Article No : NPIJT050926
தலைப்பு : மடியின்மை வழி வள்ளுவர் தரும் வாழ்வியல்
ஆய்வாளர் : முனைவர் மு.ஜாபர் சாதிக் அலி, உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை- 600014.
முன்னுரை :
வான்புகழ் வள்ளுவம் தமிழுக்குக் கிடைத்த அரிய இலக்கியக் கொடை. உலகில் உள்ள மொழிகளில் சில மொழிகள் மட்டுமே படைப்புகளால் பெயர்புகழ் பெற்றவை.புனித பைபிள், எபிரேய மொழியில் தோன்றியதாலும் புனித குர்ஆன், அரபு மொழியில் இறங்கியதாலும் அம்மொழிகள் பெயர்ப்பெற்றனபோல் வள்ளுவர் இயற்றிய திருக்குறளால் புகழ் பெற்றது நம் தாய்த்தமிழ்மொழி. குறளில் இல்லாதன இல்லை, வள்ளுவர் சொல்லாதன இல்லை என்பதால் அது உலகப்பொதுமறை ஆயிற்று. அத்தகைய வள்ளுவர் மனிதன் புனிதனாய்ப் புகழ்பெறுவதற்குச் சில பொன்மொழிகளை அதிகாரங்களாக்கித் தருகிறார். அவ்வாறு அமைந்த ஒன்றே மடியின்மை என்ற அதிகாரம்.
அதிகாரம் வழங்கும் வள்ளுவர் :
வான்புகழ் மறைதந்த வள்ளுவர் உலகோர் அனைவருக்குமான அறிவுரைகளைத் தந்தாலும் அவற்றைக் கருதி பின்பற்றவேண்டியவர்கள் குழந்தைகளும், இளைஞர்களுமே ஆவர். வள்ளுவருடைய குறள்கள் ஒவ்வொன்றும் அனுபவப் பகிர்வுகள். அவர் கண்ட, கேட்ட, உற்ற அனைத்தையும் நமக்குக் குறள்களாக்கித் தருகிறார். அனுபவம் பெற்ற முதியோருக்குக் கூறுவதைவிட இளையோருக்குக் கூறுவதே ஏற்றதாக இருக்கும் என்பதால் அதற்கு ‘அதிகாரம்’ என்று பெயர் வைக்கிறார். வள்ளுவரின் அதிகாரங்களைப் பின்பற்றினால் அதிகாரமாய் வாழலாம், அதிகாரம் செலுத்தலாம், அதிகாரங்கள் வழங்கலாம், அதிகாரங்கள் பெறலாம், அடிமைத்தன்மையிலிருந்து விடுபடலாம் என்பதனால் பிரிவுகளுக்கான இப்பெயர், பொருத்தமாக இருக்கிறது. மூத்தோரை அதிகாரம் செய்வது அதிகார மீறல் என்பதனால் இந்தக் குறள்கள் அனைத்தும் இளையோருக்கே வழங்கினார் என்பது திண்ணம்.
மடி-வாழ்வியல் சிக்கல்கள் :
இன்றைய வாழ்வில் உலகோர் அனைவருக்குமான பொதுமைப்பண்பாக ‘மடி’ எனும் சோம்பல் பிணி பீடித்திருக்கிறது. நவீன வசதிகள் நிறைந்த இன்றைய உலகில் குழந்தைகள், இளையோர், இளைஞர்கள், முதியவர்கள் வரை சோம்பல் அவர்களில் செயல்களில் குடிகொண்டுள்ளது. சோர்வு, சோம்பல், மடி குறித்து பல இடங்களில் கூறும் வள்ளுவர் தனியாக ‘மடியின்மை’ என்று தனி அதிகாரத்தைத் தருகிறார். ‘மடி’ என்று அதனைக் குறிப்பிடாமல் ‘மடியின்மை’ என்று நேர்மறைச் சிந்தனையுடன் குறிப்பிடுகிறார். வள்ளுவர் வாழ்வியல் பெட்டகமாகத் தனது நூலினைப் படைத்தளித்துள்ளார். வாழ்வியல் சிக்கல்களையும் கூறி அதற்கான காரணங்களையும் அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் தீர்வுகளாகத் தருகிறார். இதனை ஆராய்ந்த தமிழறிவியலறிஞர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள், ‘அரசியல்மைப்புகள் மாறலாம். ஆட்சி முறைகள் மாறலாம், பொருளாதாரத் தத்துவங்கள் மாறலாம், சமுதாயப் பழக்கவழக்கங்கள் மாறலாம், அம்மாற்றங்கள் காலத்தாலும் நிகழலாம், இடத்தாலும் நிகழலாம், மேலெழுந்தவாரியான இத்தோற்றங்களைக் கடந்து மனித சமுதாயத்தின் வாழ்வில் அதன் ஆழத்தில் நிலைத்து நிற்கும் அடிப்படைகள் சில உள்ளன. வள்ளுவர் இயன்ற அளவில் இந்த நிலையில் நின்று வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்திருக்கிறார். குறளின் இந்தக் கூறுபாடு, அது காலங்கடந்து இடங்கடந்து நிற்கத் துணைபுரிகிறது.’ (1) என்று கூறுவது குறளின் தனித்தன்மையை விளம்புவதாக அமைகிறது.
