Article No : NPIJT071026

தலைப்பு : ‘திருப்பால்’ குறுநாவல் வெளிக்கொணரும் பிணவறை அரசியலும் மனிதமும்.

ஆய்வாளர் : அ. பெர்த்தி வினித், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் –  602 024.

ஆய்வுச் சுருக்கம் :

சமூகத்தில் குரலற்றவர்களின் குரலை இலக்கியத்தின் வழியே பதிவு செய்யும் முயற்சியில் பல எழுத்தாளர்கள் பேசப்படாத கருப்பொருள்களைத் தம் படைப்புகளில் முன்வைத்து வருகின்றனர். அவ்வகையில், எழுத்தாளர் பாக்கியம் சங்கர் எழுதிய ‘நான்காம் சுவர்’ என்ற நூலில் இடம்பெற்று, பின்னர் இறைவி பதிப்பகத்தால் தனி நூலாக வெளியிடப்பட்ட ‘திருப்பால்’ என்னும் குறுநாவல் இவ்வாய்வின் மையப் பொருளாக அமைகிறது. அரசு மருத்துவமனைப் பிணவறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எதார்த்த வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சிக்கல்களையும் இக்குறுநாவல் சமூகத்தின் முன் பிரதிபலிக்கிறது. மேலும், அப்பணியாளர்களின் வாழ்வில் ஊடுருவியிருக்கும் அரசியல் ஆதிக்கம், குலத்தொழில் முறைமை மற்றும் உயர்ப் பதவிகளில் இருப்பவர்களின் பாலியல் இச்சைகள் ஆகியவற்றைத் வெளிப்படையாகக் காட்டும் தளத்தில் இக்குறுநாவலை அணுகி ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.

Abstract :

Many writers bring unspoken themes to the forefront through literature in an attempt to give voice to the voiceless in society. In this context, Thiruppaal, a novella by Bakkiyam Shankar, originally published in ‘Naangam Suvar’ and later as an independent book by Iraivi Pathippagam, forms the focus of this study. The novella portrays the lived realities and psychological struggles of workers in government hospital mortuaries. This paper examines the political dominance, caste-based occupation, and sexual exploitation of those in positions of authority that shape the lives of these workers.

குறிச்சொற்கள் :

திருப்பால், பாக்கியம் சங்கர், வடசென்னை, பிணவறை, குலத்தொழில், அதிகார வர்க்கம், பாலியல் அத்துமீறல், மனிதநேயம்.

Keywords :

Thiruppaal, Bakkiyam Shankar, North Chennai, Mortuary, Caste-based Occupation, Power Structure, Sexual Abuse, Humanism.

முன்னுரை :

சமூகத்தின் ஒடுக்குமுறைகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து குரல் கொடுக்கும் உன்னதமான கதாபாத்திரமாகத் ‘திருப்பால்’ என்னும் மையக் கதாபாத்திரத்தைப் படைப்பாளி பாக்கியம் சங்கர் வடிவமைத்துள்ளார். வடசென்னை மக்களின் இயல்பான வட்டார வழக்கைப் பயன்படுத்தி, அவர்களின் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் கதையோட்டத்தோடு மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளார். வாசகர்களை நேரடியாகவே ஒரு பிணவறையின் கணமான சூழலுக்குள் அழைத்துச் செல்லும் ஆற்றல்மிக்கதாக இக்குறுநாவலின் போக்கு அமைந்துள்ளது. உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன், சாதி வேறுபாடுகள் என அனைத்தும் மனிதனின் மரணத்திற்குப் பின் பிணவறையின் வாசலில் அர்த்தமற்றுப் போவதை இக்கதை உணர்த்துகிறது. பிணவறையில் மனித உடல்களையும் உறுப்புகளையும் வெட்டிப் பரிசோதிக்கும் திருப்பாலின் கத்தியும், அதற்குப் பின்னால் இயங்கும் அவனது ஆழமான மனிதநேயமும், அவனது மனநிலையும் கவனத்திற்குரியவை. மேலும், பிணவறைச் சூழலில் நிகழும் அரசியல் ஆதிக்கங்கள், குலத்தொழில் முறைமை, மேலதிகாரிகளின் நடத்தை மற்றும் பிணவறைப் பணியாளர்களின் உளவியல் போராட்டங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளத்தில் சமூகவியல், உளவியல் அணுகுமுறைகளோடு இக்கட்டுரை பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

குலத்தொழில் என்னும் தலைமுறைச் சுமை :

“பெயரும் வினையும் என்று ஆஇரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே.” (தொல்.பொருள்.நூ:22) என்று திணைகளில் வாழும் மக்களின் பெயர்கள் குலத்தினாலும் (குடும்ப மரபு), அவர்கள் செய்யும் தொழிலினாலும் அமையும் எனத் தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார். தொல்காப்பியர் குறிப்பிடும் ‘குலம்’ எனும் சொல் ஒழுக்கமிக்க குடிவழியையே குறிப்பதாகும். பிற்காலத்தில் இப்பாகுபாடு சாதியாக உருமாறி மனிதர்களைப் பிரித்து வைத்தது. இச்சாதியக் கட்டமைப்பின் உச்சகட்ட வெளிப்பாடே குலத்தொழில் முறையாகும்.

