாகச் சித்தரிக்கத் துடித்தது.

அன்று இரவு நகரத்தின் மின்விளக்குகள் மின்னத் தொடங்கிய நேரம். மாறன் ஒரு பழைய பேருந்து நிலையத்தின் ஓரத்தில் படுத்துக்கொண்டான். அந்த இரவு மிகவும் நீளமானது. தூரத்தில் ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது அவனுக்குத் தன் அம்மாவின் நினைவு வந்தது. "மாறா, சாப்பிட்டியாடா?" என்று அம்மா கேட்கும் அந்தப் பாசமான குரலும் மண்வெட்டி பிடித்து உழைத்து தன்னைப் பெரிய ஆளாக முன்னேற்ற வேண்டும் என்ற தன் தந்தையின் கனவும் அவனை உறங்கவிடவில்லை.

இங்கே அவனைக் சாப்பிட்டாயா என கேட்க ஆளில்லை. அவனது பசி, இப்போது வெறும் வயிற்றில் மட்டும் இல்லை. அது அவனது ஆழ்மனதின் தனிமையில் இருந்தது.​' ஏன் பிறந்தோம்?' என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. ஆனாலும், தன் குடும்பத்தின் முகங்கள் அவன் கண்ணுக்கு முன் வந்து நின்றன. அவர்கள் அவனை நம்பி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைதான் அவனது பசியை விடப் பெரியது என்பதை உணர்ந்தான்.

மறுநாள், ஒரு சிறிய அச்சகத்தின் வாசலில் நின்றான். அங்கு உரிமையாளரின் கண்களை நேராகப் பார்த்தான். "சார், எனக்குப் பசிக்கு சோறு முக்கியம், அதை விட என் உழைப்புக்கு மரியாதை தரும் வேலை முக்கியம். எனக்குத் தட்டச்சு தெரியும், கிராபிக்ஸ் தெரியும். ஒரு வாய்ப்பு கொடுங்கள்," என்று அவன் குரல் நடுங்காமல் கேட்டது.

அந்த உரிமையாளர் மௌனமாக அவனைக் கவனித்தார். மாறனின் கண்களில் இருந்த பசி, அது பசியல்ல - அது ஒரு வேட்கை. அந்த வேட்கைதான் அவனை அந்த அச்சகத்தில் அமர வைத்தது. வேலை கிடைத்தது! ஆனால், அதுவரை அவன் பட்ட அவமானங்கள், அவனை முன்னேறத் தூண்டியது.

அச்சகத்தின் அந்தச் சிறிய அறைதான் மாறனின் புதிய உலகம். அங்கு அவன் வேலையை மட்டும் செய்யவில்லை; தன் ஒவ்வொரு துளி வியர்வையையும் தன்மானமாக மாற்றத் தொடங்கினான். பகலில் தட்டச்சுப் பொறிகளின் சத்தத்திற்கு நடுவே உழைப்பும், இரவில் அதே அச்சகத்தின் காகித மூட்டைகளின் மீது உறக்கமும் அவனுக்குப் பழகிப்போனது. பசி அவனை வாட்டிய நேரங்களில், தன் கிராமத்து வீட்டின் அடுப்பங்கரையும், தன் வருகைக்காக வாசலையே பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர் மற்றும் அவர்களின் கஷ்டம் மட்டுமே அவனுக்குக் கண்களில் நின்றது.

​நாட்கள் நகர நகர, அவனது உழைப்பும் திறமையும் அச்சக உரிமையாளரை வியப்பில் ஆழ்த்தின. சில ஆண்டுகளிலேயே, அதே நகரத்தில் தன் சொந்த உழைப்பால் ஒரு சிறிய வடிவாக்க மையத்தைத் தொடங்கினான் மாறன். இன்று ​அதே நகரத்தின் தார்ச்சாலையில் மாறன் நடந்து செல்கிறான். ஆனால், இன்று அவனது காலணிகள் தேயவில்லை. அவனது தலை நிமிர்ந்திருக்கிறது.

அப்போது எதிரே வந்த அந்தப் பழைய கோட்-சூட் அதிகாரியின் கார், சிக்னலில் நிற்கிறது. கண்ணாடியைத் தாண்டி மாறனைப் பார்க்கும் அந்த அலுவலரின் கண்களில் வியப்பும், மாறனின் புன்னகையில் காலத்தின் பதிலடியும் இருந்தது.