பொருட்பாலில் மடியின்மையை 61 வது அதிகாரமாக வைத்துப் பேசும் வள்ளுவர் அதற்கு முன்பு ஊக்கமுடைமை அதிகாரத்தையும் பின்னால் ஆள்வினையுடைமை அதிகாரத்தையும் வைக்கிறார். மனதில் தோன்றும் ஊக்கத்தைச் சோம்பலைக் கடந்து நிறைவேற்றினால் ஆள்வினையுடைய மனிதராகப் பரிமளிக்கலாம் என்பதைச் சுட்டவே அதிகார வைப்புமுறையை இவ்வாறாக அமைக்கிறார் வள்ளுவ ஞானாசான்.
மடி - குடியைக் கெடுக்கும் மாசு :
முதற்குறளிலே சோம்பலென்னும் மாசு ஒருவனது குடியெனும் அணையா விளக்கின் மீது படிந்து படிந்து அழிக்கும் என்கிறார் வள்ளுவர்.
“ குடியென்னும் குன்றா விளக்கம்;மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும் “ (2)
இக்குறளில் குடும்பத்தினை ஒளியாகக் காட்டுபவர் அதனை அணைக்கும் பெருங்காற்றினைக் குறிப்பிடாமல், சோம்பலானது விளக்கின்மேல் படியும் தூசு என்கிறார். விளக்கின்மேல் ‘தூசிபடிதல்’, தூசிகள் தூங்குவதைப்போல இருப்பதாகக் காட்டுவது நல்ல கற்பனை. அதே பொருள்பட பின்வரும் ஐந்து குறள்களிலும் குடும்பங்கள் அழிவதற்கு முயற்சியின்மை, சோம்பல் காரணமாக அமைவதைக் குறிப்பிடுகிறார். இதிலிருந்து வள்ளுவர் காலத்திலேயே சோம்பலினால் பல குடும்பங்கள் வாழ்ந்துகெட்டு அழிந்திருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.
“ குடிமடிந்து குற்றம் பெருகும் “ (குறள் 604)
“ மடிமை - அடிமை புகுத்திவிடும் “ (குறள் 608)
“ பேதையின் குடி அவனுக்கு முன்னால் கெடும் “ (603)
கெடுநீரார் காமக் கலன் :
சோம்பல் என்பது தனியாக வருவதில்லை, மேலும் மூன்று குணங்களையும் சேர்த்துவரின் இறந்தபின் தூக்கிச்செல்லும் வாகனத்தில் நாமாகபோய் ஏறிக்கொள்வதுபோல, என்று இன்றுள்ள பேச்சுவழக்கு போல இக்குறளைப் படைக்கிறார் குறளாசான்.
‘நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்’ (3)
காலதாமதம் செய்தல், மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் வாழும் வாழ்க்கையில் கெடுதல் நடக்கவேண்டும் என்று எண்ணுபவர்களின் விரும்பி செல்கின்ற மரக்கலங்கள் என்று சோம்பலின் நிலைக்களன்களைக் குறிப்பிடுகிறார். மனிதர்களுக்கு இந்த நான்குவகை குணங்களில் ஏதாவது ஒன்று நிச்சயமாக இருக்கும். நான்கு குணங்களும் ஒன்றாக அமையும்போது மடியின் மடியில் விழுகின்றான் என்பது உண்மை.