மூதாதையர் செய்த தொழிலையே வருங்காலச் சந்ததியும் செய்ய வேண்டும் எனும் இக்கொடூர முறையினால், பிணத்தை அறுக்கும் தொழிலைத் தலைமுறை தலைமுறையாகச் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் திருப்பாலின் அகக்குமுறலையும் வருத்தத்தையும் இக்குறுநாவல் பதிவுச் செய்கிறது. குலத்தொழில் என்னும் சங்கிலி முறையைத் தன் மகனின் தலைமுறையாவது உடைத்தெறிய வேண்டும் என்னும் திருப்பாலின் விருப்பத்தை ஆசிரியர் இவ்வாறு பதிவுச் செய்கிறார்.

“அப்படி இன்னா தேச துரோகமாடா பண்றோம்... பீ மாதிரி பாக்குறானுங்க நம்மள... வழி வழியா புடிச்ச கத்திய ரத்தத்தோட என்னாண்ட கொடுத்தான் என் அப்பன்... என்னோட போகட்டும் இதெல்லாம்..." என்றவர் ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டே, "காந்தியாவது வெளிச்சமா ஒரு வேலய செய்யட்டும்... குலத்தொழில்னு நம்மளே செய்யனும்னு சட்டம் இருக்கா இன்னா... கொஞ்ச காலத்துக்கு வேற யாராவது அறுக்கட்டும்..." (பக்.29) தன்னோடு இக்கொடூரத் தொழில் போகட்டும் என்னும் திருப்பாலின் மனக்குமுறல் இறுதியில் தோற்றுப்போகிறது; இச்சமூகம் கட்டமைத்த குலத்தொழிலே வெல்கிறது. நாவலின் இறுதி வரிகள் இக்கோர நிஜத்தைக் வாசகரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படம்பிடிக்கின்றன: “திருப்பாலைப் போலவே விந்தி விந்தி காந்தியும் உள்ளே நுழைந்தான். பிணவறையைப் பொறுத்தவரை திருப்பால்கள் எப்போதும் சாவதேயில்லை.” (பக்.47) திருப்பாலின் மறைவுக்குப் பின் அவனது மகனும் அதே பிணவறைத் தொழிலுக்கே தள்ளப்படுகிறான். விளிம்புநிலை மக்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை வழங்க மறுக்கும் இச்சமூக அமைப்பில், அவர்கள் இறுதிவரைக் குலத்தொழிலுக்கே நிர்ப்பந்திக்கப்படும் கொடூரமான அவல நிலையைத் ‘திருப்பால்’ குறுநாவல் சாட்சியமாக நின்று வெளிப்படுத்துகிறது.

பிஞ்சு உடலும் திருப்பாலின் பரிவும் :

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெண் குழந்தை ஒன்றின் உடல் பிணவறைக்குக் கொண்டு வரப்படுகிறது. பெற்றோர் தேம்பி அழும் சூழலில், அக்குழந்தையின் முகத் தோற்றத்தை ஆசிரியர் பின்வருமாறு பதிவு செய்கிறார் :

“குழந்தைகள் பிரேதத்தை எப்போது பார்த்தாலும் அது பிணமாகத் தெரிவதில்லை. குழந்தையாகத்தான் தெரிகிறது. அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் நிம்மதியான முகம் தான் இறந்தாலும் கூட குழந்தைகளுக்கு வாய்க்கிறது.” (பக். 21)

ஏற்கெனவே உடலில் காயங்களோடு கிடக்கும் அந்தப் பிஞ்சு உடலைக் கண்டு கலங்கும் திருப்பால், தன் கையால் அதை வெட்ட மனமில்லாமல் தன் உதவியாளனிடம், “டேய் சகாயம்... அந்தக் கொழந்தய நா அட்டன் பண்ணல... நீயே பாத்துக்கோ..சும்மா ஒரு கீறு கீறி ‘விஸ்ரா’ மட்டும் எடுத்துட்டு கட்டிற்ரா” (பக். 30) எனக் கூறி விலகி நிற்கிறான். ஒரு குழந்தையைச் சீரழித்துக் கொன்ற மனித மிருகத்தின் கொடூரத்திற்கு முன்னால், இறந்துபோன பிஞ்சு உடலைக் கீறுவதற்குக் கூட திருப்பாலின் கத்தி அஞ்சுகிறது; அவனது மனம் கலங்குகிறது.