அந்த நேரத்தில் ​திடீரென சாலை ஓரத்தில், பசியோடு ஒரு சிறுவன் உணவகத்தின் ஆவியைப் பார்த்தபடி நிற்பதைக் மாறன் காண்கிறான். மாறனின் கால்கள் தன்னிச்சையாக அவனை நோக்கி நகர்கின்றன. அந்தச் சிறுவனின் தோளைத் தொட்டு, சூடான உணவை வாங்கி அவனிடம் நீட்டினான் ​சிறுவன் உணவை வாங்கும் போது மாறன் மெல்லச் சொன்னான் "வயிற்றுப் பசியை உணவால போக்கிக்கோ தம்பி... ஆனா மனசுல இருக்குற லட்சியப் பசியை மட்டும் எந்தக் காலத்துலயும் ஆறவிட்டுடாத!" என்றான்.

அன்று இந்தச் சிறுவன் போல கண்களில் மின்னிய அந்த நன்றியும் நம்பிக்கையும்தான், மாறனாக தன் வாழ்நாளில் ஈட்டிய மிகப்பெரிய வெற்றி! மாறனின் வெற்றி வெறும் பொருளாதார ரீதியானது மட்டுமல்லாமல், அவன் கடந்து வந்த வழியை மறக்காத ஒரு மனிதனாகவும் அவனை உயர்த்திக் காட்டுகிறது .

மாறன் வென்றான். ஆனால், அந்த வெற்றிக்கு அவன் கொடுத்த விலை மிக அதிகம்.

ஓர் ஏழை மாணவன், நகரத்தின் கல்நெஞ்சங்களுக்கு நடுவே தன்னைக் கண்டறிந்தான். அவனது பசி, ஒரு போதும் அவனைச் சாகடிக்கவில்லை. மாறாக, அவனுக்குள் இருந்த திறமையைத் தீண்டிப் பார்த்தது. ​இன்று, அதே நகரத்தின் தெருக்களில் அவன் கம்பீரமாக நடக்கிறான். அவனது ஒவ்வொரு அடிக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. ஏழ்மை என்பது தடையல்ல, அது ஒரு தளம் என்பதை அவன் உலகுக்கு உரக்கச் சொல்கிறான். மாறனின் கதை, பசியால் வாடும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பெரும் நம்பிக்கை.

முயற்சிக்குரிய பலன் :

மனிதனின் உழைப்பும் முயற்சியும் கண்டிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கான பலன் முழுமையாக வழங்கப்படும் என்று திருக்குர்ஆன் (53:40) குறிப்பிடுகிறது.

பொருள் :

இறைவன் அனைத்தையும் கவனிக்கிறான்: நாம் செய்யும் சிறிய அளவிலான நல்ல முயற்சியோ அல்லது உழைப்போ வீண் போகாது. அது இறைவனால் உற்று நோக்கப்படும். அதற்கான பலன் கிடைக்கும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.(குறள் 619)

பொருள் :

விதிப்பயனால் ஒரு செயல் கைக்கூடாமல் போனாலும், நமது உடல் வருந்திச் செய்யும் உழைப்பு அதற்கான பலனைக் கண்டிப்பாகக் தரும் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது.

நீதிமொழிகள் 22:29 — "தன் வேலையில் சாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் ராசாக்களுக்கு முன்பாக நிற்பான். அற்பர்களுக்கு முன்பாக நிற்கமாட்டான்".

பொருள் :

திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தால் ஒரு மனிதன் தன் வேலையைச் செய்வதால் அவனுக்குக் கிடைக்கும் உயர்வு உயர்ந்த ராசாக்களுக்கு முன்பு அவனைச் சேர்க்கும் என்கிறது .

நாம் ஒவொருவரும் வாழ்வில் நமக்கு ஏற்படும் சில அசாதாரண சூழல்கள் அனைத்தும் நாம் என்றும் சோதனையாகப் பார்த்து சோர்வடைந்து விடாமல் வாய்ப்பாகப் பார்த்து வலிமையோடு எதிர்க்கொண்டு உழைத்தால், ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியடைய முடியும்.