ஆள்வினையுடைமை என்னும் அடுத்த அதிகாரத்திலும் சோம்பல் குறித்து ஒரு குறளினை வைக்கிறார்.
“மடியுளாள் மாமுகடி என்ப;மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்” (4)
மடிமை நீக்கத் தீர்வு :
சோம்பலை விட்டுவிட்டவனின் குடி உயரும் என்றும் சோம்பல் நீங்கிய மன்னவன், இந்த உலகம் முழுவதையும் அடையக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி இறுதியாக இரு குறள்களில் கூறுகிறார். மடியின்மைக்கு விளக்கம் தருகின்ற நோக்கில் மடியின்மை அதிகாரம் முழுமையாக அமைந்திருந்தாலும் சோம்பலுக்கான தீர்வுகளை நூல் முழுமையுமே ஆங்காங்கே வைத்துள்ளார் வள்ளுவர். குறிப்பாக அடுத்த அதிகாரமான ஆள்வினையுடைமையில் சோம்பலைப் போக்குவதற்கான காரணிகளையும், சோம்பலைக் களைந்தால் விளையும் நன்மைகளையும் குறிப்பிடுகிறார். அதற்குச் சான்றாவன,
“ சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகழ்வெல்லல் யார்க்கும் அரிது” (குறள் 647)
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்” (குறள் 611)
“ ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” (குறள் 620)
“ தூங்குக தூங்கி செயற்பால’தூங்கற்க
தூங்காத செய்யும் வினை” (குறள் 672)
ஆகிய குறள்கள் சோம்பலைக் களைந்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளைச் சொல்லும் குறள்களாக அமைகின்றன. வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில் பெண்ணின் இயல்பினைக் கூறி, சோர்வில்லாத பெண் அவளுடைய குடும்பத்திற்கு அச்சாணி போன்றவள் என்பதை மொழிகிறார் வள்ளுவர்.
“ தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் “(குறள் 56)
முடிவுரை :
- வள்ளுவர் மனித வாழ்வியலை முழுவதும் அனுபவப்பட்டு அறிந்து தெளிந்த பேராசான். வள்ளுவத்தை பட்டறிவுள்ள மூத்தோருக்குச் சொல்லாமல் பட்டறிவை எதிர்நோக்கிய இளையோருக்குச் சொல்ல எத்தனித்து ‘அதிகாரம்’ என்று பெயர்வைத்துள்ளமை சிறப்பிற்குரியது.
- இன்றைய கால இளைஞர்களுக்கு சோம்பல் மிகப்பெரிய பிணியாகவுள்ளது. அதனால் மடிமை என்று குறிப்பிடாமல் ‘மடியின்மை’ என்று நேர்மறைச் சிந்தனையில் அதிகாரத் தலைப்பிடுகிறார்.
- சோம்பலை விளக்க நான்கு குறட்பாக்களைத் தருகிறார். சோம்பல் விரும்பி உறையும் நான்கு நிலைக்கலன்களைக் குறிப்பிடுகிறார்.
- சோம்பலுக்கான தீர்வுகளை அடுத்தடுத்த அதிகாரங்களில் வைத்து நமக்குச் சிக்கல்களைத் தந்து தெளிகிறார்.
- ஊக்கமுடைமைக்கும் ஆள்வினையுடைமைக்கும் இடையூறாக சோம்பல் இடைநிற்கிறது சோம்பலே என்பதால் மடியின்மை என்ற அதிகாரத்தை அமைத்திருக்கிறார்.
- சொல்லின்கண் சோர்வு,சோர்விலாள் பெண்,சோர்விலன் அஞ்சான் ஆகிய சொற்களை நூலின் தேவைப்படும் இடங்களில் குறிப்பிட்டு இன்றைய வாழ்வியலில் பெரிய இடையூறாக இருக்கும் சோம்பலுக்குப் பல்வேறு வகையான தீர்வுகளைத் தருகிறார் வாழ்வியல் ஞானி வள்ளுவப் பெருந்தகை.
- டாக்டர் வா.செ.குழந்தைசாமி,வாழும் வள்ளுவம்,ப.41
- திருக்குறள் 601
- மேலது - 605
- மேலது - 617
மேற்கோள்கள் :

0 Comments