இறந்த குழந்தையின் தந்தை கேட்கும் கேள்வியும், அதற்குத் திருப்பால் அடையும் மன உணர்வும் குறுநாவலில் பின்வருமாறு சித்தரிக்கப்படுகிறது :

“என் கொழந்த... எப்பிடிண்ணே இருக்கு...? என்று கேட்டதும் திருப்பால் என்ன சொல்வதெனத் தெரியாமல் அவனைப் பார்த்தார். அவனளவில் அப்பிள்ளை இறந்துபோகவில்லை. ஒரு வனத்தில் இவனைக் கண்ணைக் கட்டிவிட்டு, அந்தத் தேவதை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த வனமெங்கும் அவ்விருவரின் விளையாட்டு, அவன் வாழ்வின் முச்சூடும் நிகழும் ஒரு துன்பியல் சித்திரமென திருப்பால் நினைத்துக்கொண்டார். ” (பக். 26)

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட விளிம்புநிலைச் சூழலில் வாழ்ந்தாலும், பிறரின் துயரத்தைக் கண்டு உருகும் திருப்பாலின் இந்த மனிதநேயத்தை,

“நான்

அம்மாவிடம் கேட்கிறேன்

என்னை ஏன்

தலித்தாக பெற்றீர்கள்?

அம்மா சொல்கிறாள்,

உலகத்தை நேசிக்க உன்னால்தான் முடியும் மகளே.”

என்ற கவிஞர் சுகிர்தராணியின் கவிதை வரிகள் மிக ஆழமாக மெய்ப்பிக்கின்றன. எத்தகைய கொடூரமான சூழலிலும் வற்றாத பேரன்பையும் நேசத்தையும் சுமந்திருக்கும் விளிம்புநிலை மனசாட்சியின் சாட்சியமாகவே திருப்பாலின் பாத்திரம் மிளிர்கிறது.

அதிகார அத்துமீறலும் திருப்பாலின் சுயமரியாதையும் :

குழந்தையின் உடலைப் பரிசோதிக்கும் வேளையில், பிணவறைச்சூழல் பரபரப்பாகிறது. மற்றொரு பிணம் கொண்டுவரப்படுகிறது. அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் சூழ்ந்துகொண்டு, தங்களுக்குச் சாதகமாக உடனே பிரேதப் பரிசோதனையை முடிக்கும்படி திருப்பாலை வற்புறுத்துகின்றனர். அதிகாரத்தின் கட்டளைக்கு அஞ்சாத திருப்பால்,

“நம்ம போயி நின்னா... வெளிய தேவுடு காக்க வைக்கல... நிக்க சொல்லு... இங்க நான் சொல்றதுதான்” (பக். 32) எனத் தன் சுயமரியாதையை வெளிப்படுத்துகிறார். மதுவுக்கும் உணவிற்கும் ஆசைக் காட்டிப் பேரம் பேசும் அரசியல்வாதியின் அதிகார அத்துமீறலை மறுத்துத் திருப்பால் பேசுவதுடன், “பொணம் அறுக்குற நாயி நீ ” என இழிவுபடுத்திய அரசியல்வாதியை நோக்கி,

“அவன வுடு சார்... இது பொணம் அறுக்குற பிளேடு... என்ன அடிச்சன்னு கேசு குடுத்தன்னு வையி, பத்து வருசம் உள்ள இருக்கனும் நீ... பொணத்த அறுக்குறவன்ன... நீதான் உயிரோட இருக்கறவனெல்லாம் அறுப்பல்ல... ஒழுங்கு மரியாதயா ஓரமா போய் நில்லுங்க... கொழந்தய முடிச்சுட்டுதான்... உங்கள்து” (பக். 33) என நிமிர்ந்து நின்று பதிலடி கொடுக்கிறார். அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் பிணவறை எனும் தன் எல்லைக்குள் சுயமரியாதையை நிலைநாட்டும் திருப்பாலின் இந்த நிமிர்வை,

“உன் அதிகாரத்தின் நிழல்கூட அண்ட முடியாத என் இடத்துலே நின்னுகிட்டு உனக்கு இத்தனை ஆணவமா? உன் செருப்பிலிருந்து தலைப்பாகை வரை எதுக்கும் இங்கே மரியாதைக் கிடையாது. ஏன்னா இது என் இராச்சியம்” என்ற மக்கள் கவிஞர் இன்குலாப்பின் ‘தடி’ நாடக வசனம் மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.

பிணமும் பாலியல் இச்சையும் :

“கேமரா கிறுக்கி போட்ட துண்டு சீட்டா...

பிடித்துக் காட்டிய பெண்மை விளம்பரமா?”

என்னும் கவிஞர் இளம்பிறையின் வரிகளுக்கு இணங்க, திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பிரபல நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பிணவறைக்குக் கொண்டுவரப்படுகிறது. வழக்கமாகப் பிணவறைப் பக்கம் எட்டிப் பார்க்காத உயர் மருத்துவர்கள் எல்லாம், அன்று அச்சூழலில் நிலவும் துர்நாற்றத்தையும் குமட்டலையும் பொருட்படுத்தாமல் பிணவறைக்குள் நுழைகின்றனர். இறந்துபோன நடிகையின் உடலைக் கூராய்வு செய்ய என்ற போர்வையில், மருத்துவர்கள் காட்டும் வக்கிரமான பாலியல் இச்சையைக் கண்டு திருப்பால் மனவெறுப்பும் எரிச்சலும் அடைகிறார். இக்கள நிலையை ஆசிரியர் பாக்கியம் சங்கர் பின்வருமாறு படம்பிடிக்கிறார்:

“பிணந்தின்னும் கழுகைப் போலவே அம்மருத்துவரின் கண்கள், நடிகையின் சதைப்பற்றுகளைத் தின்றுகொண்டிருந்தது. நிர்வாணத்தை விழுங்கி முடித்த மருத்துவர் வெளியே வந்தார். திருப்பால் உள்ளே சென்று காடாத்துணியால் நடிகையின் உடலை மூடினார். அவரது முகத்தைப் பார்த்தார். எவ்விதச் சலனமுமின்றி பேரமைதியின் ரூபமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.” (பக். 41).

மருத்துவர்களின் இந்த அருவருப்பான செயலுக்கு ஈடாகத் திருப்பாலுக்கும் சகாயத்திற்கும் கூடுதலாக பிளீச்சிங் பவுடரும் கையுறைகளும் வாங்கித் தருவதாகக் கூறிவிட்டுச் செல்கின்றனர். “காம அலைச்சலானது வன்புணர்வு, பாலியல் தொந்தரவு என எல்லா விதமான வக்கிர வேலைகளுக்கும் தூண்டும். அலைச்சல் அவர்களை சுயமரியாதை, கவுரவம் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும்.” என்னும் எழுத்தாளர் லதாவின் கூற்று, அதிகார வர்க்க மருத்துவர்களின் இத்தகைய கீழ்த்தரமான மனநிலைக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

இறந்த நடிகையின் உடலைக் கூராய்வு செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், பிணவறைப் பணியாளர்களின் இயல்பான உளவியலும் இங்கு பதிவு செய்யப்படுகிறது. சமூகத்திற்கு அந்த உடல் ஒரு பிரபலம், மகா நடிகை, பலரின் காமக் கனவுகளின் தலைவியாக இருக்கலாம்; ஆனால், பிணவறையில் பணியாற்றும் திருப்பாலுக்கும் சகாயத்திற்கும் அது வெறும் உயிரற்ற உடல் மட்டுமே. இத்தகைய கணமான சூழலிலும் சகாயத்தின் பேச்சு நகைச்சுவையோடு கூடிய எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது:

“ஹிஸ்ட்ரில் எழுதிக்கோ இப்பேர்ப்பட்ட நடிகைக்குக் கடைசி மேக்கப்மேன் இந்த சகாயந்தான்னு” (பக்.43) இப்பகுதியின் வழியாக, பிணவறைக்குள்ளும் ஊடுருவியிருக்கும் அதிகார வர்க்கத்தின் காம அலைச்சலையும், அதைத் தாண்டி அங்கு இயங்கும் எதார்த்த வாழ்வியலையும் பாக்கியம் சங்கர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறார்.

பிணவறைச் சூழலும் மேலைநாட்டு ஒப்பீடும் :

உடல்களைக் கூராய்வு செய்து கொண்டிருக்கும் சகாயத்திடமும் திருப்பாலிடமும் குறிப்புகளை எடுத்துக்கொண்டிருக்கும் மருத்துவர் பாஸ்கர், மேலைநாடுகளின் பிணவறை அமைப்பையும் இங்கு நிலவும் அவலத்தையும் பின்வருமாறு ஒப்பீட்டுப் பேசுகிறார் :

“சகாயம்... வெளிநாட்டுலலாம் மார்ச்சுவரி ஃபைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி நீட்டா சுத்தமா இருக்கும். எல்லா சேஃப்டியும் ப்ராப்பரா இருக்கும்... இங்கமட்டுந்தான் அடிப்படை வசதிக்கே போராட வேண்டி இருக்கே...” (பக். 42) இதைக் கேட்கும் திருப்பால், அத்தொழிலுக்கான சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டால் தன் தலைமுறையும் இத்தொழிலை ஏற்கும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துகிறான் :

“அந்த மாதிரி எல்லா சேப்டியும் குத்து... இன்பெக்சனும் இல்லாம இருந்தா... எம்புள்ள காந்திய, ராஜா மாறி வேலைக்கு இட்டுக்கலாம்... காந்தியும் பொணத்த அறுக்குறவன்தான்னு வெளிய கவுறதயா சொல்லிக்கலாம். இங்க இன்னானா ஒரு சோப்புக்கே வக்கில்ல...” (பக். 42)

பிணவறைப் பணி என்றாலே சமூகம் அருவருப்போடும் தீண்டாமையோடும் ஒதுக்கும் சூழலில், நவீனத் தொழில்நுட்பமும் சுகாதாரமும் அறிமுகப்படுத்தப்பட்டால் இத்தொழிலும் சமூக மதிப்பைப் பெறும் என்ற திருப்பாலின் கூற்று, அவனது ஏமாற்றத்தையும் எதிர்காலப் பாதுகாப்பையும் ஒருசேர உணர்த்துகிறது. அரசும் அதிகார வர்க்கமும் பிணவறைப் பணியாளர்களின் சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதையும், கட்டமைப்பு மாற்றங்கள் வழியே அத்தொழிலாளர்களின் மனித மாண்பு பேணப்பட வேண்டும் என்பதையும் ஆசிரியர் பாக்கியம் சங்கர் இதன்மூலம் வலியுறுத்துகிறார்.

முடிவுரை :

இவ்வாய்வானது, 'திருப்பால்' குறுநாவலின் வழியே தலைமுறை தலைமுறையாகப் பிணங்களை அறுக்க நிர்ப்பந்திக்கும் கொடூரமான குலத்தொழில் சுமையையும், அதிலிருந்து தன் மகனை விடுவிக்கத் துடிக்கும் திருப்பாலின் அகப்போராட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், பாலியல் கொடுமையால் பலியானப் பிஞ்சு உடலைக் கண்டு உருகும் திருப்பாலின் வற்றாத மனிதநேயத்தையும், அரசியல் அதிகார அத்துமீறல்களுக்குப் பணியாத அவனது சுயமரியாதையையும் ஆய்வுத் தளத்தில் நிறுவுகிறது. மேலும், பிணவறைக்குள்ளும் ஊடுருவியிருக்கும் அதிகார வர்க்கத்தின் பாலியல் இச்சைகளைச் சுட்டிக்காட்டி, மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு நிலவும் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற சூழலையும் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

இன்றைய நவீன சூழலில் பழைய மரபுகளை மாற்றி, மேலைநாடுகளைப் போலப் பிணவறைகளிலும் நவீன இயந்திரங்கள் மற்றும் சுகாதாரமான கட்டமைப்புகள் கொண்டுவரப்பட்டு முழுமையாகப் புனரமைக்கப்பட வேண்டும். இத்தகைய தொழில்நுட்ப மாற்றங்களோடு, மனிதனை மனிதன் சக மனிதனாக மதிக்கும் மனிதநேயப் பார்வையே விளிம்புநிலை மக்களின் தலைமுறைத் துயரைத் தீர்க்கும் என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது.

துணைநூல் பட்டியல் :

முதன்மைச் சான்று :

  • பாக்கியம் சங்கர், திருப்பால் (குறுநாவல்), இறைவி பதிப்பகம், திருவண்ணாமலை, 2025.

துணைமைச் சான்றுகள் :

  • இளம்பிறை, நீ எழுத மறுக்கும் எனதழகு, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, 2018.
  • இன்குலாப், இன்குலாப் நாடகங்கள், அன்னம்-அகரம் பதிப்பகம், தஞ்சாவூர், 2016.
  • சுகிர்தராணி, நீர் வளர் ஆம்பல், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2022.
  • திருஞானசம்பந்தம் (உ.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம் (மூலமும் உரையும்), கதிர் பதிப்பகம், திருவையாறு, 2020.
  • லதா, கழிவறை இருக்கை, நோராப் இம்ப்ரிண்ட்ஸ், சென்னை, 2020.